திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்கள் எதிர்பார்க்கும் வசதிகள் என்ன?

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இம்மாதம் 24-ஆம் தேதி தொடங்கவுள்ள கந்தசஷ்டி விழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவு செய்யவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated on
1 min read

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இம்மாதம் 24-ஆம் தேதி தொடங்கவுள்ள கந்தசஷ்டி விழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவு செய்யவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 24-ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோயில் உள் பிரகாரம், கோயில் வளாகம், கடற்கரைப் பகுதி ஆகியவற்றில் தட்டுப்பாடின்றி சுத்தமான குடிநீர், தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

கோயில் வளாகத்தில் கூடுதலான குளியலறை, கழிப்பறைகளை அமைத்துத் தர வேண்டும். யாகசாலை பூஜையை பார்ப்பதற்கும், பக்தர்களை ஒழுங்குபடுத்த கூடுதலான பணியாளர்களை நியமிக்கவும், விழா நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் பெரிய அளவிலான தொலைக்காட்சிப் பெட்டிகளை வைக்கவேண்டும்.

சூரசம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில், வழிகாட்டிப் பலகை அமைக்க வேண்டும். கூடுதல் ஒலி பெருக்கிகள் மூலம் விழா அறிவிப்புகள் செய்யப்பட வேண்டும்.

விழா முடிந்ததும் ஏற்படும் வாகன நெரிசலைத் தவிர்க்க கூடுதலான போலீஸாரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வசதிகளை பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வாகனச் சீரமைப்பு: நாழிக்கிணறு பேருந்து நிறுத்தத்தில் சுற்றுலா வாகனங்கள் முறையின்றி நிறுத்தப்படுவதையும், கோயில் வளாகத்தில் உள்ள பொருள்கள், மிதியடிப் பாதுகாப்பகம் அருகே அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதையும் சீரமைக்க வேண்டும்.

செப்பனிட வேண்டிய சாலைகள்: காமராஜர் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடைத் திட்டப் பணி, புதிய சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும்.

மேல ரத வீதியிலும், தெற்கு ரத வீதியிலும் புதிய சாலை அமைக்க வேண்டும்.

அறை ஒதுக்குவதில் வெளிப்படை தேவை

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலைச் சுற்றி, நிர்வாகத்துக்குச் சொந்தமான செந்திலாண்டவன் விடுதி (80 அறைகள்), வேலவன் விடுதி (73 அறைகள்), ஜெயந்திநாதர் விடுதி (110 அறைகள்), குளிர்சாதன வசதிகளுடன் 14 குடில்கள், குளிர்சாதன வசதியின்றி 75 குடில்கள், விருந்தினர் மாளிகைகள் என, மொத்தம் 350-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன.

இவற்றில் ஜெயந்திநாதர் விடுதியில் கட்டடத்தின் நிலைக் கருதி தரைத்தளம் மட்டுமே பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

நாழிக்கிணறு பேருந்து நிலையம் அருகில் மூவர் சமாது செல்லும் வழியில் 24 நவீன தங்கும் அறைகள் கொண்ட விடுதியும் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. இந்த விடுகளிள் பக்தர்களுக்காக அறை ஒதுக்கப்படுவதில் வெளிப்படைத் தன்மை தேவை என்பதும் பக்தர்கள் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com