திருட்டைத் தடுக்க போலீஸார் படகில் ரோந்து!

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருட்டைத் தடுக்க, சென்னையில் முதல் முறையாக போலீஸார் படகில் ரோந்துப் பணியைத் தொடங்கியுள்ளனர்
திருட்டைத் தடுக்க போலீஸார் படகில் ரோந்து!
Updated on
2 min read

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருட்டைத் தடுக்க, சென்னையில் முதல் முறையாக போலீஸார் படகில் ரோந்துப் பணியைத் தொடங்கியுள்ளனர்.
 தொடர்ந்து பெய்த மழையால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் வரலாறு காணாத பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் அரசால் அமைக்கப்பட்ட தாற்காலிக முகாம்களுக்கு இடம் பெயர்ந்தனர். மேலும், பலர் தங்களது உறவினர்களின் வீடுகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்றனர்.
 இதனால் வெள்ளப் பகுதிகளில் ஒரு சில அடுக்குமாடிக் குடியிருப்புகளைத் தவிர்த்து பெரும்பாலான வீடுகள் ஆள்கள் இல்லாமல் இருந்தன.
 இதற்கிடையே, செவ்வாய்க்கிழமையில் இருந்து மழை குறைந்ததால் வெள்ளத்தின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது. இருப்பினும் தாம்பரம், பெரும்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, கோட்டூர்புரம், மேற்கு சைதாப்பேட்டை, மணப்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தின் அளவு குறையவில்லை. இதனால் மக்கள், தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலை நீடித்தது.
 இதன் விளைவாக ஆள் இல்லாமல் இருக்கும் வீடுகளில் பொருள்கள் திருடப்படுமோ என்ற அச்சநிலை ஏற்பட்டது. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருட்டை தடுக்க போலீஸார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு போலீஸாருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 படகில் ரோந்து: இதையடுத்து, போலீஸார் கூடுதாலாக 350 குழுக்களாக (பீட்) பிரிக்கப்பட்டு, ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கியமாக சென்னையில் முதல்முறையாக புதன்கிழமை இரவு போலீஸார் படகில் ரோந்துச் சென்றனர்.
 வெள்ளம் வடியாமல் இருந்த தாம்பரம், முடிச்சூர், பெரும்பாக்கம்,சிட்கோ நகர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை,மாதவரம் மணலி ஆகிய பகுதிகளில் படகுகளில் ரோந்து சென்றனர். இங்கு சுமார் 200 குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டதாக பெருநகர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
 இதோடு, இந்த ரோந்துப் பணிக்கு 75 படகுகள் புதன்கிழமை இரவு பயன்படுத்தப்பட்டன. இது காவல்துறைக்கு பல்வேறு வகைகளில் சவாலானதாக இருந்ததாகவும் காவலர்கள் தெரிவித்தனர். ரோந்தின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் முழுமையாக தடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
 படகு ரோந்து வியாழக்கிழமை இரவு மாதவரம் பகுதியில் மட்டும் நடைபெற்றது. பிற பகுதிகளில் வெள்ளம் வடிந்துவிட்டதால் படகு ரோந்து நடைபெறவில்லை. மாதவரம் பகுதியில் வியாழக்கிழமை சுமார் 10 படகுகளில் போலீஸார் ரோந்து சென்றனர்.
 தமிழகத்திலேயே வெள்ளக்காலத்தில் இப்போதுதான் சென்னையில் முதல் முறையாக படகு ரோந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என காவல் துறை வட்டாரங்கள் கூறின.
ஒரு படகில் 5 பேர்
 படகு ஓட்டுபவருடன் 4 போலீஸார் என 5 பேர் சென்றுள்ளனர். படகு ரோந்து அனைவருக்கும் புதிது என்பதால், ரோந்து செல்லும் பகுதியைப் பற்றி நன்றாக தெரிந்த போலீஸாரே இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு 75 படகுகளுக்கும் தலா 4 போலீஸார், ஒரு படகு ஓட்டுபவர் என்ற ரீதியில் படகு ரோந்து பணி நடைபெற்றுள்ளது.
 அதோடு அவர்களுக்கு அதிக ஒளியை உமிழக்கூடிய விளக்குகள், உயிர் காப்பு உடை, சிறு மீட்புப் படகு உள்ளிட்ட நவீன கருவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com