கொலை வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் நீதிமன்றம் அருகே வெட்டிக் கொலை

கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த இளைஞர், 4 மர்ம நபர்களால் திண்டுக்கல் நீதிமன்றம் அருகே திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த இளைஞர், 4 மர்ம நபர்களால் திண்டுக்கல் நீதிமன்றம் அருகே திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் முருகபவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன். இவரது மகன் ராஜா என்ற ஜேசுராஜ்(32). கடந்த 2014 ஜூன் 26ஆம் தேதி, காந்தி மார்க்கெட் பகுதியில் பொன்னிமாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்த க.ராம்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேசுராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை, திண்டுக்கல் 2ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த சேசுராஜை, 4 பேர் கொண்ட கும்பல் துரத்தியதாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க, நீதிமன்றத்தின் பின்வாசல் பகுதியை நோக்கி சேசுராஜ் ஓடி வந்துள்ளார். ஆனால், அவரை சுற்றி வளைத்த அந்த கும்பல், சராமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர். இதில், பலத்த காயமடைந்த சேசுராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸார், சேசுராஜின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், பழிக்கு பழியாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

ராம்குமார் கொலையில் தொடர்புடைய 3ஆவது நபர் சாவு:

கடந்த 2012ஆம் ஆண்டு கன்னிவாடி பகுதியில் பாப்புராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 9ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ராம்குமார், திண்டுக்கல் காந்திமார்கெட் பகுதியில், கடந்த 2014 ஜூன் 26ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

6 பேரில் ஒருவரான முருகபவனம் பகுதியைச் சேர்ந்த ஜான்பீட்டர், மறுநாளே(ஜூன்.27) நரம்பு அறுப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். மற்றொரு நபரான சிவா என்ற சிவக்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த நிலையில், ராம்குமார் கொலை வழக்கின் 3ஆவது எதிரியான, சேசுராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com