தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கி வரும் சாலைப் போக்குவரத்து நிறுவன பொறியியல் கல்லூரி, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாரிசுகள் மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள் பயில வசதியாக சாலைப் போக்குவரத்து நிறுவனம் (ஐ.ஆர்.டி.டி.) 1984-இல் தொடங்கப்பட்டது.
அப்போது பணியாற்றிய போக்குவரத்துத் தொழிலாளர்கள், தலா ரூ.5,000 செலுத்தியிருந்தனர். தொழிலாளர்களின் பங்குத்தொகை, அரசு ஒதுக்கிய தொகை என மொத்தம் ரூ.120 கோடி வைப்புத் தொகை வைக்கப்பட்டு அதில் கிடைக்கும் வட்டியில் இருந்து ஐ.ஆர்.டி.டி. நிறுவனத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி. மருத்துவக் கல்லூரி, சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி, தரமணி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பாலிடெக்னிக்குகளும் இயங்கி வருகின்றன.
தொடக்கத்தில், வட்டியில் இருந்து செலவு செய்யப்பட்டாலும், கடந்த 10 ஆண்டுகளாக 1996-க்குப் பின்னர் அசல் தொகையில் இருந்து பணத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 6-ஆவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டதால் இந் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது.
இதனால், ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியும் நிதி நெருக்கடியில் சிக்கிவிட்டது. இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக கல்லூரிப் பேராசிரியர்கள் பதவி உயர்வு இன்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இப் பிரச்னைக்குத் நிரந்தர தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஐ.ஆர்.டி.டி. ஆசிரியர்கள் சங்கத் தலைவர் கே.முருகன் கூறியது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தர வரிசைப் பட்டியலின்படி ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி மாநில அளவில் 11-ஆவது இடத்தில் உள்ளது. 324 ஏக்கரில் தரமான உள் கட்டமைப்பு வசதிகளுடன் இயங்கும் இக் கல்லூரியில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால், நிதி நெருக்கடி காரணமாக கல்லூரியில் பல்வேறு நிர்வாகப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகப் பரிந்துரைக்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள்.
அதேநேரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக 40-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. நாங்கள் பணியில் சேர்ந்தபோது அரசுப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பேராசிரியர்களுக்கும், இங்கு பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் ஊதிய விகிதத்தைப் பார்த்தால் ரூ.15,000 முதல் ரூ.22,000 வரை வித்தியாசம் உள்ளது. பதவி உயர்வு கேட்டால் கல்லூரி நிர்வாகம் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டுகிறது. இதுகுறித்து முதல்வரின் தனிப் பிரிவு, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்துள்ளோம். தரமான கல்வியை அளிக்கும் இக்கல்லூரி இப்போது சுய நிதிக் கல்லூரியாகவும் இன்றி, அரசுக் கல்லூரியாகவும் இன்றி திரிசங்கு நிலையில் உள்ளது. இக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றுவதில் சட்டச் சிக்கல் இருப்பதால் சுய நிதிக் கல்லூரியாகவோ, அரசு உதவி பெறும் கல்லூரியாகவோ மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி நுழைவாயில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.