செயல்படாத குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகளால் ரூ. 85 லட்சம் வீண்

காஞ்சிபுரம் நகராட்சியில் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டம் செயல்படாததால், மக்கள் வரிப்பணம் ரூ.85 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

காஞ்சிபுரம் நகராட்சியில் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டம் செயல்படாததால், மக்கள் வரிப்பணம் ரூ.85 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பாலாற்றில் குடிநீர்த் திட்டம் அமைக்க 1989-ஆம் ஆண்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், ரூ.18.63 கோடி செலவில் திட்டப்பணி தொடங்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பாற்கடல் கிராமத்தில் இப்பணி தொடங்கப்பட்டது.

அங்கு பெரிய மேல்நிலைத் தொட்டி அமைத்து ராட்சதக் குழாய்கள் மூலம் அத்திப்பட்டு, சிறுகரும்பூர், களத்தூர், முசரவாக்கம், மேல் ஒட்டிவாக்கம், மேட்டுக்குப்பம், மேல்கதிர்பூர் வழியாக வேகவதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தேக்கத் தொட்டியில் தண்ணீர் விடப்படுகிறது. இங்கிருந்து காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 75 சதவீத மக்களுக்கு, 1992-ஆம் ஆண்டு முதல் குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் 2003-ஆம் ஆண்டு முதல் இந்த நீரின் சுவை மாறி உவர்ப்பானது.

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மழைக் காலங்களில் பாலாற்றில் திருப்பி விடப்படுவதால் நீரின் சுவை மாறியதாக குடிநீர்த் திட்ட அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து இந்த நீரை சுத்திகரித்து வழங்க நகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, 2013-ஆம் ஆண்டு ஜூலையில் இத் திட்டம் செயல்படத் தொடங்கியது.

கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாட்டால், சுத்திகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதாவது 60 லட்சம் மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரித்தால், அதில் பாதி அளவு தண்ணீர்தான் பயன்படுத்த முடியும்.

இதனால் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகரிக்கும். எனவே இந்தப் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் கூறப்பட்டது.

அதேசமயம் சுத்திகரிப்பின்போது, வீணாகும் தண்ணீரை பூமியில் நேரடியாக விட்டால் நிலத்தடி நீர் மாசடையும். எனவே குழாய் மூலம் கடலிலோ, வேறு வழியிலோ நீரைக் கடத்த வேண்டும் என்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தல் பின்பற்றப்படாததும் காரணமாகக் கூறப்படுகிறது.

திட்டமிடாத செயல்பாட்டால் ரூ. 85 லட்சம் முடங்கிக் கிடக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com