விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி

சாகித்ய அகாதெமி விருது பெற வேண்டும் என்ற போட்டியில் நான் இல்லை; இருப்பினும் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே என்று எழுத்தாளர் பூமணி கூறினார்.
விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி

சாகித்ய அகாதெமி விருது பெற வேண்டும் என்ற போட்டியில் நான் இல்லை; இருப்பினும் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே என்று எழுத்தாளர் பூமணி கூறினார்.

எழுத்தாளர் பூமணியின் "அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. அஞ்ஞாடி என்பதற்கு அம்மாடி, அதாவது அன்னை என்று பொருள். இந்த நாவலை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாக நாவலை வெளியிடும்போதே பூமணி குறிப்பிட்டிருந்தார்.

சாதிக் கலவரங்கள், சமூக மாற்றங்கள் எனப் பல்வேறு விஷயங்களை இந்த நாவலில் பதிவு செய்துள்ளார். துயரத்திலும் மக்களின் மனிதநேயத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள இந்த நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. இது குறித்து பூமணி கூறியது:

சாதிக் கலவரங்கள் என்பது பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை தடுத்து நிறுத்துவதில் ஊடகங்களும், அரசும் முக்கியப் பங்காற்ற வேண்டும்.

விருதுக்கான போட்டி என்ற சூதாட்டத்தில் எனக்கு விருப்பமில்லை. அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய விருது கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராதது, கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. விருதுக்காக நான் படைப்புகளை உருவாக்குவதில்லை. எத்தனையோ விருது பெற்றுள்ளேன். அவற்றுள் இதுவும் ஒன்று. விளையாட்டு வீரர்கள் கூறுவதைப் போன்று இந்த விருதை இன்னாருக்கு சமர்ப்பணம் செய்கின்றேன் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றார் அவர்.

வாழ்க்கைக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமணி. 1947-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். பெற்றோர் பூலித்துரை, தேனம்மாள்.

இளையரசனேந்தலில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், இளநிலை இயற்பியல் பட்டப்படிப்பை விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் பயின்றார். கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த இவர், சென்னையில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு செல்லம் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர் தற்போது கோவில்பட்டி பாரதி நகர் 3-ஆவது தெருவில் வசித்து வருகிறார்.

இலக்கியப் பணி: 1966-ஆம் ஆண்டுமுதல் கவிதை, சிறுகதைகள் எழுதி வந்த இவர், 1979-முதல் நாவல் எழுதத் தொடங்கினார். இவரது முதல் நாவல் "பிறகு' என்ற தலைப்பில் வெளியானது. தொடர்ந்து வெக்கை, நைவேத்யம், வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்களை எழுதினார்.

6-ஆவது நாவலாக அஞ்ஞாடி நாவலை 2005-இல் எழுதத் தொடங்கி, 2011-இல் நிறைவு செய்தார். 1,100 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் 2012 ஜனவரியில் வெளியிடப்பட்டது. இந்த நாவலுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன.

19-ஆம் நூற்றாண்டின் பின்னணியில், சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்கர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற மோதல், சிவகாசி பகுதியில் நிகழ்ந்த சாதிக் கலவரம் எனப் பல்வேறு நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது அஞ்ஞாடி.

எழுத்தாளர் பூமணி "கருவேலம் பூக்கள்' என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com