காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் பின்தங்கும் பெண்கள்: புதிய அரசாணை மாற்றப்படுமா?

உதவி ஆய்வாளர் தேர்வில் பெண்களைத் தேர்வு செய்வதற்கு புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையால், பெண்கள் தேர்ச்சி விகிதம்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் பின்தங்கும் பெண்கள்: புதிய அரசாணை மாற்றப்படுமா?
Updated on
2 min read

உதவி ஆய்வாளர் தேர்வில் பெண்களைத் தேர்வு செய்வதற்கு புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையால், பெண்கள் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அந்த புதிய அரசாணையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
 தமிழகக் காவல் துறையில் காலியாக உள்ள 1078 உதவி ஆய்வாளர் காலிப் பணியிடத்துக்கு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மே மாதம் 23-ஆம் தேதி 114 மையங்களில் எழுத்துத் தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வை 1.65 லட்சம் பேர் எழுதினர்.
 இதில், காலியாக உள்ள உதவி ஆய்வாளர் பணியிடங்களில் 20 சதவீதம் அத்துறையைச் சேர்ந்தவர்களும், 30 சதவீதம் பெண்களையும் தேர்வு செய்ய அரசு முடிவு செய்திருந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 15 இடங்களில் உடற் கூறு அளத்தல், உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
 எழுத்துத் தேர்வு வரை பெண்களின் தேர்ச்சி விகிதம் சரியாக இருந்த நிலையில், உடல் தகுதித் தேர்வில் பெருமளவு குறைந்தது. முக்கியமாக 40 பெண்களே உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விளையாட்டு வீராங்கனைகள் ஆவார்கள். இது பெண் தேர்வர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 ஏனெனில், அரசு திட்டமிட்டப்படி காலியாக உள்ள 180 பெண் உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கு, ஒரு பணியிடத்துக்கு இருவர் என்ற ரீதியில் உடல் தகுதித் தேர்வில் 360 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். அப்போதுதான், அதன் பின்னர் நடைபெறும் நேர்முகத் தேர்வில் 180 பேரை தேர்வு செய்ய முடியும்.
 ஆனால் அதற்கு நேர்மாறாக, உடல் தகுதி தேர்வில் மொத்தமே 40 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது பெண் தேர்வர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியிட்ட ஒரு அரசாணையில், பெண் உதவி ஆய்வாளர் தேர்வு முறையில் பின்பற்றப்பட்ட நடைமுறையை மாற்றி உத்தரவிடப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம் என தெரியவந்தது.
 முன்னதாக, 2003 மே 27-இல் வெளியான அரசாணையில், காவல் துறையில் பெண்கள் உடல் திறன் போட்டியில் சரியான மதிப்பெண் பெறவில்லை என்றாலும், அவர்கள் எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு உள்ளிட்ட 3 தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டும். 3 தேர்வுகளிலும் சேர்த்து கிடைக்கும் மொத்த மதிப்பெண்களையே, தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களாக கணக்கிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 பெண்களின் உடல் திறனை மனதில் வைத்து, உடல் திறன் தேர்வில் பெண்கள் தோல்வியடைய நேர்ந்தாலும், பிற தேர்வுகளில் அவர்கள் நன்றாக எழுதியிருந்தால் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அந்த அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டே 2003,2006,2010 ஆண்டுகளில் பெண் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
 புதிய அரசாணை: 13 ஆண்டுகளுக்கு பின்னர், அந்த அரசாணைக்கு பதிலாக 2014 பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் பெண் தேர்வர்கள் கட்டாயமாக உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், அப்போதுதான் அடுத்த கட்ட தேர்வில் பங்கேற்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பெண்களுக்கு நடத்தப்படும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் அல்லது கிரிக்கெட் பந்து எறிதல், 100 மீட்டர் ஓட்டம் அல்லது 200 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் கட்டாயமாக தலா ஒரு நட்சத்திரம் பெற்றால்தான் அந்தத் தேர்வில் தகுதி பெற்றதாக கருத முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தப் புதிய உத்தரவின் விளைவாகவே, பெண் தேர்வர்கள் பெரும்பாலானவர்கள் உடல் தகுதித் தேர்வோடு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், உடல் தகுதித் தேர்வின் விதிமுறைகள் அனைத்தும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருப்பதால், உதவி ஆய்வாளர் தேர்வுக்குத் தயாராகி வரும் இளம் பெண்கள் உடல் தகுதித் தேர்வை தாண்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 இந்த நிலையை மாற்றுவதற்கு ஏற்கெனவே முன்பு இருந்த அரசாணையை, பெண் உதவி ஆய்வாளர்கள் தேர்வு முறையில் பின்பற்ற வேண்டும் அல்லது பெண்கள் உடல் திறனுக்கு ஏற்றார்போல உடல் தகுதித் தேர்வை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே கடந்த தேர்வில் தோல்வியடைந்த பெண் தேர்வர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த நடவடிக்கையை அரசு எடுத்தால்தான், பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com