மாமல்லபுரத்தில் அருங்காட்சியகமாகும் நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ். வாக்லி

தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ். நீர்மூழ்கிக் கப்பல் மாமல்லபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது.
Updated on
1 min read

தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ். நீர்மூழ்கிக் கப்பல் மாமல்லபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது.

சென்னை துறைமுகத்தில் ஓராண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ். வாக்லி, கடற்படையில் 30 ஆண்டுகள் பணியாற்றி 2010-ல் ஓய்வுப் பெற்றபின் இந்நீர் மூழ்கிக் கப்பலை இந்திய கப்பல்படை, தமிழக அரசுக்கு வழங்கியது.

இக்கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு ஏப்ரல் 10-ல் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதையடுத்து இக் கப்பல் பராமரிப்புக்காக சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. பராமரிப்பு முடிவுபெற்ற நிலையில் இக்கப்பலை மாமல்லபுரத்தில் அருங்காட்சியகம் அமையவுள்ள பகுதிக்கு கொண்டு செல்ல தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது.

அதன்பேரில் இக்கப்பல் சென்னையிலிருந்து மாமல்லபுரத்துக்கு கொண்டு வரப்படுகிறது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் இப்பயணமே அக்கப்பலின் இறுதிப் பயணமாக இருக்கும்.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் அருகே தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 30 ஏக்கர் பரப்பில் கடல்சார் அருங்காட்சியகம் அமைகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்துவதற்காக மாமல்லபுரம் கடற்கரை அருகே ராட்சத இயந்திரங்களைக் கொண்டு கடலுக்கு அருகே ஆழமாகப் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து சுற்றுலாத் துறையினர் கூறும்போது, "இம்மாத இறுதியில் மாமல்லபுரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்த நிபுணர் குழு ஆய்வு செய்து சில பராமரிப்புப் பணிகளை செய்து வருகின்றனர். அதன்பிறகு இக்கப்பல் மாமல்லபுரம் கொண்டு செல்லப்படும்' என தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் கப்பல் நிறுத்தப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்படுவதுடன் கப்பல் நிறுத்தப்படும் பகுதியைச் சுற்றி பூங்கா அமைக்கப்பட இருப்பதாகவும் இப்பணிகள் நிறைவடைய ஓராண்டுக்கும் மேலாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் அருங்காட்சியகத்தில் ஐஎன்எஸ் வாக்லி நீர்மூழ்கி கப்பல் வைக்கப்படவுள்ளதாக தகவல் வந்துக் கொண்டிருக்கும் நிலையில் நீர்மூழ்கிக் கப்பல் எப்போது மாமல்லபுரம் கடற்கரைக்கு வரும் என மாமல்லபுரவாசிகளும, அங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கிடக்கின்றனர்.

இது குறித்து மாமல்லபுரம் கப்பல்துறை அருங்காட்சியகத்தில் உள்ள அதிகாரிகளை கேட்கும்போது, "எப்போது வரும் என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் வந்துவிடும். அதற்கான பணிகள் மாமல்லபுரம் கடற்கரையில் துரிதப்படுத்தப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com