ஒரே நாளில் அனைத்து பிராந்தியங்களிலும் திட்ட அமலாக்கம் - நடைமுறைக்கு வராத புதுச்சேரி முதல்வரின் உத்தரவு

புதுச்சேரியில் ஒரு திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றால் அதே நாளில் காரைக்கால் உள்ளிட்ட பிராந்தியங்களிலும் திட்ட அமலாக்கம் இருக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்தும், மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் அவரது உத்தரவு அமல்படுத்தவில்லையென பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
Updated on
1 min read

புதுச்சேரியில் ஒரு திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றால் அதே நாளில் காரைக்கால் உள்ளிட்ட பிராந்தியங்களிலும் திட்ட அமலாக்கம் இருக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்தும், மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் அவரது உத்தரவு அமல்படுத்தவில்லையென பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

புதுச்சேரி அரசால் எந்தவொரு திட்டம் நடைமுறைப்படுத்தினாலும் தலைநகர் புதுச்சேரியில் அறிமுகம் செய்தும் பிறகொரு நாளில் காரைக்காலில் அவை வழங்கப்படுவதுமாக இருக்கிறது. திட்டம் தொடங்கிய நாளிலேயே காரைக்கால் உள்ளிட்ட பிற பிராந்தியங்களிலும் வழங்கவேண்டும். பிறகொரு நாள் என்கிறபோது, திட்டத்தை அந்தந்த பிராந்தியங்களில் மக்களுக்கு கொண்டு செல்ல போராடவேண்டிய நிலை இருப்பதாக, கடந்த 11-ம் தேதி முதல்வர் ரங்கசாமி காரைக்காலில் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டனர்.

அப்போது பேசிய முதல்வர், எந்தவொரு திட்டம் புதுச்சேரியில் நடைமுறைக்கு கொண்டுவந்தாலும், அதே நாளில் காரைக்கால் உள்ளிட்ட பிராந்தியங்களில் அந்த பகுதி அமைச்சர், எம்.எல்.ஏ.க்களால் நடைமுறைப்படுத்தவேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இவரது உத்தரவு காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கும் பொருந்தக்கூடியது.

முதல்வர் உத்தரவுக்குப் பிறகு முதல் திட்டமாக மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினி வழங்கும் திட்டம் புதுச்சேரி பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பிற பிராந்தியங்களில் அதே நாளில் இது நடைமுறைப்படுத்தவில்லை.  முதல்வரின் உத்தரவை அதிகாரிகள் மதித்து செயல்படவில்லையா அல்லது முதல்வரே பிறகொரு நாளில் பிற பிராந்தியங்களில் வழங்கலாமென கூறிவிட்டாரா என்பதே புரியாத புதிராகவே உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com