

காலிப் பணியிடங்கள், போதிய பயிற்சியின்மை, நவீனமின்மை, ஊதிய முரண்பாடு போன்ற பிரச்னைகளால் பலவீனமாகக் காட்சியளிக்கும் தீயணைப்புத் துறையை பலப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக தீயணைப்புத் துறையின் கீழ் 306 தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் 6 தீயணைப்பு நிலையங்கள் புதிதாகத் திறக்கப்படுகின்றன. இவற்றில் 300 அதிகாரிகள் உள்பட சுமார் 6,800 தீயணைப்புப் படை வீரர்கள் பணிபுரிகின்றனர்.
தீயணைப்பு நிலையங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 33 ஆயிரம் அவசர அழைப்புகள் வருகின்றன; சுமார் 32 ஆயிரம் தீ விபத்துகள் ஏற்படுகின்றன.
இதில் 31 ஆயிரம் தீ விபத்துக்கள் சிறிய அளவிலான விபத்துக்களாகும். ஆண்டுதோறும் சராசரியாக 30 சதவீத அளவுக்கு தீ விபத்துகள் அதிகரிக்கின்றன.
தீ விபத்துகளின் எண்ணிக்கையும், தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், தீயணைப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை சிறிதளவும் அதிகரிக்கப்படவில்லை. புதிய தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்படும்போது, புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதற்குப் பதிலாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருக்கும் வீரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்படுகின்றனர்.
இதன் விளைவாக அத்துறையில் உள்ள பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு காலியாக இருப்பதாக தீயணைப்புப் படை வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 1,500 தீயணைப்புப் படை வீரர் பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, புதிதாகத் திறக்கப்பட்ட தீயணைப்பு நிலையங்களுக்கும் தேவையான பணியிடங்கள் ஏற்படுத்தப்படாமல் இருப்பதால், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
வேகமாக உயர்ந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக ஓட்டுநர் பணியிடங்கள் 30 சதவீதமும், தீயணைப்புப் படை வீரர்கள் பணியிடங்கள் 25 சதவீதமும் காலியாக இருக்கின்றன.
இதனால், சிறிய விபத்துகள் ஏற்பட்டால் கூட தீயணைப்புப் படை வீரர்கள் திணறி வருவதாகவும், விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள பிற தீயணைப்பு நிலைய வீரர்களை உதவிக்கு அழைப்பதாகவும் அத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
400 ஓட்டுநர் பணியிடங்கள் காலி: மாநிலம் முழுவதும் சுமார் 400 ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், விபத்து ஏற்படும் இடங்களுக்கு 15 நிமிடங்களுக்குள் செல்ல வேண்டும் என்ற இலக்கை பல வேளைகளில் அடைய முடிவதில்லை என சில தீயணைப்புப் படை வீரர்கள் கூறுகின்றனர்.
ஓட்டுநர்கள் பற்றாக்குறையால், பணியில் இருக்கும் ஓட்டுநருக்கு அளவுக்கு அதிகமான பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும்,அவர்களுக்கு விடுமுறை, பதவி உயர்வு ஆகியவை பாரபட்சமாக வழங்கப்படுவதால் அவர்கள் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வருகின்றனர்.
இதன் விளைவாக, எந்த தீயணைப்புப் படை வீரரும், ஓட்டுநர் பணிக்கு வர விரும்புவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஏற்கனவே ஓய்வு பெற்ற 100 ஓட்டுநர்களை மீண்டும் தொகுப்பூதியத்தில் தீயணைப்புத் துறை பணியில் அமர்த்தியுள்ளது.
நவீனமாக்கல் இல்லை: இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வரை குடிசை, வீடுகள், கிடங்குகள், கடைகள் ஆகியவற்றில் அதிகமாக தீ விபத்துகள் ஏற்பட்டன. ஆனால், இப்போது மின்கசிவு, சமையல் எரிவாயு கசிவு, வேதிப் பொருள்கள், வெடிபொருள்கள் ஆகியவற்றால் ஏற்படும் தீ விபத்துகளே அதிகமாக நிகழ்கின்றன. இந்த வகை தீ விபத்துகளே மொத்த தீ விபத்தில் 80 சதவீதமாக இருக்கின்றன. இதில் 50 சதவீத தீ விபத்துகள் மின்கசிவு காரணமாக ஏற்படுகின்றன.
இந்த வகை தீ விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், இவற்றை அணைப்பதற்குரிய எந்த நவீனக் கருவிகளும் இல்லாமல் பெரும்பாலான தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. உதாரணமாக, வளர்ந்த நாடுகளில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள காற்றின் ஈரத்தன்மை, காற்றில் கலந்துள்ள வாயுக்கள், வேதிப் பொருள்கள் ஆகியவற்றை நவீனக் கருவிகள் மூலம் உடனடியாக கணக்கிட்டு, அதற்கு ஏற்றாற்போல தங்களது பணியைச் செய்கின்றனர்.
இதன் விளைவாக, தீ வேகமாக அணைக்கப்படுவதோடு, சேதமும் பெருமளவு குறைக்கப்படுகிறது. ஆனால், நமது தீயணைப்புத் துறை, எந்தத் தீ விபத்தானாலும் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதற்குரிய வசதியை மட்டுமே பெற்றுள்ளன.
தகுந்த நவீனக் கருவிகள் இல்லாததால் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தி அணைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், சில வேளைகளில் பெரும் பொருட்சேதமும், உயிர்ச் சேதமும் தவிர்க்க முடியாதுபோவதாக தீயணைப்புப் படை வீரர்கள் கூறுகின்றனர்.
போதிய பயிற்சி இல்லை: பணியில் சேரும்போது சென்னை தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள பயிற்சி மையத்தில் 3 மாதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் அடிப்படை பயிற்சி எனப்படும் அலுவலகத்தில் ஒருவர் செயல்படுவது குறித்தான பயிற்சியே முக்கியமாக அளிக்கப்படுகிறது.
வீரர்களுக்கு சில மணி நேரமே தீ விபத்தைத் தடுப்பதற்குரிய பயிற்சி அளிக்கப்படும் நிலையில், தீ விபத்துகளுக்கான காரணிகளும், களங்களும் மாறியுள்ள நிலையில், தற்காலத்துக்கு ஏற்றாற்போல புதுப்பிக்கப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை.
கட்டட விபத்துகளில் மனித உயிர்களை மீட்பதற்கு, வளர்ந்த நாடுகளில் உண்மையிலேயே இடிபாடுகளிடையே ஒருவரைச் சிக்க வைத்து, அவரை தீயணைப்புப் படை வீரர் மூலம் மீட்க வைத்து பயிற்சி அளிக்கின்றனர்.
ஆனால், நமது தீயணைப்புத் துறை அத்தகைய பயிற்சியில் இருந்து சுமார் 35 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக தீயணைப்புத் துறை வல்லுநர் தெரிவிக்கிறார்.
இந்தப் பிரச்னைகளைக் களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்புத் துறை பலவீனமாக இருக்கும் பட்சத்தில், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என்பதை நிர்வாகத்தில் உள்ளவர்கள் உணர வேண்டும்.
ஓய்வு பெறும் வரை ஓட்டுநர்
தீயணைப்புத் துறையின் பதவி உயர்வில் உள்ள பிரச்னைகள் காரணமாக அதில் வீரராகப் பணியில் சேருபவர் ஓய்வு பெறும் வரை ஓட்டுநராகப் பணிபுரியும் நிலை நீடிக்கிறது.
தீயணைப்புப் படை வீரராகத் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு முதல் பதவி உயர்வாக முன்னணி தீயணைப்பு வீரர் அல்லது தீயணைப்பு வாகன ஓட்டுநர் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
இதில் தீயணைப்புப் படை வீரர் விருப்பத்தின் அடிப்படையில் முன்னணி தீயணைப்பு வீரராகவோ அல்லது வாகன ஓட்டுநராகவோ பதவி உயர்வு பெறலாம். இதில் முன்னணி தீயணைப்பு வீரராகப் பதவி உயர்வு பெறுகிறவர் நிலைய அலுவலர், உதவிக் கோட்ட அலுவலர், துணைக் கோட்ட அலுவலர் உள்ளிட்ட பதவி உயர்வுகளை அடுத்தடுத்துப் பெறுகின்றனர். ஆனால் ஓட்டுநராகப் பணிபுரிகிறவர் ஓய்வு பெறும் வரை அதே பதவியில் தொடரும் நிலை நீடிக்கிறது.
ஏனெனில், ஓட்டுநர் பதவி உயர்வு பெறும் பட்சத்தில் "மெக்கானிக்' என்ற பணியே வழங்கப்படுகிறது. இந்தப் பணியும் மாவட்டத்துக்கு இரு இடங்களே உள்ளன. மேலும், இந்தப் பணியில், முந்தைய பணியான ஓட்டுநர் பணிக்குரிய ஊதியமே வழங்கப்படுவதால், இந்தப் பணிக்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதன் விளைவாக ஓட்டுநர் பணியில் யாரும் சேருவதில்லை. இதனால், பணியில் இருக்கும் ஓட்டுநர்களுக்கு பணிச்சுமை, வேலைப்பளு ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு, "மெக்கானிக்' பணியிடத்துக்கு அடுத்தபடியாக நிலைய அலுவலர் (போக்குவரத்து) என்ற பதவியை அண்மையில் தீயணைப்புத் துறை உருவாக்கியது. ஆனால் இந்தப் பணியிடமும் போதுமான அளவுக்கு உருவாக்கப்படவில்லை. இதனால், ஓட்டுநர்களின் வேதனை தொடர்கதையாக உள்ளதாக தீயணைப்புப் படை வீரர்கள் கூறுகின்றனர்.
காலிப் பணியிடங்கள் 7 மாதங்களில் நிரப்பப்படும்
தமிழக தீயணைப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் 7 மாதங்களில் நிரப்பப்படும் என அந்தத் துறையின் இயக்குநர் ஏ.டி.ஜி.பி. ஆர்.சி.குடவாலா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:
தீயணைப்புத் துறையில் சுமார் 30 சதவீத இடங்களே காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்னும் 7 மாதங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
ஓட்டுநர் பணியில் உள்ள குளறுபடிகளை நீக்க, தீயணைப்புத் துறையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இனி தேர்வு செய்யப்படும் அனைத்து வீரர்களுக்கும், பயிற்சிக் காலத்திலேயே இலகு ரக, கனரக வாகனம் ஓட்டும் பயிற்சி வழங்கப்பட்டு, உரிமம் வழங்கப்படும்.
இதனால், அனைத்து வீரர்களும் ஓட்டுநராகவும் பயன்படுத்தப்படுவர். ஓட்டுநர் பணியில் நீடித்து வந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்றார் குடவாலா.
ஏற்றம் தராத படித் தொகை
தமிழக தீயணைப்புத் துறையில் தீயணைப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படும் படித் தொகை மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது.
தீயணைப்புத் துறையில் 10 ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்தால் ரூ. 5, பதினைந்து ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்தால் ரூ. 8, இருபது ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்தால் ரூ. 10 படியாக வழங்கப்படுகிறது. ஓட்டுநருக்கு சிறப்புப் படியாக ரூ. 60, அயல் பணிக்கு படியாக ரூ. 60 வழங்கப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகை, இப்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதன் விளைவாக இந்தப் படியைப் பெறுவதற்குக் கூட தீயணைப்பு வீரர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
இனிமேலாவது இந்தப் படியை உயர்த்துவதற்குரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என தீயணைப்புப் படை வீரர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.