

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே பொதுத்துறை நிறுவனமான ஹெச்பிஎஃப்( ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்) தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளதால் இத்தொழிற்சாலை மீண்டும் செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுளளது.
கடந்த 1996-ஆம் ஆண்டு வரை லாபத்தில் இயங்கி வந்த இத்தொழிற்சாலை புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் அந்நிய நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதித்ததன் விளைவாக நலிவடையத் துவங்கியது.
அத்துடன் இத்தொழிற்சாலையின் சார்பில் கலர் எக்ஸ்ரே உற்பத்தி பிரிவு புதிதாக அமைக்கப்பட்டபோது, மாறிவிட்ட தொழில்நுட்பத்தின் காரணமாக அப்புதிய பிரிவும் இயங்கவில்லை. இந்நிலையில், அதற்காக வாங்கிய கடனையும் அடைக்க முடியாததால் இத்தொழிற்சாலை நலிவடைந்த நிறுவனமாகவே அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இத்தொழிற்சாலையின் புனரமைப்பிற்காக அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எவ்வித உதவியும் செய்யாததுடன், அவரது தொடர்புக்குள் இருந்த மற்றொரு வெளிநாட்டு பிலிம் உற்பத்தி நிறுவனத்திற்கு ஆதரவு காட்டியதாக வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதனாலேயே, இத்தொழிற்சாலையை சிதம்பரம் புனரமைக்காததுடன், ஹெச்பிஎஃப் தொழிற்சாலைக்கான நிதி ஆதாரங்களையும் நிறுத்தி விட்டதால் அனைத்து தொழிற்சங்கங்களுமே காங்கிரஸ் அரசுக்கு எதிராக மட்டுமின்றி, சிதம்பரத்துக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தின.
இந்நிலையில், சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த தொழிற்சாலையில் கடந்த மாதம் வரை 600 தொழிலாளர்களாக குறைந்துவிட்டதால், இத்தொழிற்சாலையில் கட்டாய விருப்ப ஓய்வுத் திட்டமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை சில மூத்த தொழிலாளர்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டனர். பெரும்பாலான தொழிலாளர்கள் இதை எதிர்த்து, மீண்டும் இத்தொழிற்சாலை செயல்பட வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போதைய மத்திய ஆட்சி மாற்றம் காரணமாக கனரக தொழில்துறை இணை அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளதால் இத்தொழிற்சாலை மீண்டும் புனரமைக்கப்படும் என்ற நம்பிக்கை தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் ஹெச்பிஎஃப் தொழிற்சாலை புனரமைக்கப்படுமென உறுதி அளிக்கப்பட்டிருந்ததால் இந்த நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதனால், எதிர்வரும் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் இத்தொழிற்சாலை புனரமைப்பு குறித்து முறையான அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மக்களின் வாழ்வாதாரமாகவும், இம்மாவட்டத்தின் ஒரே பொதுத்துறை நிறுவனமாகவும் உள்ள ஹெச்பிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் எக்ஸ்ரே பிலிம்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் ராணுவ மருத்துவமனைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டாலே இத்தொழிற்சாலை புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் பொன்.ராதாகிருஷ்ணனின் பதிலுக்காக மட்டுமின்றி, அவரது நேரடி ஆய்வுக்காகவும் இத்தொழிற்சாலை ஊழியர்களும், நீலகிரி மாவட்ட மக்களும் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.