
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான குழப்பத்துக்கு திருச்சியில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டில் கருணாநிதி முடிவு காண்பாரா என்பதே திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆனால், கூட்டணி தொடர்பாக தெளிவு பெறுவதற்கு வாய்ப்பு குறைவு என்றே கட்சியின் மேல்நிலைத் தலைவர்கள் கூறுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக விவாதிப்பதற்காக திமுகவின் பொதுக்குழு கடந்த நவம்பர் மாதம் கூடியது. அந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசும்போது, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆனாலும், திமுகவும், காங்கிரஸýம் இணைந்து செயல்படுவதற்கான பல அறிகுறிகள் தொடர்ந்து வந்தன.
மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா ஆகியோர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துச் சென்றனர்.
இந்தச் சந்திப்பு காங்கிரஸ், திமுக கூட்டணியை மீண்டும் மலரச் செய்வதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸýடன் கூட்டணி அமைப்பதில் திமுகவின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களும், கட்சியின் மேல்நிலை தலைவர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி போன்றோரும் ஆர்வத்துடன் உள்ளனராம்.
எனினும், காங்கிரஸýடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்பதில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உறுதியுடன் உள்ளாராம். இதைக் கருத்தில் கொண்டே காங்கிரஸýடன் கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
காங்கிரஸýடன் கூட்டணி அமைப்பதில் கட்சியில் இருவேறு கருத்துகள் இருப்பதால், தேர்தல் தேதி நெருக்கத்தில் இதுதொடர்பான முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று கருணாநிதி கணக்குப் போடுகிறாராம்.
இதன் காரணமாகவே, திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டுப் பந்தலை கருணாநிதி வெள்ளிக்கிழமை (பிப். 14) பார்வையிட்டபோது, வட இந்திய தலைவர்கள் அனைவரையும் நண்பர் என்ற முறையிலேயே பேசினேன். கூட்டணி தொடர்பாகப் பேசவில்லை என்று கருணாநிதி கூறினார்.
குழப்பமா? குழப்புகிறார்களா?: காங்கிரஸýடன் கூட்டணி வேண்டாம் எனக் கருதும் அதேவேளையில், தேமுதிக மட்டும் கூட்டணிக்கு வந்துவிட்டால் போதும் என்று திமுக விரும்புகிறது. ஆனால், விஜயகாந்த் பிடி கொடுக்காமலேயே இருந்து வருகிறார். இதனால், கூட்டணி தொடர்பான தெளிவான முடிவை எடுக்க முடியாத குழப்பத்தில் கருணாநிதி இருந்து வருகிறார்.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திப்போம் என்று கருணாநிதி கூறினாலும், அந்தக் கட்சிகளைக் கொண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று திமுக கருதுகிறது.
இதன் காரணமாகவே, தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை என்ற அளவில் கருணாநிதி சில கட்டங்களில் பேசினாலும், உடனுக்குடன் தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கவும் செய்கிறார்.
அழகிரி தொடர்பான பிரச்னையின்போது, பிரேமலதா விஜயகாந்த் கூறிய கருத்துக்கு உடனடியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், பிரேமலதா அளவுக்கு எனக்கு நாடகம் தெரியாது என்று கருணாநிதி கூறினார். ஆனால், தற்போது மீண்டும் தேமுதிகவுக்கு திமுகவின் மாநாட்டுப் பந்தலில் இருந்தே அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே, தேமுதிக அதன் முடிவைக் கூறாத நிலையில், கூட்டணி தொடர்பான அறிவிப்பை மாநாட்டில் கருணாநிதி தெளிவுபடுத்த வாய்ப்பு இல்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்துவிடுமோ என்ற சந்தேகம் திமுகவுக்கு இருந்து வருகிறது. அப்படி அமைத்துவிட்டால் திமுக, தேமுதிக போன்றவை ஒருங்கிணைந்தாலும் தேர்தலில் வெற்றிபெறுவது எளிதான காரியம் இல்லை என்று திமுக கருதுகிறது.
இதனால் அதிமுகவை எந்த முடிவும் எடுக்கவிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே திமுக, காங்கிரஸ், தேமுதிக ஆகியவை இணைந்து தமிழக அரசியலைக் குழப்புவதாகவும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நற்செய்தி உண்டு!
திமுக மாநாடு தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெறுமா என்றும் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் தினமணி செய்தியாளர் கேட்டதற்கு, அவர் கூறியது:
திமுக சட்டதிட்டங்களின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திமுகவின் மாநில மாநாட்டை நடத்த வேண்டும்.
அந்த அடிப்படையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. தொண்டர்களுக்கான செய்தியை இந்த மாநாட்டில் கருணாநிதி வழங்குவார். இது தேர்தல் சமயம். தற்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். புது கட்சிகள் கூட்டணியில் இடம்பெறுமா என்பதையெல்லாம் கருணாநிதி அறிவிப்பார். மாநாட்டில் சில முக்கிய செய்திகளை நிச்சயம் கருணாநிதி வெளியிடுவார் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.