விருதுநகர் நகராட்சியில் நிதி ஒதுக்கீடு செய்தும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சியில் நூற்றாண்டு விழா நிதியின் பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்கு அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து கடந்தாண்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டது. அதில், பழைய பேருந்து நிலையம் மராமத்து பணிக்கு ரூ.1 கோடியும், ரூ.13.20 கோடி சாலைப்பணிகளுக்காகவும், ரூ.50 லட்சம் நகராட்சி பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி பல்புகளாக மாற்றுவதற்கும், ரூ.5 கோடியில் பெரிய அளவிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், ரூ.2 கோடியில் வர்த்தக வளாகங்கள் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காகவும், நகராட்சி நூற்றாண்டு நினைவு விழா வளைவு அமைக்கு ரூ.70 லட்சமும், நகராட்சி பூங்காவை சீரமைப்புக்கு ரூ.1 கோடியும், நகராட்சியில் 3 முக்கிய பகுதிகளில் நவீன சுகாதார வளாகம் அமைக்க ரூ.60 லட்சம் எனவும் பணிகள் மேற்கொள்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில் நிதி ஒதுக்கீடு வருவதில் தாமதம் போன்ற காரணங்களால் ஒப்பந்தம் விடமுடியாத நிலையிருந்தது. இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நகராட்சி நூற்றாண்டு நிதி முதல்கட்டமாக ரூ.14 கோடி நிதி அரசு ஒதுக்கியது. இதன் மூலம் நகராட்சி பூங்கா, சாலைகள் மற்றும் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தமும் விடப்பட்டது. ஆனால், இதுவரையில் பணிகள் தொடங்கப்படாமலே உள்ளது. இதேபோல், நகராட்சி பகுதியில் பாத்திமா நகர், பழைய பேருந்து நிலையம், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.24 லட்சத்தில் நம்ம டாய்லெட் திட்டம் என்ற நவீன கழிப்பறை வளாகம் அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. அதேபோல், பாதாளச்சாக்கடை திட்டம் விடுபட்ட பகுதிகளில் ரூ.24 லட்சத்தில் மேற்கொள்ளும் பணி, குடிசை மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணி ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குடிமை மேம்பாட்டு திட்ட பயனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நகராட்சி தலைவர் மா.சாந்தி கூறுகையில், நகராட்சி நூற்றாண்டு விழா நிதி திட்டத்தில் ரூ.14 கோடி ஒதுக்கீடு வந்துள்ளது. அதன் மூலம் பூங்கா சீரமைப்பு, சாலை பராமரிப்பு, பழைய பேருந்து நிலையத்தில் மராமத்து பணிகள், குடிநீர் மேல் நிலைத்தொட்டிகள் அமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கி நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.