முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு: கருணாநிதி புகாருக்கு ஜெயலலிதா பதில்

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான திமுக தலைவர் கருணாநிதியின் புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான திமுக தலைவர் கருணாநிதியின் புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்துள்ளார்.

நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியது:

சிறுபான்மையினருக்கு ஏராளமான நன்மைகள் செய்யப்பட்டு வருகின்றன. உலமாக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமன்றி அவர்களின் ஓய்வூதியத்தையும் உயர்த்தி உள்ளோம்.

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனே நிறைவேற்றாமல், அதை தள்ளிப்போடும்விதமாக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை அனுப்பி உள்ளதாகவும், தமிழக அரசு இந்த விஷயத்தில் இஸ்லாமியர்களை ஏமாற்றுவதாகவும் கருணாநிதி கூறியுள்ளார். இதில் ஏமாற்றுவதற்கு ஒன்றுமே இல்லை. 2006-ல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கை வைக்கப்பட்டபோது, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அந்தக் கோரிக்கையை அனுப்பி நடவடிக்கை எடுத்தேன். அந்த நடவடிக்கையின் அடிப்படையில்தான், தொடர்ந்து வந்த கருணாநிதி அரசு முஸ்லிம்களுக்கான ஒடஒதுக்கீட்டை அறிவித்தது. அந்த இடஒதுக்கீட்டிற்கான விதையை நான்தான் முதலில் போட்டேன்.

இன்று மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதைக் குறைகூறும் கருணாநிதி, 2006-ல் ஆளுநர் உரையில் இதற்கு ஒரு சட்டம் இயற்றப்படும் என்று ஏன் அறிவிக்கவில்லை?

எந்த மாநில அரசும் தன்னிச்சையாக இடஒதுக்கீட்டை அதிகரித்துவிட முடியாது. 1990 மண்டல் கமிஷன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு இந்தக் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

69 சதவிகித இடஒதுக்கீட்டை எப்படி அறிவித்தேனோ அதுபோல் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டையும் அறிவிப்பேன். கருணாநிதியின் இந்த அறிக்கையைப் பார்த்து ஏமாற தமிழக மக்கள் ஏமாளிகள் அல்லர் என்றார் ஜெயலலிதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com