வாசன் குழுமத்துக்கு 28 கேள்விகள்

"ப.சிதம்பரமும் ரூ.223 கோடி கருப்புப் பணப் பரிவர்த்தனையும்" என்ற தலைப்பில் கடந்த 17-ஆம் தேதி தினமணியில் வெளியான கட்டுரை தொடர்பாக சுட்டுரை தளத்தை அலசியபோது வாசன் குழுமம் இது தொடர்பான தனது நிறுவனத்தின் வர்த்தக முகநூலில் "அனைவரின்
Updated on
3 min read

"ப.சிதம்பரமும் ரூ.223 கோடி கருப்புப் பணப் பரிவர்த்தனையும்" என்ற தலைப்பில் கடந்த 17-ஆம் தேதி தினமணியில் வெளியான கட்டுரை தொடர்பாக சுட்டுரை தளத்தை அலசியபோது வாசன் குழுமம் இது தொடர்பான தனது நிறுவனத்தின் வர்த்தக முகநூலில் "அனைவரின் கவனத்துக்கும்" என்ற தலைப்பில், பத்திரிகைகளில் கட்டுரை வடிவில் வெளிவந்த தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமில்லாதவை, எங்கள் நிறுவனத்தின் புகழைக் கெடுக்கும் வகையில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர, அந்த முகநூலில் வாசன் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நேர்மையானவர்கள் என்றும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்தின் செயல்பாடுகளும் விவரிக்கப்பட்டுள்ளன. மற்றபடி கட்டுரையில் வெளிவைத்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த விளக்கமும் இல்லை.

இதேபோன்ற தகவல்கள் அடங்கிய ஒரு கடிதம் ஆசிரியர், தினமணி என்ற பெயரில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதில், எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையில்லாதது, எங்கள் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கட்டுரை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால், தினமணியில் வெளிவந்துள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலோ விளக்கமோ அளிக்கப்படவில்லை.

கீழ்க்கண்ட கேள்விகளை வாசன் குழுமத்தின் முன் வைக்கிறோம். அதற்கு அவர்கள் பதில் சொல்லட்டும்.

1. ஜே.தினகரன் என்பவர் யார்? ஜே.டி. குழுமத்துக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

2. ஜே.டி. குழுமத்துடன் வாசன் குழுமத்துக்கு உள்ள தொடர்பு என்ன?

3. ஜே.டி. குழுமத்திடமிருந்து வாசன் குழுமம் வட்டியில்லாத கடனாக ரூ.8.56 கோடி வாங்கியது உண்மையா, இல்லையா?

4. வாசன் குழுமத்துக்கு ஜே.டி. குழுமம் வட்டியில்லா கடன் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

5. வாசன் குழுமத்தைச் சேர்ந்த டாக்டர் அருண், கருப்புப் பணமாக கோடிக்கணக்கில் ஜே.டி. குழுமத்திடமிருந்து பெற்றது உண்மையா?

6. கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்கள் நிறுவனத்தில் வருமான வரிச் சோதனை நடந்ததை வாசன் நிறுவனத்திடம் ஜே.டி.குழுமம் தெரிவித்ததா?

7. ஜே.டி. குழும அலுவலகத்தில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது கடந்த 17-ஆம் தேதி கட்டுரை வெளியாகும் வரை வாசன் குழுமத்துக்குத் தெரியாதா?

8. துவாரகநாதன் யார்?

9. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி வாசன் குழுமம் 3 லட்சம் பங்குகளை பிரீமியம் விலையில் துவாரகநாதனுக்கு ஒதுக்கியதா, இல்லையா?

10. பங்குகளை வாங்கிய 48 மணி நேரத்திலேயே ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டும் 1.5 லட்சம் பங்குகளை பிரீமியம் விலை இல்லாமலே கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துக்கு பங்குகளை துவாரகநாதன் மாற்றவில்லையா?

11. வாசன் குழுமத்தின் விற்றுமுதல் குறித்து சிறப்புக் கட்டுரையில் வெளியான தகவல்கள் உண்மைதானா?

12. வாசன் குழுமத்தின் முதலீடு ரூ.16 கோடியிலிருந்து 2010-11-ஆம் ஆண்டில் ரூ.311 கோடியாகவும், 2011-12-ஆம் ஆண்டில் ரூ.462 கோடியாகவும், 2012-13-ஆம் ஆண்டில் ரூ.ரூ.604 கோடியாகவும் அதிகரித்தது எப்படி என்பதை விளக்க முடியுமா?

13. 2013-14-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுக் கணக்குகள் அதற்கான காலம் 2014 செப்டம்பருக்குள் தாக்கல் செய்யப்பட்டதா? இல்லையெனில் எப்போது தாக்கல் செய்யப்பட்டது?

14. 2013-14-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகள் 2014-ஆம் ஆண்டிலேயே தாக்கல் செய்யப்பட்டதா?

15. வருமான வரிக் கணக்குகளை உரிய நேரத்தில் தாக்கல் செய்திருக்கும்பட்சதில் வரவு-செலவுக் கணக்கு தாக்கல் செய்யாமல் இது எப்படி சாத்தியம்?

16. வரிப் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.19.22 கோடியை வாசன் குழுமம் செலுத்தாமல் இருந்தது சரியா?

17. பிடித்தம் செய்யப்பட்ட வரிப் பணத்தை வருமான வரித் துறையிடம் உரிய நேரத்தில் செலுத்தாவிட்டால் அது கடும் குற்றமாக கருதப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது வாசன் குழுமத்தின் டாக்டர் அருணுக்குத் தெரியாதா?

18. வரிப் பணத்தைச் செலுத்தாவிட்டால் வழக்கு போடப்படமாட்டாது என்று தைரியம் கொடுத்தது யார்?

19. பிடித்தம் செய்யப்பட்ட வரிப் பணத்தை தவணை முறையில் செலுத்த அனுமதி கேட்டு மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு கடிதம் எழுத வாசன் குழுமத்துக்கு அறிவுரை கூறியது யார்?

20. வாசன் குழுமத்தின் பிரதிநிதிகள் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவரை சந்தித்தனரா?

21. வாசன் குழுமத்தின் மதிப்பு 100 கோடி டாலர் என 2014-ஆம் ஆண்டு வெளியான தகவல் உண்மையில்லையா?

22. வாசன் குழுமமே 2014-இல் தங்கள் நிறுவனத்தின் மதிப்பு ரூ.7,000 கோடி என சொல்லவில்லையா?

23. பலகோடி மதிப்புள்ள ஒரு நிறுவனம் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட குறைந்த தொகையான வரிப் பணத்தை செலுத்த முடியாமல் போனது எப்படி?

இது தவிர மேலும் சில கேள்விகள் எழுகின்றன.

1. 2015-ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வறிக்கையில் ரூ.2,314 கோடி சொத்து மதிப்புடன் டாக்டர் அருண் பணக்காரர்கள் பட்டியலில் 244-ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லையா?

2. இப்படிப்பட்ட பெரும் பணக்காரர் ஒருவரால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வரிப் பணத்தை செலுத்த முடியாமல் போனது எப்படி?

3. வாசன் குழுமத்துக்கு மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் விநியோகம் செய்பவர்களுக்கு உரிய நேரத்தில் பணம் கொடுக்கப்படுகிறதா?

4. வாசன் குழும நிறுவனம் இப்போது நிதி நெருக்கடி இல்லாமல் பலமாக இருக்கிறதா?

5. கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துக்கு துவாரகநாதன் 1.5 லட்சம் பங்குகளை இடமாற்றம் செய்தது குறித்து அமலாக்கத் துறை வாசன் குழுமத்துக்கும், டாக்டர் அருணுக்கும் நோட்டீஸ் அனுப்பவில்லையா?

மேற்குறிப்பிட்ட எந்தக் கேள்விகளுக்கு வாசன் குழுமம் பதிலளிக்கவில்லை. அவர்கள் இதைப்பற்றி கவலைப்படவில்லையா அல்லது பதிலளிக்க வேண்டாம் என யாராவது அறிவுறுத்தினார்களா?

கட்டுரையில் வெளியான குற்றச்சாட்டுகளை வாசன் குழுமம் மறுக்காமல் இருப்பதிலிருந்து அவற்றை ஒப்புக்கொள்வதாகக் கருதலாமா? குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் வாசன் குழுமம் ஒருவரியில் இவை அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியிருப்பது ஏன்? ஒருவரியில் இப்படி பதில் கூறி தப்பித்துவிடலாம் என நினைக்கிறார்களா?

பிற்சேர்க்கை: கட்டுரையில் வெளியான குற்றச்சாட்டுகளுக்கு ப.சிதம்பரமோ அல்லது அவரது மகன் கார்த்தி சிதம்பரமோ பதிலளிக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. வாசன் குழுமத்தின் ஒருவரி பதில் அவர்கள் சார்பில் வெளியிடப்பட்டது என்றால் மேற்குறிப்பிட்ட கேள்விகள், விமர்சனங்கள் அவர்களுக்கும் பொருந்தும்.

வாசன் குழுமம் அல்லது டாக்டர் அருணுக்கு மேலாக ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் இன்னும் பல கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com