தமிழகத்தில் கடந்த ஆண்டு தீ விபத்துகளில் 1,594 பேர் சாவு

தமிழகத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த தீ விபத்துகளில் 1,594 பேர் இறந்தனர்; 39 பேர் காயமடைந்தனர். தேசிய அளவில் அதிக தீ விபத்துகள்
தமிழகத்தில் கடந்த ஆண்டு தீ விபத்துகளில் 1,594 பேர் சாவு
Updated on
2 min read

தமிழகத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த தீ விபத்துகளில் 1,594 பேர் இறந்தனர்; 39 பேர் காயமடைந்தனர்.
 தேசிய அளவில் அதிக தீ விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 4-ஆவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், மத்திய பிரதேசம் இரண்டாமிடத்திலும், குஜராத் மூன்றாவது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 1,545 தீ விபத்துகள் ஏற்பட்டன. இந்த விபத்துகளில் 669 ஆண்கள், 925 பெண்கள் என மொத்தம் 1,594 பேர் இறந்தனர். இதேபோல 29 ஆண்கள், 10 பெண்கள் என 39 பேர் காயமடைந்தனர்.
 தேசிய அளவில் 2013-ஆம் ஆண்டை விட 2014-இல் தீ விபத்துகள் 12 சதவீதம் குறைந்தன. அதேபோல மொத்த விபத்துகளில், தீ விபத்துகள் 4.3 சதவீதமாகும். இது 2013-ஆம் ஆண்டு 5.5 சதவீதமாக இருந்தது.
 கடந்த 2013-ஆம் ஆண்டில் தேசிய அளவில் ஏற்பட்ட தீ விபத்துகளில், தமிழகத்தில் ஏற்பட்ட தீ விபத்துகள் 8.3 சதவீதம். இது 2014-ஆம் ஆண்டு 7.7 சதவீதமாகக் குறைந்தது. மேலும் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட 2,001 தீ விபத்துகளில் மொத்தம் 1,969 பேர் இறந்தனர். 2014-இல் ஏற்பட்ட 1,545 தீ விபத்துகளில் 1,594 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
 சமையல் எரிவாயுக் கசிவு: அதிகமான உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் சமையல் எரிவாயு கசிவால் ஏற்படும் தீ விபத்துகளே ஏற்படுத்துகின்றன.
 மாநிலத்தில் சமையல் எரிவாயுக் கசிவு மூலம் மட்டும் 2014-இல் 444 தீ விபத்துகள் ஏற்பட்டன. இந்த விபத்தில் 94 ஆண்கள், 350 பெண்கள் உள்பட 444 பேர் இறந்தனர், 18 ஆண்கள், 2 பெண்கள் என 20 பேர் காயமடைந்துள்ளனர்.
 இதற்கு அடுத்தப்படியாக மின்கசிவு காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் உள்ளன. மின் கசிவு காரணமாக 195 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 169 ஆண்கள், 35 பெண்கள் உள்பட மொத்தம் 204 பேர் இறந்தனர்;
 6 பேர் காயமடைந்தனர். இதற்கு அடுத்த நிலைகளில் பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகள், வாகன விபத்துகளால் ஏற்படும் தீ விபத்துகள் உள்ளன.
 விபத்தைக் குறைக்க வழி: சமையல் எரிவாயு பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக இருப்பதாலும், கவனக்குறைவாகச் செயல்படுவதாலும், இந்த வகை தீ விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பிற தீ விபத்துகளில் 20 சதவீதத்துக்கு மேல் காயம் ஏற்பட்டால் கூட உயிரைக் காப்பாற்றும் வாய்ப்புள்ள நிலையில், சமையல் எரிவாயு தீ விபத்துகளில் 20 சதவீதத்துக்கு குறைவான காயம் ஏற்பட்டால் கூட உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பு குறைவு. எனவே இந்த வகை தீ விபத்துகளில் உயிரிழப்பு அதிகமாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 மின்கசிவால் ஏற்படும் தீ விபத்துகள் கவனக்குறைவாகச் செயல்படுவதினாலும், தொழில்நுட்பக் குறைபாட்டினாலும் ஏற்படுவதாகவும் தீயணைப்புத் துறையினர் கூறுகின்றனர்.
 நவீனமயமாக வேண்டும்: அதேவேளை 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கும், இப்போது ஏற்படும் தீ விபத்துகளுக்கும் பல்வேறு மாறுதல் ஏற்பட்டுள்ளன. ஆனால் அந்த மாறுதல்களுக்கு ஏற்றாற்போல, தமிழக தீயணைப்புத் துறை இன்னும் முழுமையாக நவீனப்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் அதிகமாக தீ விபத்துகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, அதற்கு ஏற்றாற்போல தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதில்லை. இதன் விளைவாக ஒரு தீ விபத்தும் ஏற்பட்டதும், தீயணைப்புத் துறை தனது முழு பலத்தையும் ஒருங்கிணைத்து தீயை அணைப்பதற்கு காலதாமதம் ஏற்படுவதால், உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 தீ விபத்துகளைக் கட்டுப்படுத்த தீயணைப்புத் துறை முழுமையாக நவீனமயமாக்கப்படுவதுடன், மக்களும் சமையல் எரிவாயு, மின்கசிவு போன்றவற்றால் ஏற்படும் தீ விபத்துகள் குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com