

நீர் நாய்கள் பாலூட்டி வகையைச் சேர்ந்த, அழிந்து வரும் ஒரு உயிரினமாகும். நீர் நாய்களின் முதன்மையான உணவு மீன்களாகும். மீன்கள் கிடைக்காதபோது நண்டுகள், தவளைகள், எலிகள், நீர்ப்பறவைகள் போன்றவற்றை உணவாக உள்கொள்ளும்.
ஆறு அல்லது நீர்நிலை ஓரங்களில் காணப்படும் பாறை, மரத்தின் வேர் இடுக்குகள், பொந்துகள் ஆகியவற்றில் நீர் நாய்கள் வாழ்கின்றன. நீர் நாய்கள் நீரில் செல்ல ஏதுவாக மெலிந்த நீண்ட உடலையும், பாதங்களில் சவ்வும் பெற்றுள்ளன. வேட்டையாடுவதற்கு ஏதுவாக கூர்மையான பற்களையும், கால் நகங்களையும் கொண்டுள்ளன.
ஓர் ஆண், ஒரு பெண் நீர் நாய் இணைந்து குடும்பமாக வாழும். வேட்டையாடும்போது ஒரு குடும்பம் அல்லது பல குடும்பங்கள் ஒன்றிணைந்து மீன் கூட்டங்களை தாழ்வான பகுதிக்கு விரட்டிச் சென்று வேட்டையாடும். அதீத ஆசை, மனக்கிளர்ச்சியின் காரணமாக தேவைக்கு அதிகமான மீன்களை தலைகளை மட்டும் கடித்துக் கொல்லும். பிறகு நிதானமாக உடலை சாப்பிடும். நீர் நாய்கள் விளையாட்டுத்தனம் மிகுந்த சுறுசுறுப்பான உயிரினமாகும்.
காஞ்சிபுரம், ஜூன் 28: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களைக் கவரும் வகையில், புதிதாக நீர் நாய் அடைப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஒரு பெண், 2 ஆண் நீர் நாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீர் நாய்கள் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து குடும்பமாக வாழும் இயல்பை உடையன.
எனவே, நீர் நாய்களுக்கிடையே மோதலைத் தவிர்க்கும் பொருட்டும், இனவிருத்திக்கான ஒரு குடும்பத்தை உருவாக்கும் வகையிலும், ஒரு ஆண் நீர்நாய்க்காக புதிய அடைப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த அடைப்பிடத்தைப் பார்வையிட சனிக்கிழமை முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அடைப்பிடத்தில், நீர் நாய்களின் இயற்கையான வாழ்விடத்தை ஒத்தவாறு ஒரு நீர்த்தொட்டியும், தொட்டியிலிருந்து மேலே ஏறி வருவதற்கு படிக்கட்டுகளும், பதுங்குவதற்கு 2 குகை அமைப்புகளும், புரண்டு விளையாடுவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் மண் தரையும், குளிர்ந்த நிழலைப் பெற விழலால் கூரையும் அமைக்கப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள் நீர் நாயை 3 திசைகளில் இருந்து பார்க்கும் வகையில், கண்ணாடியாலான தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பார்வையாளர்கள் நீர் நாயின் அனைத்து நகர்வுகளையும் எளிதாகக் கண்டுகளிக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.