புதிய தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்: ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ஆலோசகர் பதவி

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக மோகன் வர்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போதைய தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வரும் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலாளராக மோகன் வர்கீஸ் சுங்கத் வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டார்.
புதிய தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்: ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ஆலோசகர் பதவி

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக மோகன் வர்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போதைய தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வரும் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலாளராக மோகன் வர்கீஸ் சுங்கத் வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டார்.

ஓய்வுக்குப் பிறகு, தமிழக அரசின் ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தாற்காலிக அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தப் பொறுப்பை, அவர் வரும் திங்கள்கிழமையில் இருந்து (மார்ச் 31) ஏற்றுக் கொள்வார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தனது பொறுப்புகளை வரும் திங்கள்கிழமையன்று (மார்ச் 31) ஏற்றுக் கொள்வார் எனத் தெரிகிறது.

தமிழக அரசின் 42-ஆவது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மோகன் வர்கீஸ், விழிப்புப் பணி ஆணையாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த ஆணையாளராகவும் பதவி வகிப்பார். இந்தப் பொறுப்புகளை ஷீலா பாலகிருஷ்ணன் கூடுதல் பொறுப்புகளாக கவனித்து வந்தார்.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி: மோகன் வர்கீஸ் சுங்கத், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர். கடந்த 1956-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதியன்று பிறந்தார். விலங்கியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1978-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்றார். 1980-ஆம் ஆண்டு நில நிர்வாகத் துறை துணை ஆட்சியராகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்புச் செயலாளராகவும் பணியைத் தொடங்கினார். தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும், தொழில் துறை இணைச் செயலாளராகவும், வேளாண்மைத் துறை இயக்குநராகவும் பொறுப்புகளை வகித்தார்.

உயர்கல்வி-எரிசக்தி: கடந்த 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித் துறை செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். அதன்பின், மரபுசாரா எரிசக்தித் துறையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தார்.

தற்போது, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.

ஐ.ஏ.எஸ். தம்பதி: புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மோகன் வர்கீஸ் சுங்கத்தின் மனைவி ஷீலா ராணி சுங்கத்தும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். அவரும் 1978-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் தமிழக கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com