அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலையை ஒட்டியுள்ள கோட்டைத்தலைவாசல் தெருவில் குடியிருந்து வருபவர் மாரிக்கனி (60). இவர் ஓய்வு பெற்ற அரசு தணிக்கையாளர். இவரது மனைவி அமுதா. இவர் கிருஷ்ணப்பேரி காமாக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
இருவர் மட்டுமே வீட்டில் உள்ளார்கள். 5-ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் வெளியே சென்றுவிட்டு, இருவரும் வீட்டினுள் செல்ல கதவை திறந்துள்ளார்கள். அமுதா திறந்து உள்ளே சென்று, சமையல் அறையில் இருந்துள்ளார். மாரிக்கனி பின்னால் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே செல்ல முயன்றபோது, வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி ஒளிந்திருந்த 3 கொள்ளையர்கள் மாரிக்கனியுடன் சேர்ந்து வீட்டினுள் சென்றுள்ளார்கள். கொள்ளையர்கள் கதவைப் பூட்டிவிட்டு, மாரிக்கனியை நாற்காலியில் அமர வைத்து கை, கால்களை கட்டி வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்துள்ளார்கள். இது சமையல் அறையில் இருந்த அமுதாவிற்கு தெரியவில்லை.
பின்னர் அமுதாவிடம் சென்ற கொள்ளையர்கள் கத்தி முனையில் அவர் அணிந்திருந்த செயின், தோடு, பீரோவில் இருந்த நகைகள் என 51 பவுன் நகைகளை எடுத்துள்ளனர். மேலும் ரொக்கப் பணம் ரூ.1.40 லட்சத்தையும் எடுத்துள்ளனர். பின்னர் ஏ.டி.எம். கார்டை கொள்ளையர்கள் கேட்டுள்ளார்கள். அதனை அமுதா கொடுத்துள்ளார். வீட்டில் மாரிக்கனியை இரு கொள்ளையர்கள் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். மாரிக்கனியின் இரு சக்கர வாகனத்தில் ஒரு கொள்ளையன், அவரது ஹெல்மட்டை அணிந்து கொண்டு அமுதாவை ஏற்றிக் கொண்டு மாரியம்மன்கோவில் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்றுள்ளார்.