வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குற்றாலத்தில் இன்னும் சில நாள்களில் சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி என அருவி நகரத்தில் ஆனந்தக் குளியல்போட சுற்றுலாப் பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பழைய குற்றாலத்தில் அருவியின் முன்புறம் மிகப்பெரிய அளவிலான தொட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதால் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் அங்கு உற்சாகத்துடன் குளித்து மகிழ்வார்கள்.
எனவே, பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை மகிழவைக்க பழைய குற்றாலத்துக்குச் செல்வதையே அதிகம் விரும்புவர். இதனால் சீசன் காலங்களில் பழைய குற்றாலத்திலும் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
இந்நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படாதது சுற்றுலாப் பயணிகளை முகம்சுழிக்க வைக்கிறது.
சேறும் சகதியும்... அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து மிதமான அளவில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கிறது. நிகழாண்டில் கோடை விடுமுறையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
எனினும், இப்போது அருவியின் முன்புறம் முழுவதும் சேறும் சகதியும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, துப்புரவுப் பணியாளர்களைப் பயன்படுத்தி கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
சாலை மோசம்: பழைய குற்றாலத்தில் சீசன் காலங்களில் வாகனங்களின் நெரிசல் அதிக அளவில் ஏற்படும் என்பதால், அருவிப் பகுதிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு முன் தனியார் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும். அரசுப் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் மட்டும் அருவிப் பகுதி வரையிலும் செல்ல அனுமதிக்கப்படும். அங்கு வாகனங்கள் நிறுத்துமிடம் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது.
பேருந்து நிறுத்தம் பகுதியிலிருந்து வெளியே செல்லும் சாலை மிகவும் குறுகலான சாலையாகும். இச்சாலையோரம் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாகக் காணப்படுகிறது. இதனால் சீசன் காலங்களில் வாகன நெரிசல் ஏற்படும்போது அதிக அளவில் விபத்துகள் நிகழும் வாய்ப்புள்ளது. எனவே, சாலையின் ஓரங்களை பலப்படுத்தி, சீரமைக்க வேண்டும்.
குடிநீர், கழிப்பிட வசதி: பழைய குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ஏற்ற அளவில் கழிப்பிடங்கள் அமைக்கப்படவில்லை. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களிலும் தண்ணீர் வசதி இல்லை. கழிப்பறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளும் நேரடியாக அப்பகுதியிலேயே தேங்குகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை நிலவுகிறது.
மேலும், பழைய குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் குடிப்பதற்கு எங்குமே வசதிகள் செய்து தரப்படவில்லை. பெண்கள் உடைமாற்றும் அறைகள் பெயரளவுக்கே உள்ளன. இவற்றில் பெரும்பாலான அறைகளில் கதவுகள் இல்லை அல்லது கதவுகள் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
எனவே, அடிப்படை வசதிகளான சுகாதாரமான குடிநீர், உடைமாற்றும் அறை, வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி, கழிப்பறை வசதிகளை சீசன் தொடங்குவதற்கு முன்னர் நிறைவேற்றினால் இந்த சீசன் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிமையானதாக இருக்கும்.
பழைய குற்றாலம் அருவி முன், சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் சேறும், சகதியும் நிறைந்த பகுதி.
1.பழைய குற்றாலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் சாலை. 2. கதவுகள் இல்லாத உடைமாற்றும் அறைகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.