வெள்ளத்தில் சிக்கிய 800 கர்ப்பிணிகள் மீட்பு

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 2.40 லட்சம் பேரை மீட்டதாகவும், இவர்களில் 800 பேர் கர்ப்பிணிகள் என்றும் தீயணைப்பு,
வெள்ளத்தில் சிக்கிய 800 கர்ப்பிணிகள் மீட்பு
Updated on
2 min read

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 2.40 லட்சம் பேரை மீட்டதாகவும், இவர்களில் 800 பேர் கர்ப்பிணிகள் என்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினர் தெரிவித்தனர்.
 பலத்த மழை, வெள்ளத்தால் சிக்கியிருந்த மக்களை மீட்க சென்னையில் இருந்த சுமார் ஆயிரம் தீயணைப்புப் படை வீரர்களும், பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 500 தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
 வெள்ளம் அதிகமாகப் பாதிப்பு ஏற்படுத்திய தாம்பரம், முடிச்சூர், பெரும்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம்,சோழிங்கநல்லூர், ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு மாம்பலம், ஆர்.கே.நகர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலேயே தீயணைப்புப் படையினர் துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
 22 இடங்களில் தயார் நிலையில் வீரர்கள்: வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 500 தீயணைப்புப் படை வீரர்களும் சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர். அதேபோல வெள்ளம் அதிகமாக ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 22 இடங்களில் தீயணைப்புப் படை வீரர்கள் படகுகளோடு தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.
 42 இடங்களில் 75 படகுகளில் 2.4 லட்சம் பேர் மீட்பு: இவ்வாறு 42 இடங்களில் நடைபெற்ற மீட்புப் பணியில், சுமார் 75 படகுகளை தீயணைப்புப் படை வீரர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். செவ்வாய்க்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற மீட்புப் பணியில் தீயணைப்புப் படை வீரர்கள் மட்டும் சுமார் 2.4 லட்சம் பேரை மீட்டதாக அத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
 800 கர்ப்பிணிகளும் மீட்பு: இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:
 தமிழகத்தில் நாங்கள் சந்தித்த சுனாமி, தானே புயல் ஆகியவற்றின் மீட்பு பணிக்கு பின்னர், சந்தித்த மிகப் பெரிய மீட்பு பணியாகும். பணி நிறைவு இன்னமும் நிறைவு பெறவில்லை. திங்கள்கிழமை தொடங்கி இதுவரை நாங்கள் 2,04,682 பேரை மீட்டுள்ளோம். இதில் 800 கர்ப்பிணிகளும் அடங்குவர்.
 வீடுகளில் இருந்து வெளியே அழைத்து வந்து, படகுகளில் ஏற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தோம்.
 650 நோயாளிகளும் மீட்பு: பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து 410 நோயாளிகளை மீட்டோம். இதேபோல், பிற மருத்துவமனைகளில் இருந்தும், வீடுகளில் இருந்தும் 650 நோயாளிகளை மீட்டோம்.
 8 ஆயிரம் அழைப்புகள்: கட்டுப்பாட்டு அறைக்கு சாதாரண நாள்களில் 100 அழைப்புக்கு மேல் வராது. மீட்பு உதவிக்கு மட்டும் சுமார் 8 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன.
 எனவே, கூடுதலாக ஊழியர்களை நியமித்து, தகவல்களை உடனுக்குடன் பெற்று மீட்புப் பணியை விரைவுபடுத்தினோம்.
 குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக, மண்டல வாரியாகப் பிரித்து பணியை மேற்கொண்டோம். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், வாக்கிடாக்கியை பயன்படுத்தினோம்.
 வெள்ள மீட்புப் பணியால் பல்வேறு புதிய அனுபவங்கள் கிடைத்துள்ளன. இது எதிர்காலங்களில் இயற்கை பேரிடர் ஏற்படும்போது பயன்படும் என்றார் அவர்.
105 வளர்ப்புப் பிராணிகளும் மீட்பு
 சென்னையில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 105 வளர்ப்புப் பிராணிகளை தீயணைப்புப் படை வீரர்கள் மீட்டுள்ளனர்.
 குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததும், மக்கள் தப்பிக்க தங்களது உடமைகளை கூட எடுக்காமல் வெளியேறினர். அப்போது, அவர்கள் ஆசையாக வளர்ந்து வந்த நாய், பூனை, கிளி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளும், பறவைகளும் சிக்கிக் கொண்டன.
 இந்த நிலையில் தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடும்போது, நாய்கள், பூனைகள், கூண்டுகளோடு இருந்த கிளிகள் உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர். இவற்றை அவர்களது உரிமையாளரிடமும், பளூ கிராஸ் நிர்வாகிகளிடம் ஒப்படைத்ததாக தீயணைப்பு படை வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
 இவ்வாறு 105 வளர்ப்புப் பிராணிகளை மீட்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com