

செங்கல்பட்டு - திருக்கழுகுன்றம் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே ரூ.18 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் முடிவடையாததால் பொதுமக்கள் வாகன நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.
செங்கல்பட்டு- திருக்கழுகுன்றம் சாலையில் உள்ள ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் செங்கல்பட்டு நகரில் ராட்டிணங்கிணறு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் என 2 கி.மீ. தூரத்துக்கு ஜி.எஸ்.டி. சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் நடந்துச் செல்லக் கூட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு வழியாக சுற்றுலா மையங்களான திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், சட்ராஸ் மற்றும் திருப்போரூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சுற்றுலா வாகனங்களின் நெரிசல் ஒருபுறம் உள்ளது.
மறுபுறம் திருக்கழுகுன்றம், வல்லம், நென்மேலி, கீரப்பாக்கம், மேலேரிப்பாக்கம், திருவடிசூலம், செம்பாக்கம், கேளம்பாக்கம், தாழம்பூர், திருப்போரூர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து லாரி, பஸ், வேன், ஆட்டோ போன்ற வாகன நெரிசலில் சிக்கி இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் பள்ளி, கல்லூரிச் செல்லும் மாணவர்களும், பணிக்குச் செல்வோரும், மருத்துவமனைக்குச் செல்வோரும் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
மேலும் அப்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் செங்கல்பட்டை கடந்துதான் செல்ல வேண்டும்.
இதுமட்டும் அல்லாமல் ரயில்வே கேட் அடைக்கப்படும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் இடையே இரண்டு புறமும் 4 கி.மீ. தூரத்துக்கு நெரிசல் ஏற்படுவதும் சகஜமாகிவிட்ட நிலையில் செங்கல்பட்டில் உள்ள பல்வேறு அமைப்புகளும், அனைத்துக் கட்சியினரும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியதன் பயனாக 2010-ல் மேம்பாலப் பணிக்கான திட்டம் ரூ. 18 கோடியில் தொடங்கபட்டது. இம் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் முடிவடையவில்லை. மேம்பாலம் கட்டுமானப் பணி காரணமாக சரியான போக்குவரத்து இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
2012-ல் எம்.பி. விஸ்வநாதன், எம்.எல்.ஏ. அனகை முருகேசன் ஆகியோர் நெடுஞ்சாலைத் துறையிடம் கேட்டபோது அந்த இறுதி ஆண்டிலேயே முடித்து விடுவதாக கூறினர்.
மேலும் இந்த மேம்பால கட்டுமானம் முடியாதை அடுத்து நத்தை வேகத்தில் நடைபெறும் பணிகளைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க எம்.எல்.ஏ. ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க கூறினார். இதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இந்த சாலையை ஒருவழி பாதையாக மாற்றி அமைக்க போக்குவரத்து காவல்துறையினர் சரியான நடவடிக்கை மேற்கொள்ளாததாலும், ரயில்வே கேட் அருகில் போக்குவரத்து காவலர்கள் இல்லாததாலும் அனைத்து பஸ்கள், லாரிகள், வேன், கார், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இப்பகுதியில் தத்தளித்து அவல நிலை தொடர்கிறது.
எப்போது கட்டுமானப் பணி நிறைவடையும் என்ற கேள்விக்கு அதிகாரிகளின் மெüனமே பதிலாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஒருவரும் பணி நடைபெறும் இடத்தில் இல்லாததுதான் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற காரணம் என்கிறார்கள்.
இது குறித்து செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறை மேம்பாலத் திட்ட அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, "பல்லாவரம் திட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பணி, திறக்கப்பட்டு ஓராண்டே ஆகியுள்ள செங்கல்பட்டு அலுவலகத்தின்கீழ் வருகிறது.
அவர்கள் 2010-2011-ல் இந்தப் பணியை முடித்திருக்க வேண்டும். தாமதமானதால் தற்போது கட்டுமானப் பொருள்களின் விலைகள் ஏறியுள்ளதால் விரைந்து முடிக்க முடியவில்லை என காரணம் கூறுகின்றனர் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.