

விருதுநகர் பகுதியில் அறுவடை வாகனம் கிடைக்காத காரணத்தால் கிடைக்கிற கூலி ஆள்கள் மூலம் மக்காச்சோளம் அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் பகுதியில் வெள்ளூர், ஆமத்தூர், கன்னிசேரி, புதூர், நாராணபுரம், எல்கைபட்டி, சின்னப்பநாயக்கன்பட்டி, செங்கோட்டை, குமாரபுரம், கவுண்டம்பட்டி, குமிழங்குளம், புதுக்கோட்டை, புதுப்பட்டி, சித்தமநாயக்கன்பட்டி, வாடியூர், முதலிபட்டி, புல்லலக்கோட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். தற்போது, நன்றாக விளைந்துள்ளதால் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. அதிலும், ஒரே நேரத்தில் அனைவரும் அறுவடை பணிகளை செய்து வருவதால் அறுவடை வாகனங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் இரவும், பகலும் தொடர்ந்து அறுவடை பணிகளில் வாகனங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
இது குறித்து சத்திரரெட்டிபட்டி விவசாயி சண்முகராஜன் என்பவர் கூறுகையில், மக்காச்சோள பயிர் நன்றாக விளைந்து தட்டை காயந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் மழை பெய்வதற்கு முன்பாக குறிப்பிட்ட நாள்களுக்குள் அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை வாகனங்கள் மூலம் மக்காச்சோள அறுவடை செய்ய ஒரு மணிநேரத்திற்கு ரூ.1500 ஆகிறது. இதற்காக காத்து இருக்க வேண்டிய நிலையுள்ளது. அதற்காக கிடைக்கிற கூலி ஆள்கள் மூலம் கதிர்களை பிரித்து எடுத்து களத்தில் சேர்த்தால் தான் போட்ட முதலை எடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.