காரைக்கால் மருத்துவமனை உள்நோயாளியிடம் 6 பவுன் சங்கிலி நூதன முறையில் பறிப்பு
காரைக்கால் அரசு மருத்துவமனை உள்நோயாளியிடம் 6 பவுன் சங்கிலியை நூதன முறையில் ஒரு பெண் பறித்து சென்றார். இதுகுறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக புகார் கூறப்படுகிறது.
நாகை மாவட்டம் வாழ்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி மனைவி சரோஜா (65). கிராமத்தில் மாடு முட்டியதால் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு, கடந்த 15 நாள்களாக காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
இவருக்கு துணையாக பகல் நேரத்தில் யாரும் இல்லையென கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பர்தா அணிந்தவாறு வந்த ஒரு பெண், சரோஜாவிடம் சென்று, தனது தந்தையாருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், அவருக்கு துணையாக மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறி அறிமுகம் செய்துகொண்டுள்ளார். பின்னர் அவரை கழிவறைக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார்.
இதுகுறித்து சரோஜாவின் மகன் மாரிக்கண்ணு காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் எந்தவித விசாரணையும் தொடங்கவில்லையென நோயாளி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஏ.க.கவாஸிடம் திங்கள்கிழமை கேட்டபோது, புகார் அளிக்கப்பட்டிருந்தால் உரிய விசாரணை தொடங்கப்படும் என்றார்.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறும்போது, மூதாட்டியிடம் சங்கிலியை பெண் பறித்ததும், செவிலியருக்கு தகவல் கொடுத்துள்ளார். மருத்துவமனையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அங்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், பர்தா அணிந்த ஒரு பெண், பர்தாவை வீசியெறிந்துவிட்டு மருத்துவமனையைவிட்டு வெளியேறுவதை பார்த்தோம். அவர் யார், எங்கு சென்றார் என்பது தெரியவில்லை என கூறினர்.
மூதாட்டி சரோஜா கூறும்போது, எலும்பு முறிவால் படுக்கையைவிட்டு எழுந்திருக்கமுடியவில்லை. மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் யாரும் இங்கு வந்து விசாரிக்கவில்லை. 6 பவுன் சங்கிலி இழுந்து தவிக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

