விருதுநகர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு விரைவான சேவை கிடைக்கும் வகையில் திருமண உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை இணைய தளம் வழியாக பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
அரசு சமூக நலத்துறையின் மூலம் முதல்வர் ஏழை பெண்களின் திருமணத்திற்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம், ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி, அன்னை தெரசா அம்மையார் ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி, தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி ஆகிய திட்டங்களின் மூலம் நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதில், 10-ம் வகுப்பு, பிளஸ்2 வரையில் படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இதுவரையில் இதற்கான விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஒப்புதல் பெற்று, மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்பி வைத்து, பயனாளிகள் தேர்வு செய்து நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது.
எனவே இனி வரும் காலங்களில் இப்பணிகளை விரைவாக முடிக்கும் வகையிலும், விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு விரைவில் பயன் கிடைக்க மின்னனு முறையில் பணபரிமாற்றம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இணைய தளம் மூலமே பதிவு செய்ய வேண்டும்.இதற்கு பதிவு செய்ய மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நிலவள வங்கிகள், புதுவாழ்வு திட்டம் மூலம் கிராமிய கடன் ஒழிப்பு சங்கம், ஆட்சியர் அலுவலகம் வளாகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பொதுச்சேவை மையங்களில் இதற்கான விண்ணப்பங்களை திருமண நாளில் இருந்து 40 நாள்களுக்கு முன்பாக உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். அப்போது, தங்களுக்கான ஆதார் அடையாள அட்டை எண் இருந்தால் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
இதேபோல்,கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தில் திருமணத்திற்கு பின் 2 ஆண்டுகளுக்குள்ளும், டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார் விதவை மறுமண நிதி உதவி திட்டத்தில் திருமணத்திற்கு பின் 6 மாதங்களுக்குள்ளும் விண்ணப்பித்திருக்க வேண்டும். அதேபோல், திருமணத்தை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்கிற விவரத்தையும் குறிப்பிட வேண்டும் என பயனாளிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.