சிமென்ட் மூலப்பொருளாக மாறும் சாய, தோல் திடக்கழிவுகள்

சிமென்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக சாய, தோல் திடக்கழிவுகளை பயன்படுத்த சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அபாயகரமான சாய, தோல் திடக்கழிவுகளை அழிக்கும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது.
Updated on
2 min read

சிமென்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக சாய, தோல் திடக்கழிவுகளை பயன்படுத்த சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அபாயகரமான சாய, தோல் திடக்கழிவுகளை அழிக்கும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுச்சூழல் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பில் மாநிலம் முழுவதும் 3,067 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவை சாய, தோல், எண்ணெய், ரப்பர் உற்பத்திப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவைகள் தயாரிக்கும் ஆலைகளாகும்.

இவற்றில் இருந்து வெளியாகும் அபாயகரமான திடக்கழிவுகளின் அளவு, அந்தந்த ஆலைகளில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கும்மிடிப்பூண்டியில் அரசால் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அபாயகர திடக்கழிவு மேலாண்மை நிறுவனக் கிடங்குக்கு அனுப்பப்படும்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு வரை மாநிலம் முழுவதும் உள்ள ஆலைகளில் இருந்து 4.81 லட்சம் டன் அபாயகரமான திடக்கழிவுகள் உற்பத்தியாகியுள்ளன. இதில், 1.69 லட்சம் டன் மறுசுழற்சி செய்யக்கூடியதும், 2.92 லட்சம் டன் நிலச்சமன்பாடு செய்யக்கூடியதும், 21,000 டன் எரிபொருளுக்கு பயன்படக்கூடியதும் ஆகும்.

இவை தவிர, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் 8,000 டன்னும், தோல் ஆலைகள் அதிகம் காணப்படும் ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் டன் கணக்கிலும் கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த அபாயகரமான திடக்கழிவுகளை அகற்றுவதில் சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படும் என்பதால் அக்கழிவுகளை அழிப்பது சுற்றுச்சூழல் துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த திடக்கழிவுகளை 3 சிமென்ட் ஆலைகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனால், கும்மிடிப்பூண்டி கிடங்கில் உள்ள கழிவுகள் குறையத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

சாய ஆலைகளில் காஸ்டிக் சோடா, ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம் சல்பேட், சோடியம் கார்பனேட், சோடியம் குளோரைடு, சாயங்கள் மூல வேதிப் பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சாய ஆலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும்போது சுண்ணாம்பு, இரும்பு சல்பேட், ஃபெரிக்குளோரைடு, அலுமினியம் சல்பேட் போன்ற வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கழிவுகளில், சிமென்ட் ஆலைகளுக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களான சுண்ணாம்பு (75- 80 சதவீதம்), இரும்பு சல்பேட் (8- 9 சதவீதம் வரை) உள்ளன.

தோல் ஆலைகளில் குளோரைடு, சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட், அமோனியம் குளோரைடு போன்றவை மூல வேதிப்பொருள்களாகவும், தோல் ஆலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுண்ணாம்பு, இரும்பு சல்பேட், ஃபெரிக்குளோரைடு, அலுமினியம் சல்பேட் போன்ற வேதிப்பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, தோல் ஆலை திடக்கழிவுகளில் இருந்து சிமென்ட் ஆலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களான சுண்ணாம்பு (8- 10 சதவீதம்), கரிம வேதியியல் திடக்கழிவுகள் (30- 35 சதவீதம்) கிடைக்கின்றன. அதனால், இந்த திடக்கழிவுகளை சிமென்ட் ஆலைகளுக்குப் பயன்படுத்த மாற்று ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

திடக்கழிவு இல்லா முதல் மாநிலம்

இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறியது:

ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், காஞ்சிபுரம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் அமைந்துள்ள சாய ஆலைகளில் இருந்து ஆண்டுக்கு 29,427 டன் திடக்கழிவுகள் உற்பத்தியாகிறன்.

ஈரோடு, திண்டுக்கல், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள தோல் ஆலைகளில் இருந்து ஆண்டுக்கு 36,012 டன் திடக்கழிவுகள் உற்பத்தியாகிறன.

தமிழகத்தில் உள்ள 24 சிமென்ட் ஆலைகளில் மாதம் ஒன்றுக்கு சுமார் 35 லட்சம் டன் சுண்ணாம்பு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சிமென்ட் ஆலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருள்களுடன் 1.5 முதல் 2 சதவீதம் வரை சாய, தோல் ஆலை திடக்கழிவுகளை உபயோகிக்கலாம். இவ்வாறு பயன்படுத்தப்படுவது 2 சதவீதம் என கணக்கிட்டால் மாதம் ஒன்றுக்கு 70 ஆயிரம் டன் திடக்கழிவுகளை, சிமென்ட் ஆலைகளில் பயன்படுத்தலாம். இதனால், திடக்கழிவுகள் இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க முடியும்.

இதுவரை அரியலூர், கோவை, மதுக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள 3 சிமென்ட் ஆலைகள் இந்த திடக்கழிவுகளைப் பயன்படுத்தி வருகின்றன. பிற சிமென்ட் ஆலை நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இக்கழிவுகளை சிமென்ட் ஆலைகள் பயன்படுத்தும்போது அவர்களுக்கு மூலப்பொருள்கள் செலவு இரு மடங்கு குறைவதாக ஆலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே, அபாயரமான திடக்கழிவு இல்லாத முதல் மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com