
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நெருப்புக்கோழி ஒன்று வெள்ளிக்கிழமை குஞ்சு பொறித்தது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் நெருப்புக்கோழிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) நெருப்புக் கோழி ஒன்று குஞ்சு பொறித்தது. இதையும் சேர்த்து தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் நெருப்புக்கோழிகளின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் பரந்த நிலப்பகுதிகளிலும், சவானா புல்வெளி பகுதிகளிலும் காணப்படும் நெருப்புக்கோழிகள் உயிரியல் பூங்காக்களில் இயற்கையாக அடைக்காத்து குஞ்சு பொறிப்பது அரிதானதாகும். இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் இப்பூங்காவில் பராமரிக்கப்படும் நெருப்புக்கோழிகள் மட்டுமே இயற்கையான முறையில் அடைக்காத்து குஞ்சு பொறிப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆண், பெண் இரண்டும் சேர்ந்தே அடைக்காப்பது, குஞ்சுகளைப் பராமரிப்பது இப்பறவைகளில் காணப்படும் சிறப்பாகும்.
2008-ஆம் ஆண்டு காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் நெருப்புக்கோழிகள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்டன. இந்த 2 நெருப்புக்கோழிகளும் இணை சேர்ந்து முட்டையிட்டு ஐந்து முறை அடைக்காத்து 16 குஞ்சுகளைப் பொறித்துள்ளன. இப்பறவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்வதால் இந்தியாவில் உள்ள இதர பூங்காக்கள் இதைக் காட்சிப்படுத்த மிகவும் ஆர்வம் கொண்டுள்ளன.
இதனால் விலங்குகள் பறிமாற்ற முறையில் இப்பறவையைப் பெறுவதற்கு அதிகப்படியான கோரிக்கைகள் வருகின்றன. இதர பூங்காக்களுக்குக் கொடுப்பதன் மூலம் புதிய உயிரினங்களைப் பெறுவது சாத்தியமாவதுடன் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் உயிரினங்களின் எண்ணிக்கை உயர்வதற்கும் காரணமாகவுள்ளது. இப்பூங்காவிலிருந்து இதுவரை 6 நெருப்புக்கோழிகள், விலங்குகள் பறிமாற்ற முறையில் இதர பூங்காக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, காட்டுக் கழுதை, புருவ கொம்பு மான், சதுப்பு நில மான், கருப்பு அன்னம், நீல மஞ்சள் மக்கா கிளிகள், வல்லாபி மற்றும் தங்க நிறக் கோழிகள் ஆகியன பெறப்பட்டுள்ளன.
நெருப்புக் கோழிகள் குறித்த சிறுகுறிப்பு: நெருப்புக்கோழிகள் பறக்கா பறவைகள் குடும்பத்தை சேர்ந்ததாகும். கிவி, ஈமு,
ரியாஸ், கேஸோவரி போன்ற பறவைகள் நெருப்புக்கோழி பறவை வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பறவைகளிலேயே நெருப்புக்கோழி பல சிறப்புகளைப் பெற்றதாகும். பறவைகளிலேயே நீண்ட கழுத்தும், நீண்ட கால்களையும் உடையது. நிலத்தில் ஒடும் பறவைகளிலேயே மிக வேகமாக மணிக்கு 70 கி.மீ. ஓடக்கூடியது. பறவைகளிலேயே மிகப்பெரிய பறவையான இது, உலகிலேயே மிகப்பெரிய முட்டை இடக்கூடியதாகும். உலகத்திலிருந்து அழிந்து போன மடகாஸ்கரில் வாழ்ந்த யானைப் பறவை, நியுசிலாந்தில் வாழ்ந்த பெரிய மோவா ஆகிய பறவைகள்தான் நெருப்புக்கோழி முட்டைகளைவிட பெரிய முட்டைகள் இடுபவையாக இருந்தன.
சிறப்பான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் சூற்றுச்சூழல் வளமைப்படுத்தும் பணிகள் மூலம் உருவாக்கப்பட்ட இயற்கையையொத்த சூழல் போன்ற காரணங்களால் வண்டலூர் பூங்காவில் நெருப்புக்கோழிகள், முட்டையிட்டு அடைக்காத்து இயற்கையாகக் குஞ்சு பொறிப்பது சாத்தியமாகிறது. சில சமயங்களில் வெளிப்புற ஆபத்து வரும்பொழுது குஞ்சுகளைப் பாதுகாக்க தாய் மற்றும் தந்தை பறவைகள் அங்குமிங்கும் ஓடும்பொழுது குஞ்சுகள் மிதிபட்டு இறந்துவிடுகின்றன. இதுபோன்ற நேர்வுகளில் குஞ்சுகள் உடனடியாகப் பிரிக்கப்பட்டு கைவளர்ப்பு மூலம் அவைகள் வளர்க்கப்படுகின்றன. இதுவரை 11 நெருப்புக்கோழிகள் வெற்றிகரமாகக் கைவளர்ப்பு மூலம் வளர்க்கப்பட்டுள்ளன என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.