ப. சிதம்பரமும் ரூ.223 கோடி கருப்புப் பண பரிவர்த்தனையும்!

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி என்பதை நமது வருமான வரித் துறையிடம்தான் கற்றுத் தெளிய வேண்டும் போலிருக்கிறது.
ப. சிதம்பரமும் ரூ.223 கோடி கருப்புப் பண பரிவர்த்தனையும்!
Updated on
5 min read

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி என்பதை நமது வருமான வரித் துறையிடம்தான் கற்றுத் தெளிய வேண்டும் போலிருக்கிறது. ரூ.223 கோடி கருப்புப் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. ரூ.19.22 கோடி வரி ஏய்ப்பு நடந்திருக்கிறது. ஆனால், வருமானவரித் துறை, அத்தனை ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடுகிறது. இதன் பின்னணியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரும் அவரது மகனும் இருந்ததால்தான், வருமானவரித் துறை அதிகாரிகள் வாய்மூடி மெüனியாக இருக்கிறார்களா இல்லை இப்போதைய நிதியமைச்சரும் அதற்குத் துணை போகிறார் என்பதால்தான் மெத்தனமா என்பதுதான் கேள்வி.
 ஜே.டி. குழுமம் என்றொரு நிறுவனம். இந்த நிறுவனம் என்ன செய்கிறது, யாரால் நடத்தப்படுகிறது என்பதெல்லாம் இருக்கட்டும். அந்த நிறுவனம் வாசன் கண் மருத்துவமனைக்கு, ரூ.8.64 கோடியை வட்டியில்லாக் கடனாகக் காசோலை மூலம் அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், கருப்புப் பணமாக ரூ.40 கோடியையும் அதேநாளில் வாசன் கண் மருத்துவமனையின் ஆரம்ப கால நிறுவனரான டாக்டர் ஏ.எம். அருணுக்கு வழங்குகிறது. இங்கிருந்துதான் இந்த மெகா முறைகேடு தொடங்குகிறது.
 ஜே.டி. குழுமம் என்கிற ஏலச்சீட்டு நடத்தும் நிறுவனம், வாசன் கண் மருத்துவமனையின் மூலமாகக் கருப்புப்பணத்தை அன்றைய மத்திய அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்திற்கும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும் மடைமாற்றம் செய்ததா என்பதுதான் இந்தப் பணப் பரிவர்த்தனை எழுப்பும் ஐயப்பாடு. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, ரூ.223 கோடி வாசன் கண் மருத்துவமனைக்கு ஜே.டி. நிறுவனம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாகவும், அவை வருமானவரித் துறையினரிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தனை ஆதாரங்களும், வாசன் கண் மருத்துவமனையின் விசித்திரமான வளர்ச்சியும், வீழ்ச்சியும் ஏன் வருமானவரித் துறையை விசாரணையை முடுக்கிவிடத் தூண்டவில்லை என்பதுதான் கேள்வி.
 முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு வாசன் குழும நிறுவனங்கள் மூலம் ஜே.டி. குழும நிறுவனம் கணக்கில் வராத கருப்புப் பணத்தை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமில்லாததோ, மொட்டைக் கடிதமோ அல்ல. அவருக்கும், அவரது மகனுக்கும் களங்கம் கற்பிப்பதற்காக நாம் பரப்பி வரும் வதந்தியும் அல்ல. அதிரடியான தனது பணியிடமாற்றத்தை எதிர்த்து சென்னை மத்தியப் பகுதி வருமான வரித்துறை ஆணையர் எம்.ஸ்ரீனிவாச ராவ், மத்தியத் தீர்ப்பாயத்தில் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி தாக்கல் செய்துள்ள மனுவில் இதை உறுதிபடக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல தனது பணியிடமாற்றம் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் அவர் குற்றம்சாட்டுகிறார். இதிலிருந்துதான் தொடங்குகிறது நமது புலன்விசாரணையும், தொடர்ந்து கிடைத்த திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல்களும்.
 வருமான வரித்துறை அதிகாரியின் அந்த குற்றச்சாட்டுகள் ஜே.டி. குழும நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலானது. சென்னை மத்தியப் பகுதியின் வருமானவரித் துறை ஆணையராக இருந்த எம். ஸ்ரீனிவாச ராவின் குற்றச்சாட்டின் பின்புலத்தில் எழுப்பப்படுவது.
 வரி ஏய்ப்பு செய்கிறவர்களையும், நிதிமுறைகேட்டில் ஈடுபடுவர்கள் விஷயத்திலும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என உயர் அதிகாரிகள் தெரிவித்த போதிலும், சட்டப்படி நடந்துகொண்டதால் பழிவாங்கும் செயலாகத் தாம் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக ஸ்ரீனிவாச ராவ் தனது மனுவில் தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு அடிபணியாமல் ஜே.டி. குழுமங்களின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்த ராவ், இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
 ஜே.டி. குழும நிறுவனம், வாசன் குழுமத்துக்கு ரூ.100 கோடி வரை கருப்புப் பணம் வழங்கியுள்ளதாகவும், அந்தப் பணம் அவர்கள் சட்டவிரோதமாக நடத்திவந்த ஏலச் சீட்டு நிறுவனத்திலிருந்து தரப்பட்டதாகவும் ராவ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மத்தியத் தீர்ப்பாயத்தில் ராவ் கொடுத்த மனுவின் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது ஜே.டி. குழும நிறுவனம் வாசன் குழுமத்திக்கு கொடுத்த பணம் ரூ.40 கோடியோ அல்லது ரூ.100 கோடியோ அல்ல என்பதும் ரூ.223 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இப்படி கணக்கில் இல்லாமல் கருப்பு பணமாக ரூ.223 கோடி கொடுத்ததற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறையினரிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 பூர்வாங்க விசாரணையில் இந்த உண்மைகள் தெரியவந்ததும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி ஸ்ரீனிவாச ராவின் பணியிட மாற்றத்துக்கு தடை விதித்தது. ஆனால், மத்திய நிதியமைச்சகத்தின் மத்திய நேரடி வரிகள் வாரியம் துரிதமாக செயல்பட்டுத் தடையை ரத்துச் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு அதில் வெற்றியும்பெற்றது.
 சாதாரணமாக முக்கியமான விசாரணைகளில் ஈடுபடும் அதிகாரிகளை காரணகாரியமில்லாமல் பணியிடமாற்றம் செய்வது வழக்கமில்லை. ராவ் வருமானவரித் துறையின் தலைமை ஆணையர் அல்ல, அவர் ஆணையர் அந்தஸ்திலேயே பணியாற்றுகிறார். எனவே அவரைப் பணியிடமாற்றம் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று சப்பைக்கட்டு கட்டி, ஸ்ரீனிவாச ராவின் பணியிட மாற்றத்தை நியாயப்படுத்தியது.
 ஊழல்பேர்வழிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்துவந்த ஸ்ரீனிவசா ராவின் பணியிடமாற்ற வழக்கில் அவருக்கு எதிராக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞரை (சொலிசிட்டர் ஜெனரல்) ஆஜர்படுத்தும் முயற்சியிலும் மத்திய நேரடி வரிகள் வாரியம் இறங்கியது. ரூ.900 கோடி வரி ஏய்ப்புத் தொடர்பான வழக்கில் என்.டி.டி.வி.க்கு எதிராக வழக்குரைஞரை நியமிப்பதில் மத்திய நேரடி வரிகள் வாரியம் எந்த ஆர்வமும் காட்டவில்லை. ஆனால், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட அதிகாரியைப் பணியிட மாற்றம் செய்யும் வழக்கில் அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞரையே ஆஜர்படுத்துகிறது. யாரைக் காப்பாற்றும் முயற்சி இது?
 ஜே.டி. குழுமத்திடமிருந்து கறுப்புப் பணத்தை பெற்ற அரசியல் செல்வாக்குள்ள அந்த நபர் யார்? யாரிடம் போய்ச்சேர்ந்தது கருப்புப் பணம்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நாம் விடை தேடித் தலையைப் பிய்த்துக் கொள்ளத் தேவையில்லை.
 ஸ்ரீனிவாச ராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்தான் அவர் என்பதைத் தனது மனுவில் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் மூன்றில் இரண்டு பங்கு காலத்துக்கு நிதியமைச்சராக இருந்தவர் பழனியப்பன் சிதம்பரம். வருமான வரித்துறையும் இவரது துறையின் கீழ்தான் இருந்தது. அவரால் நியமனம் பெற்ற பலர் இப்போது வருமான வரித்துறையில் உயர் அதிகாரிகளாக உள்ளனர். தங்களது முன்னாள் தலைவர் சிதம்பரத்தின் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் ப. சிதம்பரத்தின் விசுவாசிகள் ராவைப் பழிவாங்க முற்பட்டனர் என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
 வாசன் குழுமத்துக்கு பின்னணியிலிருந்து செயல்பட்டு வருபவர்கள்தான் ப.சிதம்பரமும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும். இந்த ஊழலின் முன்னணிக் கதாநாயகர்கள் அவர்கள் இருவர்தான். அவர்களுக்குப் பின்னால் ஜே.டி.குழுமம், வாசன் குழுமத்தின் டாக்டர் ஏ.எம்.அருண் ஆகியோர் உள்ளனர்.
 ஜே.டி.குழுமத்தின் உரிமையாளர் ஜே.தினகரன். இந்த நிறுவனம் சட்டவிரோதமாக ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதனால் கருப்புப் பணத்தில் புழங்குவதாகவும் கூறப்படுகிறது. அரசியல்வாதிகளின் கருப்புப் பணத்தை கந்து வட்டிக்குக் கொடுத்து ஆதாயம் தேடும் பல நிதி நிறுவனங்கள் செயல்படும் சூழலில், ஜே.டி. குழுமமும் அப்படி செயல்பட்டு வந்ததா என்பது உறுதிபடத் தெரியவில்லை.
 கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜே.டி.குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதாவது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகுதான் இந்த சோதனை நடந்துள்ளது. அதனால்தான் ஜே.டி. குழும நிறுவனத்தின் நிதி மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.டி.குழும நிறுவனத்தின் ஊழல் விவகாரம் தொடர்பாக, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெற்று அதன் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதில் சிக்கிவிடுவாரோ என பயந்துபோன வருமானவரித் துறையில் உயர்பதவிகளில் இருக்கும் சிதம்பரத்தின் விசுவாசிகள், ராவின் பணியிடமாற்றத்துக்கு காரணமாக இருந்துள்ளனர் என்று அவரே தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 வாசன் குழுமத்தின் உண்மையான உரிமையாளர் கார்த்தி சிதம்பரம்தான் என்று ராவ் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். மோரீஷஸ், சிங்கப்பூரிலுள்ள முன்னணி நிறுவனங்களின் துணையுடன் அவர் வாசன் குழுமத்தை வாங்கியதாகவும் ஆனால் உண்மையான உரிமையாளர் யார் எனத் தெரியாமல் இருக்க சில திரைமறைவு வேலைகளில் அவர் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 வாசன் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் முதன் முதலாக 2007-ஆம் ஆண்டு திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. டாக்டர் ஏ.எம்.அருண், அவரது மனைவி மீரா அருண் இருவரும் அந்நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரர்கள். 2008-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி கம்பெனி சட்ட விவகாரங்கள் துறையில் தாக்கல் செய்த அறிக்கையின்படி அருண் மற்றும் அவரது மனைவி மீரா இருவருக்கும் ரூ.100 மதிப்புள்ள பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.100 பிரீமியம் விலையில் 27 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டுள்ளதும், இதே பிரீமியம் மதிப்பில் 3 லட்சம் பங்குகள் வி.துவாரகநாதன் என்பவருக்கு வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதாவது ரூ.100 மதிப்புள்ள பங்கு ரூ.200க்கு வழங்கப்பட்டிருக்கிறது.
 ஆனால், பங்குகளை வாங்கிய 48 மணி நேரத்திலேயே அதாவது அக்டோபர் 30-ம் தேதி துவாரகநாதன் 1.5 லட்சம் பங்குகளை அட்வான்டேஜ் ஸ்டிராட்டஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்துக்கு மாற்றியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பங்கு பங்குகள் அஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்ஸ்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமானது. கார்த்தி சிதம்பரம்தான் இந்த நிறுவனத்தின் மறைமுக முழுஉரிமையாளர் என்று சொல்லப்படுகிறது.
 இந்தப் பங்குப் பரிமாற்றங்கள் நடைபெறும்போது ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தார். கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் 1.5 லட்சம் வாசன் பங்குகளை எந்த பிரீமியமும் இல்லாமலே பெற்றுவிட்டது. ரூ.200க்கு வாங்கப்பட்ட பங்குகள் ரூ.100க்கு அதன் அடிப்படை விலையிலேயே விற்கப்பட்டிருக்கிறது. எதற்காக துவாரகநாதன் 1.5 லட்சம் வாசன் நிறுவனத்தின் பங்குகளை பிரீமியம் விலைக்கு வாங்கி அதைக் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துக்கு பிரீமியம் இல்லாமலே விற்க வேண்டும்? அதன் மூலம் ரூ.1.55 கோடி நஷ்டப்பட வேண்டும்? துவாரகநாதன் மிரட்டப்பட்டாரா? இல்லை, வாசன் கண் மருத்துவமனைதான் நஷ்டப்பட்டு மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டதா? வேடிக்கை என்னவென்றால், அந்தத் காலகட்டத்தில் வாசன் கண் மருத்துவமனை அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது என்பதுதான்.
 வாசன் குழுமத்தின் அசுர வளர்ச்சி!
 வாசன் கண் மருத்துவமனையை டாக்டர் அருண், முதன் முதலாக 2002-ம் ஆண்டு திருச்சியில் தொடங்கினார்.. 2009-2010-ம் ஆண்டு வரை அதன் வளர்ச்சி ஒன்றும் குறிப்பிடத்தக்கதாயில்லை. வாசன் நிறுவனத்தின் விற்றுமுதல் 2008-09-ம் ஆண்டுவரை ரூ.13 கோடியாக மட்டுமே இருந்தது.
 வாசன் நிறுவனத்தின் மீது கார்த்தி சிதம்பரத்தின் பார்வை பட்ட சில நாள்களிலேயே, அதாவது 90 நாள்களிலேயே மோரீஷஸ் நாட்டு தொழிலதிபர் மூலம் ரூ.50 கோடி முதலீடு வாசன் குழுமத்துக்கு கிடைத்தது. அடுத்த 12 மாதங்களில் மேலும் ரூ.50 கோடி அதே தொழிலதிபர் மூலம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வாசன் குழுமத்தின் பதிவு அலுவலகம் திருச்சியிலிருந்து சென்னைக்கு இடம்மாறியது.
 ÷2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த காலத்தில் வாசன் குழும நிறுவனம், தனது முதலீட்டை கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது பங்கு வெளியீடு மூலம் ரூ.230 கோடியும், கடன்கள் மூலம் ரூ.460 கோடியும், திரட்டியுள்ளது. 2009-ம் ஆண்டு ரூ.16 கோடியாக இருந்த விற்று முதல் 2010-11-ல் ரூ.311 கோடியாகவும், 2011-12-ல் ரூ.462 கோடியாகவும், 2012-13-ல் ரூ.604 கோடியாகவும் மளமளவென அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் விற்றுமுதல் ஓராண்டில் 20 மடங்காகவும், 3 ஆண்டுகளில் 38 மடங்காகவும் உயர்ந்தது.
 ÷வாசன் நிறுவனத்துக்கு 2008-ல் 25 கிளைகள் இருந்தன. 2012-13-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 175-க்கு அதிகமாக உயர்ந்துவிட்டது. அதாவது, இந்த நிறுவனத்தின் மருத்துவமனையில் 800 கண் மருத்துவர்களும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த காலத்தையும் வாசன் நிறுவனத்தின் வளர்ச்சியையும் ஒன்றுபடுத்திப் பார்த்தால் சில உண்மைகள் புலப்படும். 2009-ம் ஆண்டு சாதாரணமாக இருந்த வாசன் நிறுவனம் 2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடையும் தறுவாயில் பலகோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்தது எப்படி? வாசன் குழும நிறுவனத்தின் மதிப்பு ரூ.5,500 கோடி இருக்கலாம் என 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றனவே, இது எப்படி சில லட்ச முதலீட்டில் தொடங்கிய நிறுவனத்திற்கு ஏழு ஆண்டுகளில் சாத்தியப்பட்டது?
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com