காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் 2-ஆம் தளத்தில் உள்ள கழிப்பறையை, பழைய பொருள்களைப் போட்டு வைக்கும் கிடங்காக மாற்றப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டட வளாகத்தில் தரைத் தளம், முதல் தளம், 2-ஆம் தளம், 3-ஆம் தளம் ஆகியவற்றில் பல்வேறு அரசுத் துறைகள் செயல்பட்டு வருகின்றன. தரைத் தளத்தில் அரசுக் கருவூலம் உள்ளிட்ட அலுவலகங்களும், முதல் தளத்தில் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் உள்ளிட்டவைகளும், 2-ஆம் தளத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்டவைகளும் இயங்கி வருகின்றன. 3-ஆவது தளத்தில் கூட்ட அரங்கு, பேரூராட்சிகளின் துணை இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு, அந்தந்த தளங்களிலேயே கழிப்பறை வசதிகள் உள்ளன.
இவை அனைத்தும் தற்போது பயன்படுத்தாத முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால், அனைவரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள சைக்கிள் நிறுத்தப் பகுதியை திறந்த வெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்தனர்.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-ஆவது தளத்தில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியை பொதுப்பணித் துறை மேற்கொண்டது.
புதிய டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. ஆனால், இந்தப் பணி இன்னும் முழுமை பெறாத நிலையில் அலுவலர்கள் கழிப்பறைகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அதேநேரத்தில் கழிப்பறையில் பழைய மர பீரோக்கள் உள்ளிட்ட தளவாடப் பொருள்களைப் போட்டு வைத்து குடோனாக மாற்றிவிட்டனர். இதனால் கழிப்பறைக்குள் ஊழியர்கள் செல்ல முடிவதில்லை.
மேலும் இந்தக் கழிப்பறைக்கு வெளியே கைகழுவும் வகையில் குழாயுடன் கூடிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொட்டியில் இருந்து வெளியேறும் நீர் வெளியே செல்ல வழி இல்லாததால், அருகில் உள்ள அலுவகத்துக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது.
இதனால் துர்நாற்றத்தில் ஊழியர்கள் பணிபுரிய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கழிப்பறைக்கு எதிரே உள்ள மாடிப்படி குப்பைத் தொட்டியாக்கப்பட்டுள்ளது. அனைத்து கழிவு காகிதங்களும் படிக்கட்டில் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் படிக்கட்டிலும் பயன்பாடற்ற நாற்காலிகள் உள்ளிட்ட தளவாடப் பொருள்கள், கோப்பு மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
தனிநபர் கழிப்பறைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தும் மாவட்ட நிர்வாகம், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இந்தக் குறைபாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.