இந்தியாவில் 735 பறவை இனங்கள் !

உலகெங்கும் 116 நாடுகளில் பறவை ஆர்வலர்களால் சர்வதேச ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
Updated on
2 min read

உலகெங்கும் 116 நாடுகளில் பறவை ஆர்வலர்களால் சர்வதேச ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் இருந்து 6,952 பேர் பறவைப் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் 735 பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள பறவை ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்பினர் நடத்திய இந்தக் கணக்கெடுப்பில் அதிக அளவிலான பறவை இனங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் 325 பறவை இனங்களுடன் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு நிகழாண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற்றது. அமெரிக்காவில் 1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count - GBBC), இந்தியாவில் முதன் முதலில் 2013-இல்தான் நடத்தப்பட்டது.

இந்தியா முழுவதில் இருந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை ஆர்வலர்கள், பொது மக்கள் பலர் சேர்ந்து சுமார் 3,000 பறவைகளைக் கொண்ட பட்டியல்களை eBird  இணையத்தில் கடந்த ஆண்டு வெளியிட்டார்கள்.

சுமார் 800 வகையான பறவைகள் இந்த நான்கு நாள்களில் பதிவு செய்யப்பட்டன. பறவைப் பட்டியல் வெளியிட்டதில், உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பறவைகள் இனத்தைக் கண்டறிவதில் இந்தியாவில் முதலிடத்தில் கேரளமும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளன. தமிழகத்தில் 605 பறவைகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் ப.ஜெகநாதன் கூறியதாவது:

ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் ஆர்வமுள்ள, சுற்றுச்சூழலில் அக்கறை உள்ள யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். தங்களைச் சுற்றியுள்ள பறவைகளைப் பார்த்து மகிழ்வதுடன், அறிவியல் ஆராய்ச்சிக்கு பங்களிக்கும் வாய்ப்பாக அமையும். இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் எங்கோ வெகுதூரம் சென்று பறவைகளைக் கண்டுகளித்து, கணக்கெடுக்கத் தேவையில்லை. தங்கள் வீடுகளில் இருந்தோ, தங்களது பள்ளி, கல்லூரி வளாகத்தில் இருந்தோ, பூங்கா, ஏரி, குளம் போன்ற பொது இடங்களிலிருந்தோ பறவைகளைக் கவனித்து www.eBird.org என்ற இணையதளத்தில் பட்டியலிடலாம்.

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை உள்ள நாட்டில், ஏராளமானோர் இதைத் தெரிந்துகொண்டு தங்களது பறவைப் பட்டியலை வெளியிடலாம்.

பறவைகள் சூழலியல் சுட்டிக்காட்டிகள்: நாம் வசிக்கும் பகுதியில், அல்லது ஓர் இயற்கையான வாழிடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றைத் தொடர்ந்து நெடுங்காலத்துக்கு கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம்.

அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா என்பதை பறவைகளின் எண்ணிக்கையையும், வகையையும் வைத்து அறிவியலாளர்கள் கணக்கிடுவார்கள்.

பறவைகளைப் பற்றி தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்துவருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும். மேலும், விவரங்களுக்கு http:www.birdcount.in, http:gbbc.birdcount.org, https:uyiri.wordpress.com  என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றார் அவர்.

பொதுப் பறவைகள் !

இந்தியாவில்

1. மைனா

2. காகம்

3. மாடப் புறா

4. கரிச்சான்

5. பச்சைக் கிளி

தமிழகத்தில்

1. ஆந்தை

2. மரங்கொத்தி

3. வெண் கொக்கு

4. மயில்

பறவை இனங்களில் முதல் 10 மாநிலங்கள் !

1. உத்தரகண்ட் 383

2. தமிழ்நாடு 325

3. கர்நாடகம் 322

4. கேரளம் 299

5. கோவா 291

6. மகாராஷ்டிரம் 287

7. மேற்கு வங்கம் 268

8. குஜராத் 219

9. ராஜஸ்தான் 194

10. உத்தரப் பிரதேசம் 194

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com