வெள்ளத்தின் போது காப்பாற்றிய இஸ்லாமியர் பெயரை குழந்தைக்கு சூட்டிய இந்து தம்பதி

கழுத்து அளவு நீரில் இருந்து காப்பாற்றப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ஒருவர், தன்னை காப்பாற்றிய இஸ்லாமியர் நினைவாக அவரது பெயரையே தன் குழந்தைக்கு சூட்டியுள்ளார்.
வெள்ளத்தின் போது காப்பாற்றிய இஸ்லாமியர் பெயரை குழந்தைக்கு சூட்டிய இந்து தம்பதி
Updated on
1 min read

சென்னை மாநகரில் கொட்டி தீர்த்த மழை, நகர மக்களின் சகிப்புதன்மைக்கும், சமய ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளது. கழுத்து அளவு நீரில் இருந்து காப்பாற்றப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ஒருவர், தன்னை காப்பாற்றிய இஸ்லாமியர் நினைவாக அவரது பெயரையே தன் குழந்தைக்கு சூட்டியுள்ளார்.

டிசம்பர் முதல் வாரம் பெய்த கன மழையில் சென்னை மாநகரமே ஏறத்தாழ தண்ணீரில் தத்தளித்தது. பெரும்பாலான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்த நிலையில் நிறைய வீடுகளின் தரைத்தளம் முழுவதும் மூழ்கியது.

வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு ஜாதி, மதம் பாராமல் பல்வேறு இடங்களிலிருந்து உதவிக் கரம் நீட்டப்பட்டன. வெள்ளத்தின் போது நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் யூனிஸ். முதுநிலை பட்டதாரியான இவர், கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி பெய்த கன மழையை தொடர்ந்து, கடுமையான வெள்ளம் பாதித்த ஊரப்பாக்கம் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் கடுமையான வலியால் அலறினார். யூனிஸ் அங்கு சென்று பார்த்தபோது நிறைமாத கர்ப்பிணியான சித்ரா என்ற அந்த பெண், கழுத்தளவு நீரில் பிரசவ வேதனையால் அவதியுற்றது தெரியவந்தது.

இதையடுத்து, சித்ராவை படகு மூலம் பெருங்குளத்தூருக்கு எடுத்த சென்ற யூனிஸ் அங்கிருந்த ஒரு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, மீண்டும் நிவாரணப் பணிக்கு திரும்பிவிட்டார்.

சில நாள்களுக்குப் பின் யூனிஸின் தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அதற்கு யூனிஸ் என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் சித்ராவின் கணவர் மோகன் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள யூனிஸ், நான் இன்னும் அக்குழந்தையை சென்று பார்க்கவில்லை. என்னால் மட்டும் சித்ரா காப்பாற்றபடவில்லை. என்னோடு இணைந்து பணியாற்றிய நண்பர்கள் மற்றும் படகு உதவி அளித்த பெசன்ட் நகர் மீனவர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்றார். ஊரப்பாக்கத்திலிருந்து பெருங்குளத்தூர் வரை படகில் சென்ற அந்த 15 நிமிஷம் என்பது மறக்க முடியாதது.

மேலும், அக்குழந்தையின் முழு படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாக வாக்களித்துள்ளார் யூனிஸ்.

இதனிடையே வெள்ளத்தால் தானும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோகன் தனது வருமானத்தின் 50 சதத்தை வெள்ள நிவாரணப் பணிக்கு வழங்கியுள்ளார்.

மனிதம் இன்னும் சாகவில்லை என்பதையே இச்சம்பவம் நினைவுப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com