மத்திய அரசு விவசாயிகளின் நன்மைக்கு பாடுபடுகிறது: இல.கணேசன் பேட்டி

விவசாயிகளின் நன்மைக்கு மத்தியஅரசு பாடுபடுகிறது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
மத்திய அரசு விவசாயிகளின் நன்மைக்கு பாடுபடுகிறது: இல.கணேசன் பேட்டி
Published on
Updated on
1 min read

விவசாயிகளின் நன்மைக்கு மத்தியஅரசு பாடுபடுகிறது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி மத்தியஅரசுக்கு விவசாயிகளின் நிலை தெரியவில்லை எனக்கூறியுள்ளார். ராகுல்காந்திக்குத் தான் சாதாரண மக்களின்நிலை தெரியாது. ஆனால் பிரதமர் நரேந்திரமோடி மக்களின் நிலை உணர்ந்தவர். மத்தியஅரசு விவசாயிகளின் நன்மைக்காக பாடுபடுகிற அரசாக உள்ளது.

 வாஜ்பாய் அரசு வந்தபோது விவசாயிகளின் வருமானம் உயர்ந்தது. ஆனால் அடுத்து வந்த காங்கிரஸ் அரசால் விவசாயிகளின் வருமானம் மீண்டும் குறைந்தது. விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டார்கள். மேலும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் நேரடியாகவே விவசாயிகள் வேறு தொழிலுக்கு வாருங்கள் என்றார். அதற்கு தற்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்தை லாபகரமான தொழிலாக்குவோம் என்றார்.

சோர்ந்து கிடக்கிற தொண்டர்களை உற்சாகப்படுத்தவே மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்கிறார்கள். அதனை அவர்களும் நம்பவில்லை, தொண்டர்களும் நம்பவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்குவர வாய்ப்பில்லை. ஒரு காலகட்டத்தில் காமராஜர் ஆட்சியமைப்போம் எனக்கூறிய காங்கிரஸ் கட்சி தற்போது ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து துணை அமைச்சர் பதவி கிடைக்குமா என்று பகிரங்கமாக பேசி வருகின்றனர்.

 தமிழகத்தில் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என அறிவிக்கின்றனர். இது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இதனை தமிழக முதல்வர் புரிந்துகொண்டு நாளையே மதுவிலக்கை அமல்படுத்தினால் அதனை நான் மனதார பாராட்டுவேன். பாஜக பூரன மதுவிலக்கை வற்புறுத்துகிறது. அதற்கான போராட்டத்தையும் அறிவிக்க உள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் சேர்ந்து மத்தியஅரசிடம் கலந்துபேசி முல்லைப் பெரியாறை பாதுகாக்க நிரந்தர ஏற்பாட்டை செய்யவேண்டும். தேவைப்பட்டால் முல்லை பெரியாறு அணைக்கு மத்தியஅரசு மூலம் காவல் ஏற்பாடு செய்வது பொறுத்தமானது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com