
எம்.எஸ்.வி என்று தமிழ் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன்(87) இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலாமானார்.
மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம்எஸ் விஸ்வநாதன் பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928-ல் பிறந்தார். அவரது பெற்றோர் மனயங்கத் சுப்பிரமணியன் - நாராயணி குட்டி.
* இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது கிடையாது. ஆனால் அவரது பேச்சு தெளிவும், திகைப்பும் நிறைந்தது. பல மொழி அறிந்த வித்தகர்.
* 4 வயதில் தந்தையை இழந்தவர், கண்ணனூரில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படித்ததில்லை. தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். 13 வயதில் திருவனந்தபுரத்தில் தனது முதல் மேடைக் கச்சேரியை நடத்தினார் எம்எஸ்வி.
* அன்பு மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!.
* எத்தனை சோதனைகள் வந்தாலும் இஷ்ட தெய்வமான முருகனை, எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான்.
* குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்நாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றியவர்.
* நடிகர், பாடகராக வரவேண்டும் என்பது அவரது விருப்பம். அது நிறைவேறவில்லை. சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். 1950-களில் எஸ்எம் சுப்பையா நாயுடு மற்றும் சிஆர் சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார். பிறகு, இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர்.
* தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்.
* சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை 700 திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்தனர்.
* 1952-ல் தொடங்கி, 1965 வரையான 13 ஆண்டுகளில் இருவரும் இணைந்து காலத்தால் மறக்க முடியாத பல காவியப் பாடல்களைப் படைத்தனர். இருவரும் இணைந்து 100-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். இசையமைத்த 75 படங்களின் பெயர்கள்தான் பதிவுகளில் இடம்பெற்றுள்ளன.
* டிகே ராமமூர்த்தியைப் பிரிந்த பிறகு, தனியாக 700-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்தார் எம்எஸ் விஸ்வநாதன். கடைசியாக அவர் இசையமைத்த படம் சுவடுகள்.
* எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பிரிந்த இருவரும், மீண்டும் 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் படத்தில்தான் இணைந்தனர்.
* தமிழ் தவிர, மலையாளத்தில் 74 படங்களுக்கும், தெலுங்கில் 31 படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
* `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்,’ `காதலா.... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்ததுள்ளார். நகைச்சுவையிலும் கொடி கட்டியவர் எம்.எஸ்.வி.
* பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகிய 4 இயக்குநர்களிடம் அதிகம் பணிபுரிந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்.
* ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார். ‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர்.
* கர்நாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
* இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.
* இந்தியாவில் முதன் முதலில் முழு ஆர்கெஸ்ட்ராவை சேலத்தில் மேடையைற்றியவர் எம்.எஸ்.வி
* ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையிலேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார்.
* நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்ற முத்தான முத்தல்லவோ பாடலே 20 நிமிடத்தில் இசையமைத்தார்.
* தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு மெல்லிசை மன்னன் பட்டம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் சூட்டப்பட்டது.
* மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர்.
* தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றவர்.
* காலத்தால் அழியாத பல காவியப் பாடல் தந்த எம்எஸ் விஸ்வநாதனின் மனைவி ஜானகி கடந்த 2012-ம் ஆண்டு மறைந்தார்.
* கடந்து வந்த பயணத்தில் அவர் இசையமைப்பதை, பாடுவதை மட்டுமே சிரத்தையாய் மேற்கொண்டாரே தவிர, அவற்றைப் பதிவாக ஆவணப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவில்லை.
* தனது இந்த சாதனையை அவர் எந்த மேடையிலும் காட்டிக் கொண்டது கூட இல்லை.
எம்.எஸ்.வி அறிமுகப்படுத்திய பாடகர்கள்
* ஜெயச்சந்திரன் - திரைப்படம் - மணிபயல்
* வாணிஜெயராம் - திரைப்படம் - தீர்க்க சுமங்கலி
* வசந்தா - திரைப்படம் - சுமதி என் சுந்தரி
* எம்.எல்.ஸ்ரீகாந்தி - திரைப்படம் - உத்தரவின்றி உள்ளே வா
* ஜி.கே. வெங்கடேஷ் - திரைப்படம் - பாவ மன்னிப்பு
* கல்யாணி மேனன் - திரைப்படம் - சுஜாதா
* புஷ்பலதா - திரைப்படம் - ராஜபாட் ரங்கத்துரை
* சாவித்திரி - திரைப்படம் - வயசு பொண்ணு
* ஷேக் முகமது - திரைப்படம் - ஆபூர்வ ராகங்கள்
* ஷோபா சந்திரசேகர் - திரைப்படம் - நம்நாடு
எம்.எஸ்.வி அறிமுகப்படுத்திய கவிஞர்கள்
* புலமைப்பித்தன்
* முத்துலிங்கம்
* நா.காமராசன்
* ரோஷானாரா பேகம் - குங்குமப்பொட்டின் மங்கலம் பாடல் (குடியிருந்த கோயில்)
எம்.எஸ்.வி நடித்த படங்கள்
எம்.எஸ்..வி கமல், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார்.
* காதலா காதலா
* காதல் மன்னன்
* தகதிமிதா
* அன்பே வா (புதியது)
* மஹாராஜா
* தில்லு முல்லு (ரீ-மேக்)
எம்.எஸ்.வி - இசைஞானி இளையராஜா கூட்டணி
எம்.எஸ்.வி இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து சில படங்களில் பணியாற்றியுள்ளார்.
* மெல்ல திறந்ததது கதவு
* செந்தமிழ் பாட்டு
* விஷ்வ துளசி
ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட இளையராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம் எனக் கூறலாம்.
எம்.எஸ்.வி - வாலி கூட்டணி
கண்ணதாசனை போன்று கவிஞர் வாலியுடன் ஏராளமான படங்களில் எம்.எஸ்.வி இணைந்து பணியாற்றியுள்ளனர்.
* சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ... - சந்திரோதயம்
* ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - அன்பே வா
* ஒன்னா இருக்க கத்தக்கணும் - அன்பு கரங்கள்
* கண்போன போக்கிலே கால் போகலாமா - பணம் படைத்தவன்
* காத்திருந்த கண்களே - மோட்டார் சுந்தரம் பிள்ளை
* தரைமேல் பிறக்க வைத்தான் - படகோட்டி
* கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி
* காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம்
* ஏன் என்ற கேள்வி - ஆயிரத்தில் ஒருவன்
* மன்னவனே அழலாமா - கற்பகம்
* நாளை இந்த வேளை பார்த்து - உயர்ந்த மனிதன்
* மெல்லப்போ மெல்லப்போ - காவல்காரன்
* ஆண்டவனே உன் பாதங்களில் - ஒளிவிளக்கு
* வண்ணக்கிளி சொன்ன மொழி - தெய்வத்தாய்
* நான் அனுப்பவது கடிதம் அல்ல - பேசும் தெய்வம்
* நல்ல இடம் வந்த இடம் - கலாட்டா கல்யாணம்
* அங்கே சிரிப்பவர்கள் - ரிக்ஷாகாரன்
* சொல்லத்தான் நினேக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன்
* நிலவு ஒரு பெண்ணாகி - உலகம் கற்றும் வாலிபன்
* ஒரு தாய் வயிற்றில் - உரிமைக்குரல்
* மல்லிகை முல்லை பூப்பந்தல் - அன்பே ஆருயிரே
* ஒன்றும் அறியாத பெண்ணோ --- இதயக்கனி
* நினைத்ததை நடத்தியே முடிப்பவன் - நம் நாடு
* கண்ணன் எந்தன் காதலன் - ஒரு தாய் மக்கள்
* நான் அளவோடு ரசிப்பவன் - எங்கள் தங்கம்
* வெற்றி மீது வெற்றி - தேடி வந்த மாப்பிள்ளை
* மாதவி பொன் மயிலால் - இருமலர்கள்
* நான் ஆணையிட்டால் - எங்க வீட்டுப் பிள்ளை
* பொங்கும் கடலோசை - மீனவன் நண்பன்
* இதோ எந்தன் தெய்வம் - பாபு
தமிழ் சினிமாவின் பொற்காலம்
தமிழ் சினிமாவில் மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு இயக்குநர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம் ஆகும்.
பாசமலரில் ஆரம்பித்த பாட்டு
சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்த மெல்லிசை மன்னர். உச்சஸ் தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி.
தமிழ்தாய் வாழ்த்துக்கு இசை
தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசை அமைத்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேரும். முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது.
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு.
உலக இசையை தமிழில் புகுத்திய பெருமை
உலக இசையை தமிழில் புகுத்திய பெருமை இவரேயே சாரும். எகிப்திய இசையை பட்டத்து ராணி பாடலிலும், பெர்சியன் இசையை நினைத்தேன் வந்தாய் நூறு வயது பாடலிலும், ஜப்பானிய இசையை பன்சாயி காதல் பறவை பாடலிலும், லத்தீன் இசையை யார் அந்த நிலவு பாடலிலும், ரஷ்ய இசையை கண் போன போக்கிலே கால் போகலாமா பாடலிலும், மெக்சிகன் இசையை முத்தமிடும் நேரமெப்போ பாடல்களிள் மூலம் கொண்டு வந்தவர்.
தன் இசையறிவை அறியாத எம்.எஸ்.வி
வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாமால் மனப்போக்கினால் நிகழ்ந்தவை இவை.
எம்.எஸ்.வி - ஜெயலலிதா பாராட்டு
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது. 1950-களிலும், 1960-களிலும் இவர்கள் மெட்டமைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பெற்றுள்ளன. என்று 2012-ல் நடைபெற்ற விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
எம்.எஸ்.வி இசைக்கு கட்டுப்பட்டவர்கள்
சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி ஆன்மீக இசையில் இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டு பாடி இருக்கிறார்கள்
எம்.எஸ்.வி இசையமைத்த திரைப்படங்கள்
* போன மச்சான் திரும்பி வந்தான் (1954)
* தெனாலி ராமன் (1956)
* கலங்கரை விளக்கம் (திரைப்படம்) (1965)
* குழந்தையும் தெய்வமும் (1965)
* நீலவானம் (1965)
* பஞ்சவர்ணக்கிளி (1965)
* அன்பே வா (1966)
* சந்திரோதயம் (1966)
* உயர்ந்த மனிதன் (1968)
* அலைகள் (திரைப்படம்) (1973)
* பாக்தாத் பேரழகி (1973)
* பாரத விலாஸ் (1973)
* எங்கள் தாய் (1973)
* கங்கா கௌரி (1973)
* கௌரவம் (திரைப்படம்) (1973)
* மணிப்பயல் (1973)
* மனிதரில் மாணிக்கம் (1973)
* நல்ல முடிவு (1973)
* பாசதீபம் (1973)
* பொன்னூஞ்சல் (1973)
* பூக்காரி (1973)
என 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.
தமிழ்தாய் வாழ்த்துப்பாடலான ‛நீராரும் கடலுடத்த..' பாடலுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர் எம்.எஸ்.வி. தன் இசையால் தமிழ் இதங்களை வசப்படுத்தி சாதனைகளை கூட நினைவில் வைத்துக் கொள்ளாமல் இந்த உலகை விட்டு மறைந்தார். எனினும் நம் நினைவை விட்டு அகலாமல் என்றும் அவர் நம் இதங்களில் இசையால் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.