பாதியில் நிற்கும் பாலம்; அரசுப் பணம் வீண்!

சதுரங்கப்பட்டினம் அருகே பக்கிங்ஹாம் கால்வாய் மேம்பாலப் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் யாரும் முன்வராததால் அப் பணிகள் முடங்கியுள்ளன.
Updated on
2 min read

சதுரங்கப்பட்டினம் அருகே பக்கிங்ஹாம் கால்வாய் மேம்பாலப் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் யாரும் முன்வராததால் அப் பணிகள் முடங்கியுள்ளன.

பக்கிங்ஹாம் கால்வாய் மீது இருந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றும்படி அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

கடந்த 2009-இல் தொடங்கி 2010 இறுதியில் முடிவடைய வேண்டிய இப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது.

சட்ராஸ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இப் பாலம் "ஸ்காட்' (ள்ஸ்ரீந்ஹற்) கட்ட முடிவு செய்து ரூ. 495 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

ஒப்பந்த அடிப்படையில் இந்த மேம்பாலத்தைக் கட்டுவதற்கான பணி, இன்பராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலைத் துறை வழங்கியது. 2010-இல் முடிக்கப்பட வேண்டிய இந்தத் திட்டப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட திட்ட மதிப்பீட்டில் நஷ்டம் ஆகிவிட்டதாகக் கூறி மேம்பாலத்தை கட்ட முடியாத நிலையில் ஒப்பந்ததாரர் விலகிக் கொண்டார்.

9 முறை விளம்பரம்...இந்த நிலையில் முடங்கிப் போன இத்திட்டப் பணியில் மீதமுள்ள ரூ.289 லட்சம் மதிப்பிலான பணியை முடிப்பதற்காக நெடுஞ்சாலைத் துறை கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 9 முறை ஒப்பந்த அழைப்புக்கான விளம்பரத்தை வெளியிட்டு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் நெடுஞ்சாலைத் துறையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் எவரும் இப் பணியை எடுத்து செய்ய முன்வரவில்லை.

கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றத்தால் நஷ்டம் ஆகிவிடும் என்ற அச்சம் ஒருபக்கம் இருந்தாலும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் செய்வதற்கு முன்னதாக அனைத்து ஒப்பந்ததாரர்களையும் அழைத்து ஆலோசனை செய்திருந்தால் இப் பணியை மேற்கொள்ள வாய்ப்பிருந்திருக்கும்.

எனினும் எந்த ஒரு ஒப்பந்ததாரரும் முன்வராத நிலையில் 8-ஆவது முறையாக தாம்பரத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனம் ஒப்பந்தப் பணியை மேற்கொள்ள முன்வந்தது. எனினும் அந்த நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் கொடுத்த விவரங்கள் போதுமானதாக இல்லை எனக் கருதி அந்த ஒப்பந்தப் புள்ளியும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மீண்டும் 9-ஆவது முறையும் அதே நிறுவனம் பணிக்கான ஒப்பந்தம் எடுக்க முன்வந்துள்ளது.

இப்படி மேம்பாலப் பணியை எடுக்க வரும் ஒப்பந்ததாரர்களையும் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தால் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை ஏற்க இயலாத நெடுஞ்சாலைத் துறை, இதுகுறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுச் செல்லவில்லை என புகார் எழுந்துள்ளது.

அதேநேரத்தில், நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலம் கட்டும் பணி பகுதி புதர் மண்டி அடர்ந்த மறைவிடமாக மாறி வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள குடிகாரர்கள் மது அருந்தவும், சமூக விரோதச் செயல்களுக்காகவும் இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அவ்வழியே சென்று வர, பெண்கள் அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் பாஸ்கரனிடம் கேட்டபோது, "2010-இல் நிறுத்தப்பட்டப் பணி 40 சதவீதமே முடிவடைந்துள்ளது.

நாளுக்கு நாள் கட்டுமானப் பொருள்களின் விலை அதிகரித்து வருவதால், மீதமுள்ள ரூ.289 லட்சம் நிதியில், மேற்கொண்டு பணியை செய்து முடிக்க ஒப்பந்ததாரர்கள் மறுக்கின்றனர்.

இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிதியை உயர்த்தி வழங்கினால் பணி முடிய வாய்ப்புள்ளது.

மேம்பாலப் பணியை முடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் பணி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வோம்' என்றார் பாஸ்கரன்.

பொதுமக்கள் நலன் கருதியும், அரசுப் பணம் வீணாகாமலும், பாலத்தின் அவசியத் தேவையைக் கருத்தில் கொண்டும், கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை மனதில் கொண்டும் விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு மேம்பாலப் பணியை முடிக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப் பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com