ஆர்.கே.பேட்டை வட்டம் உருவாக்கப்படுமா?

பொதுமக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு பள்ளிப்பட்டு வட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆர்.கே.பேட்டை என்ற புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என 38 கிராம ஊராட்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆர்.கே.பேட்டை வட்டம் உருவாக்கப்படுமா?

பொதுமக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு பள்ளிப்பட்டு வட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆர்.கே.பேட்டை என்ற புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என 38 கிராம ஊராட்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பள்ளிப்பட்டு வட்டம், 70 ஊராட்சிகளை உள்ளடக்கியது. இங்கு 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த வட்டத்தில் ஏழை, பிற்படுத்தப்பட்ட, நலிந்த விவசாயிகள், நெசவாளர்கள் வாழும் பின்தங்கிய வட்டமாக இருந்து வருகிறது.

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள மைலார் வாடா, அய்யனேரி, ஸ்ரீ காளிகாபுரம், புதூர், சின்னாநாகபூண்டி, வீரமங்கலம், விடியங்காடு உள்ளிட்ட மலைப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் குடும்ப அட்டை பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், பட்டா பெயர் மாற்றம், வருமானச் சான்று, ஜாதி சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட தங்களது வருவாய் சான்றிதழ்களைப் பெற 40 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிப்பட்டுக்கு தினசரி சென்று வருகின்றனர்.

மேலும் வருவாய்த் துறை தொடர்பான ஒவ்வொரு தேவைக்கும், ஆர்.கே.பேட்டை பகுதி மக்கள் நெடுந்தொலைவு வந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

பள்ளிப்பட்டுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் 38 கிராம ஊராட்சி மக்களும், மாற்றுத்திறனாளிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஆர்.கே.பேட்டையில் மருத்துவமனை, காவல் நிலையம், இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகள், இதர வசதிகளும் உள்ளதால் ஆர்.கே.பேட்டையை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய வட்டம் உருவாக்குவது மிகவும் எளிது என்கின்றனர் இப் பகுதி மக்கள்.

ஆர்.கே.பேட்டை வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் பேரவையில் பலமுறை பேசியுள்ளனர்.

அரசின் விதிகளின்படி 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும், குறிப்பிடத்தகுந்த மக்கள் தொகையும் இருந்தால் புதிய வட்டத்தை உருவாக்க அரசு பரிசீலனை செய்யும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆர்.கே.பேட்டை ஒன்றியம், 38 ஊராட்சிகளையும், 2 லட்சம் வாக்காளர்களையும் கொண்டுள்ளது.

எனவே, இதுகுறித்து தமிழக அரசு உரிய ஆய்வு மேற்கொண்டு விரைவில் பள்ளிப்பட்டு வட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆர்.கே.பேட்டை என்ற புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பலதரப்பிலும கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com