மாமல்லபுரம் நவீன பேருந்து நிலையப் பணி: 23 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அவலம்

மாமல்லபுரத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்கி, நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated on
1 min read

மாமல்லபுரத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்கி, நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரம், சிறப்பு நிலை பேரூராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மாமல்லபுரத்தை அழகிய சுற்றுலா நகரமாக மாற்றும் நடவடிக்கையில் தமிழக அரசின் சுற்றுலாத் துறையும், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும் ஈடுபட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் தற்போது தலசயனப் பெருமாள் கோயில் அருகில் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சென்னை, கல்பாக்கம், செங்கல்பட்டு பகுதிகளிலிருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், சுற்றுலாப் பயணிகள் வரும் பேருந்துகளும் இங்கு வந்து செல்கின்றன. இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இங்கு சுற்றுலா மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் பயணிகளுக்கு மிகவும் இன்றியமையாத நிரந்தர பேருந்து நிலையம் இல்லை.

எனவே, மாமல்லபுரத்தில் நவீன முறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, மாமல்லபுரம் எல்லைப் பகுதியில் ஸ்ரீகருக்காத்தம்மன் கோயில் எதிரில் உள்ள 6.08 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையினரால் 1992-இல் ஆர்ஜிதம் செய்யப்பட்டு மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து, நவீன பேருந்து நிலையம் அமைக்க வரைபடம் தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கும் அனுப்பப்பட்டது. சுற்றுலாத் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும், அரசுத் துறை அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்ட இடத்தையும், பேருந்து நிலைய வரைபடத்தையும் பார்வையிட்டுச் சென்றனர்.

எனினும், பேருந்து நிலையம் அமைக்கும் பணி ஏனோ கடந்த 23 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால், பேருந்து நிலையத்துக்காக சுத்தம் செய்யப்பட்ட இடம் தற்போது புதர் மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. மேலும், குப்பைகள் அங்கு கொட்டப்படுவதால் குப்பை மேடாக மாறிவிட்டது. புதுநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் பேருந்து நிலையத்துக்காக வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையும் துருப்பிடித்து இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. மேலும், மாமல்லபுரத்தில் தற்போது இயங்கி வரும் குறுகிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்த முடியாமல் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.

எனவே, கருக்காத்தம்மன் கோயில் எதிரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை இனியும் தாமதிக்காமல் உடனடியாகத் தொடங்க வேண்டும் என மாமல்லபுரம்வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே, சுற்றுலாப் பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள், பயணிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு மாமல்லபுரத்தில் நவீன பேருந்து அமைக்கும் பணியை தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com