
புலால் உண்ணுகிற பழக்கம் தமிழனுடையது அல்ல. காலத்தின் மாற்றம், அறிவு வளர்ச்சியே இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் கூறினார்.
சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்கமத்தின் மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை (நவ.29) நடைபெற்றது. இதில் தமிழரங்கம் என்ற தலைப்பிலான அமர்வில் பங்கேற்று அவர் பேசியது:
இந்திய மாநிலங்களிலேயே அதிகமாக புலால் உண்பவர்கள் உள்ள மாநிலம் தமிழகம்தான். குறைவாக உண்கிற மாநிலம் குஜராத் என 10 ஆண்டுகளுக்கு முன்பே புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. காலத்தின் கோலம் இப்படிப்பட்ட கேடுகள் பெருகுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
புலையின் என்று சொன்னால் வெறுப்பு என்று பொருள். புலவி என்றால் மாறுபடுவது என்று பொருள். அதன்படி புலையின், புலவி, புலவு என்ற சொற்கள் எதுவுமே தமிழுக்கு ஏற்ற சொற்கள் அல்ல என்பது தெரிகிறது.
ஊன் என்பதற்கு உணவு என்று பொருளே கிடையாது. உடலினுடைய தோலுக்குத்தான் ஊன் என்று பொருள். பின்னர் அது பாகுபட்டு மாமிச உணவுக்கு ஊன் என்று பொருளாகியது.
அதன்படி, எந்தக் காலத்திலும் ஊன் உண்ணுகிற பழக்கம் தமிழனுக்கு இருந்ததில்லை என்றே சொல்லலாம். பின்னர் காலத்தின் மாற்றம், அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கக் கூடும்.
புலால் உண்ணாமை, கொல்லாமை என்று இரண்டு அதிகாரங்களை திருவள்ளுவர் அமைத்திருப்பதன் நோக்கமே இந்தப் புலை, கொலை இரண்டும் எப்படி இணைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
கொலை செய்கிற மனம்தான், புலை உண்ணுகிற மனமாகிறது என்று கருதுவதுபோல, இந்த அதிகாரங்களை அவர் அமைத்திருப்பது வியப்பாக இருக்கிறது. எங்கே இருக்கிறார் கடவுள் என்று கேட்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் "கொல்லான் புலால் மறுத்தானை கை கூப்பி எல்லா உயிரும் தொழும்' என்ற குறளை வகுத்திருக்கிறார்.
இப்படி எல்லா கருத்துகளையும் ஆராய்ந்து பார்க்கும்போது, புலால் உண்ணாமைதான் உயிர்களின் மீது காட்டுகின்ற இரக்கம் என்பது தெளிவாகிறது. எனவே, புலால் உண்ணும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்றார் அவ்வை நடராôôஜன்.
"தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்: அடிப்படையில் இந்திய சமுதாயம், தமிழ்ச் சமுதாயம் என்பது, தாவர உணவு உட்கொள்வதே சரியானது என உலகுக்கு உணர்த்திய சமுதாயமாகும்.
கற்கால மனிதன் தாவர உணவு சாப்பிட்டு வாழ்ந்திருப்பான் என்று நிச்சயமாக நாம் கருத முடியாது. ஆனால், காலப் போக்கில் நாகரிக வளர்ச்சியாகத்தான் தாவர உணவு இருந்திருக்க முடியும் என்ற கருத்தை பலரும் முன்வைக்கின்றனர். ஆனால், இதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை.
இந்தக் கருத்தை விஞ்ஞானம் உறுதிப்படுத்துகிறது. ஏனெனில், மனிதனுடைய குடல் அமைப்பு சிங்கம், புலி, நாய், பூனை போன்ற மாமிச உணவை உட்கொள்கின்ற விலங்கின் அமைப்பைப் போல் மிக மிக நீளமாக அல்லாமல், தாவர உணவை உட்கொள்கின்ற ஆடு, மாடு, யானை போன்றவற்றின் குடலமைப்பு போலதான் இருக்கிறது. அப்படியானால், இந்தக் குடல் அமைப்பில் மாமிசம் சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது. சில பழக்கவழக்கங்கள் மனிதனுக்குக் கூடாது என்று சொல்கின்றபோதும், தேவை என்று வருகின்றபோது அதற்கேற்ப நமது உடல் பழகிக் கொள்கிறதே தவிர, அதுவே இயற்கை இயல்பல்ல.
தமிழர்களைப் பொருத்தவரை பகவத் கீதை, பைபிள், திருக்குரான் என மத ரீதியான வழிகாட்டியாக எது இருந்தாலும், இன ரீதியான வழிகாட்டி வள்ளுவப் பேராசானாக மட்டும்தான் இருக்க முடியும்.
திருவள்ளுவர் இரண்டு விஷயங்களை மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். "புலால் மறுத்தல்' "கொல்லாமை' இரண்டும் வான்புகழ் வள்ளுவர் வலியுறுத்துகிறார் என்றால் அதற்கு மறுப்பு இருக்க முடியாது. புலால் மறுத்தலுக்கு அவர் கூறியிருக்கும் பத்துக் காரணங்களைவிட, மிகத் தெளிவாக வேறு யாரும் கூறிவிட முடியாது.
இந்தியச் சமுதாயத்தில் மாமிசம் உண்ணுபவர்கள் என்றால், அதைச் சமைத்து, உணவின் ஒரு பகுதியாகச் சாப்பிடுபவர்களாகத்தான் இருந்திருக்கின்றனர்.
ஆனால், இன்று மாமிசத்தை மட்டுமே ஒரு கையிலும், குளிர்பானத்தை மற்றொரு கையிலும் வைத்துக் கொண்டு, அன்றாடம் புலால் இல்லையென்றால் சாப்பிடவே முடியாது என்று கருதுகின்ற ஒரு தலைமுறை கிளம்பியிருக்கிறது. கடந்த 20, 30 ஆண்டுகளாகத்தான் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்ற உணவுக் கடைகள், இப்போது தெருத் தெருவாக முளைத்திருக்கின்றன. இவற்றால், நாய்த் தொல்லையும் மாநகரில் அதிகரித்திருக்கிறது.
இந்த மாநாட்டில் கூடியிருப்பவர்கள் அனைவருமே தாவர உணவாளர்களாத்தான் இருக்க முடியும்.
நாம், தாவர உணவின் பெருமையை நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சங்கமம் இதோடு முடிந்துவிடாமல், தெருவோரப் பிரசாரங்கள் மூலம் தாவர உணவின் மேன்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் வைத்தியநாதன்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.எஸ்.ராகவன்: மனிதத் தரத்தை உயர்த்தும் தத்துவம் சைவப் பழக்கமாகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வு முடிவு ஒன்று வெளியிடப்பட்டது.
உலகில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கற்பழிப்பு போன்ற பயங்கர குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்த ஆய்வு முடிவு அது. அதில், இதுபோன்ற பயங்கர குற்றங்களைப் புரிபவர்களில் 98 சதவீதத்தினர் புலால் உண்பவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, தாவர உணவின் மகிமையை ஓர் இயக்கமாக மாற்றி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
விழாவில் தில்லி முத்தமிழ் பேரவைத் தலைவர் முகுந்தன், சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்கமம் துணைத் தலைவர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், மலேசிய இந்து திருச் சபை நிர்வாகி பரமசிவம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் வசந்தகுமார், தில்லி தமிழ்ச் சங்க நிர்வாகி முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உடல் சூட்டை சீராக வைப்பது சைவ உணவு மட்டுமே: ஊரன் அடிகளார்
உடல் சூட்டை சீராக வைப்பது சைவ உணவு மட்டுமே என சுத்த சன்மார்க்க நிலையத்தை சேர்ந்த ஊரன் அடிகளார் கூறினார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்கமத்தின் மாநாட்டில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் பேசியதாவது:
உடம்பையும், உயிரையும் ஒட்ட வைத்திருப்பது உணவு. உணவு இல்லையென்றால் உடலும் உயிரும் பிரிந்து விடும். தனி உடம்புக்குப் பசி இருக்காது. அந்த உடம்பில் ஆன்மா சேருகிறபோது, ஏற்படுகின்ற முதல் சூடுதான் பசிச் சூடு. அடுத்ததாக ஏற்படுவது ஞானச் சூடு. மூன்றாவதாக ஏற்படுவது காமச் சூடு. இந்த மூன்று சூடும்தான் சுரணையைக் கொடுக்கும். பசிச் சூடு ஏற்படுகிற இடம்தான் வயிறு. இது உடம்பின் நடுப் பகுதியில் இருக்கிறது. இதற்கு மேலே ஞானச் சூடும், கீழே காமச் சூடும் இருக்கிறது. இதில் முதல் சூடான பசிச் சூட்டை பக்குவமாக வளர்த்தால், மற்ற இரண்டு சூடுகளையும் சீராக வைக்கும். அவ்வாறு பசிச் சூட்டை பக்குவமாக வளர்ப்பதற்கு சைவ உணவு மட்டுமே வழி.
உலகத்தில் வன்முறை அதிகரிப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று மது, மற்றொன்று மாமிசம். இது இரண்டும் இல்லையென்றால் உலகில் வன்முறையே இருக்காது. எனவே, உடம்பு அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சைவ உணவு சாப்பிடுவதுதான் வழி.
தொல்காப்பியரும், திருவள்ளுவரும் இதைத் தெளிவாக நமக்குக் கூறியிருக்கின்றனர். புலால் மறுத்தல் என்பதற்கு ஒரு அதிகாரத்தையே திருவள்ளுவர் வகுத்திருக்கிறார்.
முழுக்க சைவ உணவு சாத்தியமா என்ற கேள்வியைப் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அசாத்தியத்தை சாத்தியப்படுத்துவதுதான் மனிதன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.