

கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிடாத மத்திய அரசை அக்டோபர் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விளாசித்தள்ளிய விதம், நூறு சவுக்கடி அல்லது நூறு வெங்காயம் சாப்பிடுவது எனும் ஏதாவதொரு தண்டனையைப் பெற வேண்டிய நபர், இரண்டையும் ஏற்க நேரிட்ட கதையாக இருக்கிறது.
இந்தக் கதையின் முரண் இதுதான்: 2009-ஆம் ஆண்டு ராம் ஜேத்மலானி தொடுத்த பொதுநல வழக்கில் 2011 ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க உத்தரவிட்டது. இக்குழுவின் தலைவர்களாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருப்பார்கள். அமலாக்கப் பிரிவும் புலனாய்வுப் பிரிவும் இதில் அங்கமாக இருக்கும். இக்குழு, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியதாகக் கருதப்படும் பெருமளவு கருப்புப்பணம் குறித்து விசாரிக்க, மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்த அடங்கா கருப்புப் பணத்தின் அளவு, 2008-ஆம் ஆண்டு பூகோளப் பணபரிவர்த்தனை நேர்மை அமைப்பின் மதிப்பீட்டின்படி 500 பில்லியன் டாலர்கள். இன்னும் கூடிக்கொண்டே இருக்கிறது. லீச்டென்ஸ்டைன் வங்கியில் உள்ள கருப்புப்பணம் தொடர்பாக ஜெர்மனியும், ஜெனீவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் உள்ள கருப்புப்பணம் தொடர்பாக பிரான்ஸூம் அளித்த தகவல்களை நீதிமன்றத் தீர்ப்பின்படி வெளியிடாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போக்குக்காட்டி வந்தது. இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கையில் அடைக்கலம் தேடியது. ஆகவே, முதலில் லீச்டென்ஸ்டைன் வங்கியில் உள்ள கருப்புப்பண விவரங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் வழங்கச் சொல்லும் கட்டாயம் நீதிமன்றத்துக்கு ஏற்பட்டது.
எச்எஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்திருப்போர் விவரங்களையும் வழங்கச் சொல்லும் முன்பாக, மத்திய அரசு மறுஆய்வு மனு செய்து, தீர்ப்பை திரும்பப் பெறக் கேட்டுக்கொண்டது. அதன் பின்னர், இந்த விவகாரம் உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டு, புதிய அரசு அமைந்ததும் உயிர்ப்பு கொண்டது. மோடி அரசின் முதல் வேலையே, ஐமுகூ அரசு தடுத்துவந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது, அதனிடம் கருப்புப் பண புலனாய்வு விவரங்களை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்கும்படி செய்ததுதான்.
எல்லாமும் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது என்ற கருதும்வேளையில், அக்டோபர் 15-ஆம் தேதி, நிதியமைச்சகம் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, ஜூலை 2011 தீர்ப்பை மாற்றிஎழுதும்படி கோரிக்கை வைத்தது. வங்கிப் பரிவர்த்தனை விவரங்களை பரிமாறிக்கொள்ள, இந்திய - அமெரிக்க அரசுகள் இடையே உடன்படிக்கை காண்பதில், நீதிமன்றத் தீர்ப்பு தடையாக இருப்பதாக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை போலவே, அமெரிக்க மற்றும் பல நாடுகளின் அரசுகளுக்கு இடையிலான உடன்படிக்கையிலும் அதே ஷரத்துகள் இருந்தன.
கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலை வெளியிடக்கூறிய நீதிமன்ற உத்தரவு அரசுகளிடையிலான உடன்படிக்கை காண்பதில் தடையாக இருப்பதால், தீர்ப்பை மாற்றி எழுத வேண்டும் என்று அரசு கோரியது. இதனைப் பலரும், குறிப்பாக கருப்புப்பண மீட்புக்காக பணியாற்றிவரும் ராம் ஜேத்மலானி மற்றும் சிலர், கருப்புப் பண விசாரணையில் ஐமுகூ அரசு போலவே இந்த அரசும் முட்டுக்கட்டைப் போடுவதாகக் கண்டனர்.
அரசு மனு கொடுத்த தருணம் சரியானது அல்ல. கருப்புப் பண மீட்பை ஆதரிப்போரின் உணர்வுக்கு மாறுபட்டது. கூச்சல் எழுந்தது. விமர்சிப்போரும் நண்பர்களும் ஒன்றாகச் சேர்ந்து, ஐமுகூ அரசையும் பாஜக அரசையும் இணைக் கோட்டில் நிறுத்தின. பலரும் இந்த இரண்டு அரசுக்கும் வித்தியாசம் இல்லை என்று கருதத் தொடங்கினர். மனுவின் பிழைபடு தருணம், பிழைபடு புரிதல் காரணமாக இந்த அரசும் கருப்புப் பணம் பதுக்கியவர்களைப் பாதுகாக்க விரும்புகிறது என்ற எண்ணத்தை உருவாக்கியது.
ஆனால், உண்மை இதற்கு மாறானது என்பதையே, நிதி அமைச்சகம் அக்டோபர் 27-ஆம் தேதி அளித்த தன்விளக்க பதில்மனு வெளிக்காட்டியது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி செயல்படுவதை மட்டுமன்றி, நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வு குழுவிடம் அரசு எத்துணை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுக்கிறது என்பதைப் புலப்படுத்தியது அரசின் பதில்மனு. ஜெர்மனி, பிரெஞ்சு அரசுகளிடம் கிடைக்கப்பெற்ற முழுப் பட்டியல் மற்றும் அதன் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு ஜூன் 27-ஆம் தேதி அளித்த அறிக்கை ஆகியவற்றையும் அந்தப் பதில் மனு உறுதிப்படுத்தியது.
வரிகள் வாரிய அதிகாரிகள் எஸ்ஐடி அதிகாரிகளைச் சந்தித்து, வழக்கின் நிலை குறித்து விளக்கிச் சென்றதையும், தகவல்களின் பின்னணியையும், ஸ்விஸ் வங்கியின் தகவலைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதையும், அரசுக்கு உள்ள சிக்கல்கள் மற்றும் இந்தக் கணக்கு விவரங்களைப் பெறும் மாற்று வழிகள் குறித்தும் பேசியிருப்பதையும் பதில்மனு குறிப்பிட்டுள்ளது.
அதிர்ச்சிதரும் வகையில், ஐமுகூ அரசுக்கும் இந்த அரசுக்கும் வித்தியாசம் இல்லை என்று விமர்சகர்களும் நண்பர்களும் ஒருசேர சொல்லிக்கொண்டிருந்த வேளையில், அரசின் வெளிப்படைத்தன்மை குறித்தோ அல்லது எப்படியாகத் தகவல்கள் எஸ்ஐடி-க்கு தரப்பட்டுள்ளன என்பதைப் பற்றியோ நிதியமைச்சர் இரு நாள்களுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடவே இல்லை. அதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு.
இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கையின்படி பெறப்பட்ட தகவலை, அதே உடன்பாட்டின் ஷரத்துகளின்படி, குற்றவழக்கு நடைமுறை தொடங்காத நிலையில் வெளிப்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே நிதியமைச்சரின் பேட்டி அமைந்தது. இதே வாதத்தைத்தான் ஐமுகூ அரசும் சொன்னது. அந்த வாதத்தை நீதிமன்றம் புறந்தள்ளியது. இத்தோடு, சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஏற்கெனவே தகவல்கள் வழங்கப்பட்டுவிட்டன என்பதை சொல்லாமல் போனதும் சேர்ந்து அரசுக்கு பேரிடராக அமைந்தன. அரசுக்கு எதிரான செய்திகள் குவிந்த நேரத்தில், பெயர்ப் பட்டியல் எஸ்ஐடி-யிடம் வழங்கப்பட்டது என்று சொல்லும் அரசின் மற்றொரு பதில்மனு யாருடைய கவனத்தையும் பெறவில்லை.
இத்தகைய சூழலில்தான், தீர்ப்பில் மாறுதல் கோரும் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றத்தின், மக்களின் மனநிலையை அட்டர்னி ஜெனரல் புரிந்திருக்கவில்லை. சட்ட முறைகளே நியாயப்படுத்த விட்டுவிட்டார். அரசு ஏற்கெனவே தகவல்களை வழங்கிய உண்மை இந்தக் கூச்சலில் காணாமல் போனது. தகவல்களை உறையிட்டு வழங்கும்படி நீதிமன்றம் அக்டோபர் 28-ஆம் தேதி உத்தரவிட்டது.
ஏற்கெனவே எஸ்ஐடி-யிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் கூறினாரா என்பது தெரியவில்லை. அப்படியே கூறியிருந்தாலும்கூட, தீர்ப்பை மாற்றக் கோரும் மனுவின் நியாயத்தின் மீதான சட்ட விவாதத்தில் காணாமல் போனது. இதன் விளைவு- மக்களிடத்திலும், நீதிமன்றத்திலும் அரசுக்குக் கெட்ட பெயர் வந்தது. எஸ்ஐடி-யிடம் ஏற்கெனவே தகவல்களைக் கொடுத்திருந்தும்கூட, வெளிப்படுத்தவில்லை என நீதிமன்றத்திடம் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியதாயிற்று. சரியாகச் சொல்வதெனில், ஏதேனும் ஒரு தண்டனைக்குப் பதிலாக, 100 வெங்காயத்தையும் தின்று, நூறு சவுக்கடியும் வாங்கிக்கொண்டதைப்போல!
அட்டர்னி ஜெனரலின் சட்டமுறையும்கூட தவறாக இருப்பதாகவே தோன்றுகிறது. உண்மை என்னவென்றால், எச்எஸ்பிசி வங்கியில் கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை நீதிமன்ற நடவடிக்கை காரணமாக வெளிப்படுத்துவதை, பிரான்ஸூடன் இந்தியா செய்துகொண்ட இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை தடை செய்யவில்லை. மாறாக, தகவல் வெளிப்படுத்தலை பின்வருமாறு ஒழுங்குபடுத்துகிறது:
முதலாவதாக, இந்திய சட்டத்தின்படி, அதாவது வருமான வரிச் சட்டம், தகவல்பெறும் உரிமைச் சட்டம் போன்றவற்றால் தரப்படும் ரகசியக்காப்பு அந்தத் தகவலுக்கும் தரப்பட வேண்டும்.
இரண்டாவதாக, தகவல் தருபவருக்கு (பிரான்ஸ்) மெய்யாகவே ரகசியமானது என்ற நிலையில், தகவல் பெறுபவரும் (இந்தியாவும்) அதன் ரகசியத்தைக் காக்க வேண்டும்.
இப்போது இந்த இரண்டு விதிகளையும் பொருத்திப் பார்ப்போம். முதலில், வருமான வரி மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டுமே இத்தகயை தகவலை வெளிப்படுத்துவதை அனுமதிக்கின்றன. ஆகவே எச்எஸ்பிசி வங்கி கணக்குகளைப் பொருத்தவரை இத்தகவல்களில் எந்த ரகசியமும் இல்லை.
அடுத்ததாக, ஸ்விட்சர்லாந்தில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்திருப்போர் குறித்து பிரான்ஸூக்கு கிடைத்திருப்பது திருடப்பட்ட தகவல்கள். ஆகவே, இது பிரான்ஸ் நாட்டின் ரகசியம் அல்ல. ஸ்விட்சர்லாந்துக்கு மட்டுமே இது ரகசிய தகவல். ஆக, இரண்டு விதிமுறைகளின்படியும் எச்எஸ்பிசி வங்கியில் கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிடுவதை மறுக்க முடியாது.
மேலும், இவற்றைத் தாண்டி மூன்றாவது ஒரு விதிமுறை உள்ளது. பிரான்ஸ் நாட்டுடனான இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை, நீதிமன்றம் மற்றும் வருமான வரி தொடர்பான நடவடிக்கைகளில் இந்தப் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதை அனுமதிக்கிறது. அதாவது, நாட்டின் உச்சநீதிமன்றமே உத்தரவிடும்போது, உடன்படிக்கையின் ஷரத்துப்படி இந்தப் பட்டியலை வெளியிட அரசு அதிகாரம் பெற்றுவிடுகிறது.
தகவலை வெளிப்படுத்தும் ஷரத்தை பொருத்தவரையில், இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை பிரான்ஸூக்கு இருப்பதைப் போலவே, அமெரிக்க உடன்படிக்கையிலும் அப்படித்தான் இருக்கிறது. அமெரிக்காவுடன் கையெழுத்தாகவுள்ள அரசுகளிடை உடன்படிக்கையிலும் (ஐஜிஏ) இதே விதிமுறைகள்தான். ஆகவே, தீர்ப்பு இந்த உடன்படிக்கைக்கு தடையாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் அரசு அளித்த மனு தேவையில்லாதது என்றாலும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பது வெளிப்படை. ஒவ்வொரு நிலையிலும் குழப்பத்தின் குவியலாகவே இருக்கிறது.
எவ்வாறு அரசு இதை இப்போது முன்னெடுத்துச் செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும் என்பதை சந்தேகம் வரும்போதெல்லாம், நீதிமன்றம் நியமித்த எஸ்ஐடி-யுடன் அரசு ஆலோசிக்க வேண்டும். வழிகாட்டுதலை நீதிமன்றத்திடம் கேட்டுப்பெற வேண்டியது எஸ்ஐடி! உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது: கருப்புப் பண விசாரணையை எஸ்ஐடி பார்த்துக்கொள்ளும். அரசு இணங்குமா?
பின்குறிப்பு: உச்சநீதிமன்றத்தின் கடுஞ்சொற்களுக்குப் பிறகு, கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை தன்னிடம் வழங்கும்படி அரசுக்கு நீதிமன்றம் கூறிய பிறகு, முந்தைய அரசுக்கும் இந்த அரசுக்கும் வித்தியாசமே இல்லை என்று விமர்சகர்கள் சொன்ன பிறகு, நீதிமன்றத்திடம் மூடிய உறையில் புதன்கிழமை காலை அரசு அளித்த விவரங்களும் நான்கு மாதங்களுக்கு முன்பு (ஜூன் 27, 2014) எஸ்ஐடி-க்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட விவரங்களும் ஒன்றுதான் என்று அமைதியாக உறுதிப்படுத்தியுள்ளார் எஸ்ஐடி தலைவர். இதற்கு என்ன பொருள்? அரசு நீதிமன்றத்திடமோ எஸ்ஐடி-யிடமோ எதையுமே மறைக்கவில்லை என்பதுதான்.
ஆனாலும், நீதிமன்றத்திடம் ஒரு நாளுக்கு முன்பாகவே இத்தகவல்கள் எஸ்ஐடி-யிடம் கொடுக்கப்பட்டுள்ளன என்று அரசு தனது மனுவில் தெரிவித்திருந்தும், நீதிமன்றம் அரசை கடுமையாகப் பேசிவிட்டது. நீதிமன்றமோ அல்லது ஊடகங்களோ, கடுஞ்சொற்களை திரும்பப் பெறப்போவதில்லை. களங்கப்படுத்தியாகிவிட்டது.
ஆனாலும், தார்மிக ரீதியாக, மோடி அரசு வெற்றி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.