அரியலூரில், அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவியை, விடுதியில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் லெட்சுமிரெங்க சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன்(27). திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கரூரில் வசித்து வருகின்றனர்.
மாதவன், அரியலூர் மாவட்டம் குவாகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக, ஜெயங்கொண்டத்தில் தனியாக வீடு எடுத்துத் தங்கி வருகிறார்.
பள்ளி முடிந்து கடந்த புதன்கிழமை ஜெயங்கொண்டம் செல்ல குவாகம் பேருந்து நிலையத்தில் மாதவன் காத்திருந்தார். அப்போது, அதே பள்ளியில் 10ம் வகுப்புப் படிக்கும் மாணவியும், பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்.
அப்போது மாணவியை அழைத்த ஆசிரியர், உனக்கு சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் எனக் கூறி தன்னுடன் ஜெயங்கொண்டம் அழைத்துச் சென்றார்.
அங்கு விடுதியில் அறை எடுத்து அதில் அடைத்து வைத்து இரண்டு நாட்களாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மாணவியைக் காணாததால், பெற்றோர் மாணவியை தேடி வந்தனர். 2 நாள் கழித்து வீட்டுக்கு வந்த மாணவி, பெற்றோரிடம் நடந்த விவரங்களைக் கூறி, பெற்றோர், அரியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, காவல்துறை ஆய்வாளர் ஷர்மிளா வழக்குப் பதிவு செய்து மாதவனை கைது செய்து, அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், மாதவனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.