

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் கரிகால் சோழன் நினைவு மணிமண்டபத்தை சென்னையிலிருந்து விடியோ கான்பரன்சிங் மூலமாக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை திறந்து வைத்தார்.
இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சோழ நாட்டை ஆண்ட தலைசிறந்த தமிழ் மன்னர்களில், அழியாத சிறப்பு பெற்ற மன்னர் கரிகால் சோழன். திருச்சி மாவட்டத்தில் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழனால் கட்டப்பட்டு இன்றளவும் மக்களுக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கும் இந்த கல்லணை ஒரு பொறியியல் அற்புதமாகும்.
கல்லணை கட்டப்பட்டதன் மூலம் கடலில் வீணாகும் காவிரி நீரை பாசனத்துக்காக கல்வாய்களின் வழியாக வடிநிலப் பகுதிகளுக்கு திருப்பி விட முடிந்தது. அதன் கட்டமைப்பு இன்றளவும் உறுதியாக மிகவும் நல்ல நிலையில் உள்ளது.
கரிகால் சோழனுக்குப் பிறகு, சர் ஆர்தர் காட்டன் என்பவர் கல்லணையில் ரெகுலேட்டர் அமைப்புகளை ஏற்படுத்தியதன் விளைவாக, காவிரி வடிநிலப் பகுதி தமிழகத்தின் நெற்களஞ்சியமாக மாறியது.
கரிகால் சோழனின் பெருமையை பறைசாற்றும் வகையில், ஒரு நினைவு மணிமண்டபம் நிறுவப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் உள்ளாற்றின் வலது கரையில் அமைந்துள்ள கொள்ளிடத்தில் அனைவரும் கண்டுகளிக்கக் கூடிய வகையில், ரூ.2.10 கோடியில் 380 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ள கரிகால் சோழன் நினைவு மண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே விடியோ கான்பரன்சிங் முறை மூலம் திறந்து வைத்தார்.
இந்த மணிமண்டபம் எழில்மிகு தோற்றத்தில் யானையின் மீது அமர்ந்திருக்கும் கரிகால் சோழனின் வெண்கலச் சிலையுடன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.