கூடுதல் லாபம் தரும் இயற்கை விவசாய முறை நெல் சாகுபடி

இயற்கை விவசாய முறையில் நெல் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமன்றி மண் வளத்தையும் பாதுகாக்க முடியும் என்கிறார் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) முருகன்.
கூடுதல் லாபம் தரும் இயற்கை விவசாய முறை நெல் சாகுபடி
Published on
Updated on
3 min read

இயற்கை விவசாய முறையில் நெல் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமன்றி மண் வளத்தையும் பாதுகாக்க முடியும் என்கிறார் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) முருகன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பல்வேறுபட்ட கால நிலைகள், மண் வகைகளில் நெல்பயிர், அதைச் சார்ந்த பயிர் சுழற்சி முறையை கடைப்பிடித்து வருவதால், அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டியுள்ளது.

இதன் விளைவாக மண்வளம், மகசூல் குறைகிறது. நிலத்தடி நீர் மாசு, சுற்றுப்புற மாசு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தக் குறைபாடுகளில் இருந்து விடுபடுவதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த வழிமுறையாக உள்ளது.

அதிலும் உலக அளவில் நெல்லை உணவுப் பயிராகப் பயன்படுத்துவதால், இயற்கை முறையில் நெல் சாகுபடி மிக, மிக அவசியமாகிறது.

இயற்கை நெல் சாகுபடி என்பது, செயற்கை உரங்களையோ, பூச்சிக்கொல்லி மருந்துகளையோ பயன்படுத்தாமல் இயற்கை சார்ந்த எருக்கள், பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.

இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு வெளிநாடு, உள்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், பெருநகரங்களில் இயற்கை வேளாண் விளை பொருள்களுக்காக தனியாகக் கடைகள் தொடங்கப்படுவதோடு, கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராகி வருகின்றனர்.

எனவே இயற்கை முறையில் நெல் உற்பத்தி செய்தால், விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமல்லாமல், மண் வளத்தையும் பாதுகாக்கலாம்.

நெல் சாகுபடிக்கேற்ற இயற்கை வேளாண் தொழில் நுட்பங்கள்: இயற்கை வேளாண்மையில் நல்லத் தரமான சன்ன ரகங்களான வெள்ளைப் பொன்னி, ஆடுதுறை 43, 45, 49, கோ-51, பூச்சி, நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களை உபயோகப்படுத்தினால் நல்ல மகசூல் கிடைப்பதோடு கூடுதல் விலையும் பெற முடியும். இயற்கை சாகுபடி முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை உபயோகிக்க வேண்டும்.

விதை நேர்த்தி: விதை நேர்த்தி செய்வதற்கு ரசாயன பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்து உயிர் உரங்கள், தாவரம் சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.

1 கிலோ விதைக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம், 10 கிராம் பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் என்ற அளவில் உபயோகித்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால், இளம் பயிரில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து மண் வழியில் பரவும் நோய்கள் தவிர்க்கப்படும்.

நாற்றாங்கால் தயாரிப்பு: நாற்றாங்கால் தயாரிப்புக்கு 1 சென்டுக்கு 100 கிலோ தொழு உரம், 50 கிலோ மண் புழு உரம், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.

நடவுப் பணி: நடவு வயலில் கடைசி உழவின்போது, 1 ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும்.

அல்லது நடவு வயலில் நடுவதற்கு முன்பு பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப் பூண்டு, சணப்பை, கொழுஞ்சி விதைகளை 20 கிலோ விதைத்துப் பிறகு 45 நாள்கள் கழித்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழ வேண்டும்.

அவ்வாறு செய்யும்போது 10 டன்கள் வரை பசுந்தாள் உரங்கள் கிடைப்பதோடு, 50 முதல் 80 கிலோ வரை தழைச் சத்தும் கிடைக்கிறது.

பண்ணையில் காணப்படும் வேம்பு, புங்கம், கிளைசிரிடியா, செஸ்பானியா, சூபாபுல், மரத்தின் சிறுக் கிளைகளை உடைத்து வந்து சரியான ஈரப் பதத்தில் நிலத்தில் நன்கு மட்கும்படி மடக்கி உழ வேண்டும்.

பசுந்தாள் உரப் பயிர்களை வளர்க்க முடியாவிட்டால், 1 ஏக்கருக்கு 5 டன் மண் புழு உரம் போடலாம்.

சூடோமோனாஸ், உயிர் பூஞ்சானக் கொல்லியை ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் நடுவதற்கு முன்பாக இட வேண்டும்.

நடவு வயலில் அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட், பால்போ பாக்டீரியா 10 பாக்கெட் ஆகியவற்றை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

அசோலா உயிர் உரத்தை 1 ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் நடவு செய்த 3 முதல் 5 நாள்களுக்குள் இட்டு, நன்கு வளர்ந்த அசோலாவை (20 நாள்கள் கழித்து) கோனோவீடர் மூலம் நன்கு அழுத்தி விடுவதால், வயல்களுக்கு தழைச் சத்து உரமாகக் கிடைக்கிறது.

களை எடுக்கும் கருவிகளான கோனோவீடர் அல்லது ரோட்டரி கருவி ஆகியவற்றைக் கொண்டு நடவு செய்த 15 நாள்கள் முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதால் களைகள் குறைந்து மண் காற்றோட்டம் அடைவதுடன், வேரின் வளர்ச்சியும் அதிகரிக்கிறது. நடவு வயலில் மேல் உரமாக 1 ஏக்கருக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, பயிர் தூர் தட்டும் பருவத்தில் போட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு முறைகள்: இயற்கை நெல் சாகுபடியில் பூச்சி, நோய் மேலாண்மை 1 சவாலாக விளங்குகிறது. இருந்த போதிலும் ரசாயனப் பூச்சிக் கொல்லி அல்லாத ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை ஆரம்பத்தில் இருந்து ஒழுங்காக கடைப்பிடிப்பதால், பூச்சி, நோய்களை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.

கோடை உழவு செய்வதால், மண்ணில் உள்ள பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படுகின்றன.

வரப்பில் உள்ள களைகளை சுத்தமாக வெட்டிவிட வேண்டும். சரியான முறையில் நீர்ப் பாசனம் செய்வதுடன் தகுந்த வடிகால் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

அதிக அளவில் தழைச்சத்து இடாமல் இருக்க வேண்டும். இனக் கவர்ச்சி பொறி, விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டம், எண்ணிக்கையைக் கண்காணித்து தகுந்த கட்டுப்பாடு முறைகளைக் கையாளுதல் வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கக் கூடிய தாவர வகைப் பூச்சி மருந்துகள், உயிரியல் பூச்சி நோய்த் தட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

பசுவில் இருந்து கிடைக்கக் கூடிய 5 பொருள்களான சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா (3 சதவீதம்) இலை வழி ஊட்டமாக தெளிக்க வேண்டும்.

குருத்துப் புழு, இலைச் சுருட்டுப் புழு கட்டுப்படுத்தும் முறை: 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும்.

ட்ரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணி அட்டையை ஏக்கருக்கு 2 சி.சி. அளவில் 1 வார இடைவெளியில் 3 முறைக் கட்ட வேண்டும். பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் உயிரியல் காரணியை ஏக்கருக்கு 400 கிராம் வீதம் தெளிக்க வேண்டும்.

தத்துப்பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சி கட்டுப்படுத்துதல்: சரியான அளவு தழைச் சத்து இட வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.

5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு அல்லது 2 சதவீதம் வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.

குலை நோய் கட்டுப்படுத்துதல்: வரப்பில் உள்ள களைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.

அதிகமான அளவு தழைச்சத்து இடக் கூடாது. எதிர் சக்தி கொண்ட கோ-47 ரகம் சாகுபடி செய்ய வேண்டும். சூடோமோனாஸ், உயிரியல் காரணி ஆகியனவற்றை நடவு செய்த 45-ஆம் நாள் முதல் 10 நாள்கள் இடைவெளியில் 0.2 சதவீதத்தில் 3 முறை தெளிக்க வேண்டும்.

இலையுறை அழுகல், இலையுறை கருகல், பாக்டீரியா இலை கருகலை கட்டுப்படுத்தல்: சூடோமோனாஸ், உயிரியல் காரணி ஆகியவற்றை நடவு செய்த 45-ஆம் நாள் முதல் 10 நாள்கள் இடைவெளியில் 0.2 சதவீதம் என்ற வீதத்தில் 3 முறை தெளிக்க வேண்டும். 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 2 சதவீதம் வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.

ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். பசுவின் சாணம் 20 சதவீதம் கரைசலை நோய் புலப்படும் தருணத்தில் 15 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தை 044 - 2745 2371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் உதவிப் பேராசிரியர் முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com