திடக்கழிவு மேலாண்மை திட்டம்: கிராம ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற தூய்மை தொண்டர்கள் நியமனம்

ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் சுகாதார கிராமமாக மாற்றும் வகையில் குப்பைகள் அகற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சார்பில் தூய்மை தொண்டர்கள் நியமனம் செய்ய அரசு
Updated on
1 min read

ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் சுகாதார கிராமமாக மாற்றும் வகையில் குப்பைகள் அகற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சார்பில் தூய்மை தொண்டர்கள் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், முதல் கட்டமாக ஊராட்சிகளை சுகாதாரமாக்கும் வகையில் 2 ஆயிரம் ஊராட்சிகளில்  திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேற்பட்ட நகரப் பகுதி அருகே உள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் சுற்றுலாதலம், புனித தலங்கள் உள்ள ஊராட்சிகள், பெரிய தொழிற்சாலைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ள கிராமங்கள், தேசிய நெடுஞ்சாலைப்பகுதியின் மேல் அமைந்துள்ள ஊராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்ட நடவடிக்கை என்பது கழிவு பொருள்களை சேகரித்து மக்கும், மக்காத குப்பையென தரம் பிரித்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவது ஆகும். மக்கும் குப்பைகள் உரக்குழிகளிலும், மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் மாசு ஏற்படாத வகையில் துப்புரவு சார்ந்த குழிகளில் நிரப்பப்படும். மறுசுழற்சி செய்ய கூடிய பிளாஸ்டிக் கழிவுகளான பிளாஸ்டிக் தாள்கள் போன்றவற்றை தூளாக்கி ஊராட்சிகள் விற்பனை செய்ய முடியும். இப்பணிகளை கிராமங்களில் மேற்கொள்வதற்கு தூய்மை தொண்டர்கள் நியமனம் செய்து தினக்கூலியாக ரூ.183 வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை முகமையின் திட்ட அலுவலர் எம். பிரபாகர் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டம் 60 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா 150 குடும்பங்களுக்கு ஒரு தூய்மை தொண்டர்கள் என்கிற அடிப்படையில் 760 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ.183 வீதம் கூலி வீதம் முதல் 100 நாள்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் வழங்கப்படும். அதையடுத்து, தூய்மை பாரத இயக்கத்திட்டம் மூலம் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக தேர்வு செய்யப்படும் ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் மூன்று சக்கர வாகனம், பிளாஸ்டிக் கழிவுகளை நறுக்கி மறுசுழற்சி செய்வதற்கான நறுக்கும் இயந்திரங்கள், சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள், தூய்மை தொண்டர்களுக்கு மேல்சட்டை, கையுறைகள், அடையாள அட்டை, தொப்பி ஆகியவை வழங்கப்படும். இது தொடர்பாக ஊராட்சி தலைவர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மகளிர் குழு கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com