பென்னிகுயிக் பெயரில் தேனியில் புதிய பஸ் நிலையம்

தேனி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பென்னிகுயிக் பஸ் நிலையம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
பென்னிகுயிக் பெயரில் தேனியில் புதிய பஸ் நிலையம்

தேனி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பென்னிகுயிக் பஸ் நிலையம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

கொடநாடு முகாம் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய திட்டங்களை காணொலி காட்சிமுறையில் அவர் தொடக்கி வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியின் புதிய பஸ் நிலையம் 7.35 ஏக்கர் பரப்பில் ரூ.15.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுயிக் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தை கொடநாடு முகாம் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் திறந்து வைத்தார்.

புதிய குடிநீர் திட்டங்கள்: திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.36.66 கோடியிலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் ரூ.3.20 கோடியிலும் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள், காஞ்சிபுரம் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டம் ஆகியவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-புதுப்பாளையம் ஒன்றியங்களில் ரூ.1.32 கோடியிலும், நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் ரூ.3.45 கோடியிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திப்புரம், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம், நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு நகராட்சி ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டங்களையும், 17 மாவட்டங்களில் உள்ள 22 பேரூராட்சிகளில் புதிய அலுவலகக் கட்டடங்களையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ரூ.17 லட்சத்தில் புதிய வணிக வளாகக் கட்டடம், காவிரிப்பட்டினம் மற்றும் குத்தாலம் பேரூராட்சிகளில் புதிய சமுதாயக் கூடங்கள், நான்கு மாவட்டங்களில் உள்ள 5 பேரூராட்சிகளில் பூங்கா மற்றும் இறைச்சிக் கூடங்கள், தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பேரூராட்சியில் புதிய பாலம் ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். சேலம் மாநகராட்சி, சிதம்பரம் நகராட்சி, ஓசூர் நகராட்சி ஆகியவற்றுக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள், ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் புதிய பஸ் நிலையம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கான குடியிருப்புகளுக்கும் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தை காணொலி காட்சிமுறையில் திறந்து வைக்கும்

முதல்வர் ஜெயலலிதா. உடன் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பணீந்திரரெட்டி, ஆணையாளர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் சி.விஜயராஜ்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com