32 மாவட்டங்களிலும் போதை மறுவாழ்வு மையங்கள் தொடங்கப்படுமா?

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசின் சார்பில் போதை மறுவாழ்வு மையங்கள் தொடங்க வேண்டும் என
32 மாவட்டங்களிலும் போதை மறுவாழ்வு மையங்கள் தொடங்கப்படுமா?
Updated on
3 min read

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசின் சார்பில் போதை மறுவாழ்வு மையங்கள் தொடங்க வேண்டும் என மருத்துவர்கள், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல்வேறு அரசியல் கட்சிளும், கல்லூரி மாணவர்களும் போராடி வருகின்றனர்.
 அரசியல் ஆதாயத்துக்காக கட்சிகள் இந்தப் பிரச்னையை பெரிதுபடுத்துகிறது என்று அரசு தெரிவித்துள்ளது. மதுவிலக்கை அமல்படுத்தினாலும் மதுவுக்கு அடிமையானவர்கள் அவற்றிலிருந்து மீள்வது என்பது தான் முக்கியம். எனவே மதுவிலக்கு என்பது ஒருபுறம் இருந்தாலும் போதைக்கு ஏற்கெனவே அடிமையாக உள்ளவர்களை மீட்க வேண்டியது அவசியாகிறது.
 புற்றுநோய்: மதுவை அருந்துவதால் வாய், குரல்வளை, கல்லீரல், இரைப்பை, மலக்குடல், வயிறு உள்ளிட்டவற்றில் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது.
 இது குறித்து சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் புற்றுநோய் உளவியல் துறையின் இணைப் பேராசிரியர் விதுபாலா கூறியதாவது:
 புற்றுநோயை உருவாக்கும் காரணிகளில் புகையிலைக்கு சமமாக மதுவும் முன்னிலையில் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே மதுவின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. மதுப் பழக்கத்தால் பல்வேறு வகையான புற்றுநோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. புற்றுநோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் மது விற்பனையை ஒழிக்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
 கிராமங்களில் அதிகம்: தமிழகத்தைப் பொருத்தவரை நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் அதிகமானோர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். மதுவினால் பல்வேறு குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளன. சம்பாதிக்கும் திறன் உடைய 30 முதல் 40 வயது வரையுள்ள ஆண்கள் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர்.
 ஆனால், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் போதை மறுவாழ்வு மையங்கள் தமிழகத்தில் போதிய அளவில் இல்லை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள உளவியல் துறையின் ஒரு பிரிவாக 10 மையங்கள் செயல்படுகின்றன. 6 மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் இந்த மையம் செயல்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 6,800-க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகிறது.
 32 மாவட்டங்களிலும்: தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட தனியார் போதை மறுவாழ்வு மையங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் கிராமங்களில் வசிக்கும் அடித்தட்டு மக்களே இந்தப் பழக்கத்துக்கு அதிக அளவில் அடிமையாகி உள்ளனர். தனியார் மையங்களில் சிகிச்சை பெற அவர்களுக்கு வசதிகள் இல்லாத நிலை உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் அரசின் சார்பில் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். புறநோயாளிகள், உள்நோயாளிகள் இருவருக்கும் சிகிச்சை வழங்கும் வகையில் இந்த மையங்கள் உருவாக வேண்டும்.
 இது குறித்து 35 ஆண்டுகளாக போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் சென்னை டி.டி.கே. மருத்துவமனையின் கெüரவச் செயலாளர் சாந்தி ரங்கநாதன் கூறியதாவது:
 தமிழகத்தில் மத்திய அரசின் சார்பில் 15 படுக்கை வசதிகளுடன் கூடிய 25 போதை மறுவாழ்வு மையங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், தமிழக அரசின் சார்பில் பிரத்யேக போதை மறுவாழ்வு மையங்கள் எதுவும் இல்லை.
 இந்தப் பிரச்னைகளைப் போக்குவதற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 1750 ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கலாம்.
 மதுவுக்கு அடிமையானவர்களுக்கு தேவைப்படும் உளவியல் ஆலோசனைகள், மருத்துவ உதவிகள் அனைத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே வழங்க முடியும். இதற்கென்று தனி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது செயல்பாட்டுக்கு வந்தால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயனடையவும் முடியும் என்று அவர் தெரிவித்தார்.
 போதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டாலும், தமிழக சுகாதாரத் துறையில் வளங்கள் அதிகமாக உள்ளன. அதைப் பயன்படுத்தி சிறப்பாகச் செயல்பட்டு மதுவுக்கு அடிமையானவர்களை எளிதில் மீட்க முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 பாடத் திட்டத்தில் மது குறித்த விழிப்புணர்வு!
 மதுவால் ஏற்படும் தீமைகள் தொடர்பான பாடம் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உளவியல் துறை தலைவர் (பொறுப்பு) டாக்டர் மாலையப்பன் தெரிவித்தார்.
 இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 வளர் இளம்பருவத்தில் உள்ள மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே மது உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகின்றனர். ஆனால் அந்த மாணவர்களுடைய 20, 21 வயதில்தான் இந்த விஷயம் சமூகத்துக்கோ, பெற்றோர்களுக்கோ தெரிய வருகிறது.
 இதனால் மதுப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், உடல் நலக்குறைவுகள், சமூகப் பிரச்னைகள் ஆகியவை தொடர்பான பாடத்தை பள்ளிப் பாடத்திட்டத்திலேயே இணைக்க வேண்டும்.
 மேலும் கோபம், துக்கம் உள்ளிட்ட உணர்ச்சிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பவை உள்ளிட்ட வாழ்க்கைத் திறன் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 மதுவால் மார்பகப் புற்றுநோய்
 மதுவுக்கு அடிமையாகும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 ஆண்களைப் போன்று பெண்களும் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் இந்தப் பழக்கத்துக்கு எளிதில் அடிமையாகிவிடுகின்றனர்.
 தமிழகத்தைப் பொருத்தவரை மதுவுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது. இருப்பினும், போதை மறுவாழ்வு மையங்களுக்குச் செல்லும் பெண்களின் பட்டியலும் உள்ளது.
 மதுப் பழக்கத்துக்கு அடிமையாகும் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 40 சதவீதப் பெண்களுக்கு மதுப்பழக்கமே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
 20 முதல் 50 வயது வரை!
* போதை மறுவாழ்வுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அதிலிருந்து மீளுகின்றனர்.
* போதை மறுவாழ்வுக்கு சுமார் 2 ஆண்டுகள் சிகிச்சை அவசியம்.
* 20 முதல் 50 வயதுடையவர்களே அதிகம் மதுவுக்கு அடிமையாகிறார்கள்.
* போதை மறுவாழ்வுக்குச் செல்வோர்களில் 95 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையானவர்களே.
* மதுவுக்கு அடுத்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள் அதிகம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com