இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: கருணாநிதி, வைகோ கண்டனம்

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: கருணாநிதி, வைகோ கண்டனம்

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளையரிடமிருந்து பெற்றுக் கொண்டது முதல் சிறுபான்மையினரான தமிழர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு எதிரான போக்கையே சிங்களர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

தமிழர்களைத் தாக்கி சின்னாபின்னமாக்கியவர்கள், இப்போது, தமிழ் பேசுபவர்கள் என்பதால் முஸ்லிம்களையும் தாக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக 2012 முதல் இலங்கையிலும், இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கொழும்பு நகருக்கு அருகே உள்ள அலுத்தமா பகுதியில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு திடீரென வன்முறை மூண்டு, முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பள்ளிவாசல்களும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகளும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை அமைச்சர் பைசர் முஸ்தபா என்பவர், கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது மற்றொரு பிரிவினர் அவரை சிறைபிடித்துள்ளனர். பின்னர் காவலர்கள் வந்து அவரை மீட்டுள்ளனர். புத்த மதத்தினரும், இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்களும் இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இது குறித்து மத்திய, மாநில அரசுகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் கடுமையாகத் தாக்கப்படும் நிலையில், அவர்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

வைகோ கண்டனம்: இலங்கைத் தீவில் முஸ்லிம்களுக்கு எதிராக, இனவெறி பிடித்த குழுக்கள் தாக்குதல் நடத்தி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த வன்முறையில் ஈடுபட்ட பொதுபலசேனை அமைப்புக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் பௌத்த மதத்தைத் தவிர வேறு மதத்துக்கு இடமில்லை என்ற முழக்கத்தோடு, முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கடந்த ஆண்டே தாக்குதல் நடைபெற்றது.

இந்து மதக் கோயில்களை தகர்த்ததோடு, இந்து கோயில் வளாகங்களில் பௌத்த விகாரங்களை இலங்கை ராணுவத்தினர் பாதுகாப்போடு, பௌத்த துறவிகள் கட்டி வருகின்றனர். கிறிஸ்துவ தேவாலயங்களில் வழிபாடுகள் நடத்த விடாமலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொடுமைகளை ராஜபட்ச அரசு தடுக்கவில்லை. அதன் விளைவாகத்தான் இப்போது கொழும்பு அருகே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நகரங்களில் இனவாத குழுக்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், உடைமைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமுற்றுள்ளனர்.

இலங்கையில் மனித உரிமை குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது. அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மன்றம் உள்பட எந்த அமைப்பையும் அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அமைச்சர்கள் பகிரங்கமாகவே பேசி வருகின்றனர்.

இலங்கையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இனியாவது இலங்கை அரசின் கோர முகத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com