
துர்நாற்றம் மிகுந்த காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுப் புடவைகளுக்குப் புகழ்பெற்ற நகரமாகவும், நாட்டின் தலைசிறந்த ஆன்மிகச் சுற்றுலா மையமாகவும் காஞ்சிபுரம் திகழ்கிறது. இதனால் காஞ்சிபுரத்துக்கு நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
காஞ்சிபுரத்தை பாரம்பரியம் மிக்க நகரமாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தின் பாரம்பரியத்தைக் காக்கும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் சீர்படுத்தும் வகையிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தகு சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரத்தின் மையப் பகுதியில் கடந்த 1975-ஆம் ஆண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
காஞ்சிபுரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம், செய்யாறு, திருச்சி, சேலம், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, புதுச்சேரி, திருப்பதி, பெங்களூரு, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 1,600-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.
தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இவர்களுக்கு போதிய கழிப்பறை வசதிகள் இருக்கின்றனவா என்று பார்த்தால் வேதனையே மிஞ்சுகிறது. கட்டணமில்லா சிறுநீர்க் கழிப்பிடம் உள்ளே செல்ல முடியாத நிலையில் இருப்பதால், பயணிகள் ஆங்காங்கே திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் அவலம் தொடர்கிறது. இதனால் பேருந்து நிலையம் முழுவதும் பெருத்த துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறியதாவது:
"காஞ்சிபுரம் நகரத்தை பாரம்பரியம் மிக்க நகரமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் காஞ்சிபுரத்துக்கென தனி அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிவித்து கிராமங்கள் தோறும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
மக்களின் சுகாதாரம் சார்ந்த மத்திய அரசின் இந்தத் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் கண்டு கொள்வதில்லை. தூய்மை இந்தியா திட்டத்தில் பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யாவிட்டாலும், பாரம்பரியம் மிக்க நகரம் என்ற அந்தஸ்தைக் காக்கவேனும் பேருந்து நிலையத்தை நகராட்சி சுத்தம் செய்யலாம். இங்கு போதுமான கழிப்பறைகளைக் கட்ட வேண்டும். நவீன குளியலறைகளுடன் கூடிய கழிப்பறைகளை நகராட்சி அமைக்கலாம்.
இதற்கு பேருந்து நிலையத்தில் இடமும் உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக அண்மையில் "நம்ம டாய்லெட்' திட்டத்தை நகராட்சி பல லட்சம் செலவில் ஏற்படுத்தியது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால், மக்கள் வரிப்பணம் பல லட்சம் வீணாகியுள்ளது' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.