காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மையத்தில் போதிய பயிற்றுநர்கள் இல்லாததால் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், ரயில்வே சாலையில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இங்கு தடகள விளையாட்டு மைதானம், கால்பந்து விளையாட்டு மைதானம் ஆகியவை மட்டும் உருவாக்கப்பட்டன.
இப்போது தடகளப் போட்டிகளுக்கான விளையாட்டு மைதானம், கூடைப்பந்து, ஹாக்கி, நீச்சல் குளம், இறகுப் பந்து, கையுந்து பந்து, ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கம் எனப் பல்வேறு விளையாட்டு மைதானங்கள் அமைந்துள்ளன.
இதற்கெல்லாம் மேலாக தற்போது ரூ. 1.5 கோடியில் நவீன உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளது.
மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் என இங்கு தினமும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கான மாணவர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மைதானத்தில் சிறிய மழை பெய்தாலே மைதானத்துக்குள் மழைநீர் தேங்கி விடுகிறது.
தேங்கும் மழை நீர் வடிய ஒரு வாரம் ஆகிவிடுகிறது. இதனால் மழைக் காலத்தில், இந்த மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளின்போது மழை பெய்தால், வேறு இடத்துக்கு விளையாட்டுப் போட்டியை மாற்ற வேண்டிய நிலை உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த 1970-களில் கட்டப்பட்ட கேலரியின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்துவிட்டது.
மேலும் கேலரி முழுவதும் பாளம் பாளமாக விரிசல் ஏற்பட்டு முழுவதும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் பகுதியில் இருந்து விளையாட்டு அரங்குப் பகுதியில் எழுப்பப்பட்ட சுற்றுச் சுவர் ராணுவ வீரர்கள் தேர்வின் போது இடிக்கப்பட்டது.
அதன்பிறகு அந்தச் சுவர் மீண்டும் கட்டப்படவில்லை. அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் பகுதி முழுவதும் இந்த சுற்றுச் சுவர் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில்தான் உள்ளது.
பயிற்றுநர்கள் இல்லை: இந்த விளையாட்டு மையத்தில் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்கு தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, இறகு பந்து,
கையுந்து பந்து, ஹாக்கி, ஸ்குவாஷ், நீச்சல் ஆகிய விளையாட்டுகளில் சிறந்த பயிற்றுநர்கள் இருக்க வேண்டும்.
இவர்கள் மூலம் ஆண்டுக்கு குறைந்தது 100 விளையாட்டு வீரர்களையாவது உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
ஆனால் ஹாக்கி, நீச்சல் தவிர பிற எந்த விளையாட்டுக்கும் பயிற்றுநர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லை.தடகளம், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்குப்
பயிற்சி அளிக்க இருந்த பயிற்றுநர்கள், பதவி உயர்வு, பணியிட மாற்றம் மூலம் வேறு இடத்துக்குச் சென்ற பிறகு அந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதுகுறித்து விளையாட்டு ஆர்வலர்கள் சிலர் கூறியது:
"காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் சிறந்த கால்பந்து மைதானம் உள்ளது. ஆனால் கால்பந்துப் பயிற்றுநர் கிடையாது. இதனால் கால்பந்து மைதானம் வீணாகி வருகிறது.
இதேபோல் கூடைப்பந்து, இறகு பந்து, தடகளம் உள்ளிட்ட பிரிவுகளில் நாம் சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் காண முடியவில்லை.
இதே நிலை நீடித்தால், ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா ஒரு வெண்கலம் வாங்குவதே அரிதாகிவிடும். எனவே அனைத்து விளையாட்டுகளுக்கும் தேர்ச்சி பெற்ற பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.
விளையாட்டு அலுவலர் விளக்கம்: இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் தங்கநாயகி கூறியதாவது:
"பயிற்றுநர்கள் இல்லாத விளையாட்டுப் பிரிவுகளுக்கு பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். இருந்த போதிலும் அந்தந்த விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த, முன்னாள் விளையாட்டு வீரர்கள் மூலம் பயிற்சி அளிக்கிறோம். மேலும் அந்தந்த விளையாட்டுகளுக்குத் தேவையான சாதனங்களை வாங்கி கொடுத்து வருகிறோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.