மதுரை:சிறையில் கைதிகள் வாக்குவாதம்

மதுரை சிறையில் திங்கள்கிழமை நள்ளிரவில் கைகிதளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Updated on
1 min read

மதுரை சிறையில் திங்கள்கிழமை நள்ளிரவில் கைகிதளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 திண்டுக்கல் பகுதியில் பல மாதங்களுக்கு முன்பு பசுபதிபாண்டியன் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த சிலர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு திரும்பியபோது, மர்மக்கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்கியது.

 நாட்டு வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டவர்களைப் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த ராமர் மற்றும் ராஜா, கனி, ஜெகவீரன் ஆகியோர் தென்காசி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை  பகலில் சரணடைந்தனர்.

 சரணடைந்தவர்களை நீதிமன்ற உத்தரவின்படி மதுரை மத்திய சிறையில் அடைக்க போலீஸôர் அழைத்துவந்தனர். மதுரை மத்திய சிறை அலுவலர் ஜெயராமன் முன்னிலையில் விசாரணைக் கைதிகள் பிரிவுக்கு ராமர் உள்ளிட்டோரை அனுப்பிட உடல் பரிசோதனை நடந்துகொண்டிருந்தது.

  அப்போது, அனுப்பானடி பகுதியில் முத்துவிஜயன் கொலை வழக்கில் விசாரணைக் கைதியாக உள்ள வண்டியூரைச் சேர்ந்த முருகன் திடீரென சத்தமிட்டதாகத் தெரிகிறது. கடந்த 2011-ல் தேவர் ஜயந்திக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பியோர் மீது பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்டவர்களே, திண்டுக்கல் அருகே நிகழ்ந்த நாட்டுவெடிகுண்டு வீச்சில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறிய முருகன், திடீரென ராமர் தரப்பைப் பார்த்து எச்சரிப்பதுபோல பேசியதாகவும் கூறப்படுகிறது.அதற்கு ராமர் தரப்பினர் எதிர்த்து குரல் எழுப்பியுள்ளனர்.

  உடனே சிறை அலுவலர் ஜெயராமன் மற்றும் வார்டன்கள் முருகனை எச்சரித்து அனுப்பினர். மேலும், குழுவாகச் சேர்ந்து மோதிக்கொள்ளக்கூடாது என்பதற்காக ராமர் உள்ளிட்ட 4 பேரையும் தனித்தனி அறையில் அடைத்தனர். அதேபோல முருகன் உள்ளிட்ட 11 பேரையும் தனி அறையில் அடைத்தனர்.

 இதுகுறித்து மதுரை மத்திய சிறை அலுவலர் ஆர்.அறிவுடைநம்பியிடம் கேட்டபோது, புதிய கைதிகளைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென சத்தம் கேட்டுள்ளது. அதனடிப்படையில் சத்தமிட்ட கைதியை அப்புறப்படுத்திவிட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com