ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கோடையில் 45 அடியை எட்டிய வைகை அணை: குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது

வைகை அணையின் நீர்மட்டம் ஐந்தாண்டுகளுக்கு பிறகு கோடைக் காலத்தில் 45 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால்
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கோடையில் 45 அடியை எட்டிய வைகை அணை: குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது
Updated on
2 min read

வைகை அணையின் நீர்மட்டம் ஐந்தாண்டுகளுக்கு பிறகு கோடைக் காலத்தில் 45 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சினை இருக்காது. மேலும் முதல்போக சாகுபடிக்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படும் நிலை உருவாகியுள்ளது.
 தேனி மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களாக போதிய மழை இல்லாததால், அணைகளுக்கு நீர் வரத்து இல்லை. இதனால், கடந்த நான்கு வருடங்களாக வைகை அணை நீர்மட்டம் முழுக் கொள்ளவை எட்டவில்லை.
 கடந்த 2014 ம் ஆண்டு மே 3 ம் தேதி அணையின் நீர் மட்டம் 21 அடியாக குறைந்தது. அதனால் மதுரை மற்றும் ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் விநியோகம் செய்ய முடியவில்லை. அதன் பின் கேரளத்தில் பெய்த மழையால் நீர்வரத்து ஏற்பட்டு குடிநீர் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
 நடப்பாண்டில் மார்ச் மாதம் வைகை அணைக்கு நீர் வரத்து 30 கன அடியாக இருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 35.11 அடியாக இருந்தது. இதனால் மதுரைக்கு விநியோகிக்கப்படும் குடிதண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
 இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத வகையில் கோடைகாலத்தில் தேனி மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மூலவைகை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வியாழக்கிழமை காலை நீர்மட்டம் 45.34 அடியாக உயர்ந்தது. இதனால் நடப்பாண்டில் மதுரை மற்றும் ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு கோடை காலத்தில் ஏற்படவிருந்த குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடிநீருக்காக வைகை அணையில் இருந்து கடந்த ஏப்ரல் 27 ம் தேதி முதல் 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
 முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்: வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு போக மற்றும் இருபோக சாகுபடி பகுதியில் சுமார் 1,50,043 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பாசன பகுதிகளுக்கு 2011 ஆண்டுக்குப் பிறகு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாத நிலை இருந்துவந்தது.
 இந்நிலையில் இந்த ஆண்டு மே மாதம் அணையின் நீர் மட்டம் 45.34 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 624 கன அடியாக உள்ளதால் அணையின் நீர் மட்டம் ஜூன் மாதம் 50 அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயர்ந்தால் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படலாம.
தேனி மாவட்டம் இரண்டாம் இடம்
 தமிழக அளவில் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 590.08 மி.மீ மழை பெய்துள்ளது. தேனி மாவட்டத்தில் 428.63 மி.மீ மழை பெய்து இரண்டாம் இடத்தையும், நீலகிரி மாவட்டத்தில் 380. 14 மி.மீ மழை பெய்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
 கடந்த 5 ஆண்டுகளில் தேனி
 மாவட்டத்தில் பெய்த மழையளவு
 2011 1,124.08 மி.மீட்டர்
 2012 618.20 மி.மீட்டர்
 2013 842.53 மி.மீட்டர்
 2014 1,102.72 மி.மீட்டர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com