

வாசன் குழுமத்தைத் தொடர்புபடுத்தி "ப.சிதம்பரமும் ரூ. 223 கோடி கருப்புப் பணப் பரிமாற்றமும்' என்ற தலைப்பில் "தினமணி'யில் கடந்த 17, 18, 19 தேதிகளில் வெளியான கட்டுரை தொடர்பாக, ப.சிதம்பரம் 20-ஆம் தேதி ஒரு மறுப்பு வெளியிட்டிருந்தார். அதில், தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுபோலக் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, கட்டுரையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசன் குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு வரி மறுப்பையோ, அது தொடர்பாக "வாசன் குழுமத்துக்கு 28 கேள்விகள்' உள்ளிட்ட கட்டுரையையோ ப.சிதம்பரம் படித்தாரா? இல்லை, படித்திருந்தும் படிக்காதது போல் நடிக்கிறாரா?
பொதுவாக சிதம்பரம் போன்ற அறிவுஜீவிகள், சட்டம் படித்தவர்கள் ஏதாவது கருத்துக் கூறினால் அதை ஆழ்ந்து பரிசீலிக்கத் தேவையிருக்காது. தெளிவாகவும் விவரமாகவும் பதில் அளித்திருப்பார்கள். ஆனால், வாசன் குழும விவகாரம் தொடர்பான அவரது வெற்று அறிக்கையை தூண்டித் துருவிப் பார்க்க வேண்டியுள்ளது.
எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ அந்த நிறுவனத்தில் எந்தத் தொடர்பும் இல்லை; அந்த நிறுவனத்தில் பங்குகளோ முதலீடுகளோ அல்லது பொருளாதார ரீதியிலான பலன்களோ இல்லை என்று மறுப்பு அறிக்கையில் கூறியுள்ள சிதம்பரம், வாசன் குழுமத்தின் பெயரை ஓர் இடத்தில்கூடக் குறிப்பிடவில்லை.
இதில் ஆச்சரியமளிக்கும் செய்தி என்னவெனில், 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாசன் கண் மருத்துவமனையின் 25-ஆவது கிளையை மதுரையில் தொடங்கிவைத்தவர் இதே சிதம்பரம்தான். அதுமட்டுமல்ல, 2011-ஆம் ஆண்டு தமது தொகுதிக்கு உள்பட்ட காரைக்குடியில் வாசன் கண் மருத்துவமனையின் 100-ஆவது கிளைத் திறப்பு விழாவுக்கு அப்போதையை பிரதமர் மன்மோகன் சிங்கையும் தமிழக ஆளுநர் ரோசய்யாவையும் வரவழைத்து, வாசன் நிறுவனத்துக்கு பெருமை தேடித் தந்ததுடன் தன்னையும் கௌரவப்படுத்திக் கொண்டவர் இதே சிதம்பரம்தான். அப்படிப்பட்ட ஒருவர் இப்போது வாசன் குழுமத்தின் பெயரைச் சொல்வதற்கு தயங்குவது ஏன் என்று புரியவில்லை.
தினமணியில் தொடர் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, வாசன் குழுமம், "கட்டுரையில் வெளிவந்த தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமில்லாதவை. எங்கள் குழுமத்தின் புகழைக் கெடுக்கும் வகையில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது' என்று ஒரு சில வரிகளில் மறுப்பு வெளியிட்டுள்ளது. மற்றபடி கட்டுரையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கட்டுரையில் வெளிவந்த தகவல்களுக்கு வாசன் குழுமத்தினர் ஒரு வரியில் மறுப்பு வெளியிட்டுள்ளனர். அதுவே போதும் என ப.சிதம்பரம் நினைத்துவிட்டாரோ என்னவோ?
இதைத் தொடர்ந்து, 20-ஆம் தேதி வெளியான தினமணியில் "வாசன் குழுமத்துக்கு 28 கேள்விகள்' என மற்றொரு கட்டுரை வெளியானது. அதில், வாசன் குழுமத்தினரும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களும் இதற்கு பதில் சொல்லட்டும் என 28 கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் ஒன்று சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடையது.
கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துக்கு துவாரகநாதன் 1.5 லட்சம் பங்குகளை மாற்றம் செய்தது குறித்து, அமலாக்கத் துறை வாசன் குழுமத்துக்கும் டாக்டர் அருணுக்கும் நோட்டீஸ் அனுப்பவில்லையா என்று கேட்கப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டை வாசன் குழுமம் ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. அப்படியிருக்கையில் அந்த நிறுவனம், கட்டுரையில் வெளியான தகவல்கள் ஆதாரம் இல்லாதவை, நிறுவனத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டவை என்று எப்படிக் கூறுகிறது?
இந்தக் கட்டுரைகள் வெளியான சமயத்திலேயே 19-ஆம் தேதி தினமணியில், "பல கோடி ரூபாய் கருப்புப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வாசன் கண் மருத்துவ குழும நிர்வாகிகளுக்கு அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதியே அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளதாக' முதல் பக்கத்தில் செய்தி வெளியானது.
வாசன் குழுமப் பங்குகளை வாங்கிய 48 மணி நேரத்திலேயே துவாரகநாதன் 1.5 லட்சம் பங்குகளை கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு மாற்றம் செய்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் முதலீடு செய்யப்பட்ட பங்குகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்குமாறு கூறியுள்ளது.
இதேபோல, துவாரகநாதனிடம் அவருடைய வருமானம், வங்கிக் கணக்குகள், வருமான வரித் தாக்கல், குடும்ப விவரங்கள், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விவரங்களைத் தெரிவிக்குமாறு அமலாக்கத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பான புலன் விசாரணைகள் நிதி முறைகேடுகள் சட்டத்தின் கீழ் நடைபெறுவதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நெருக்குதலின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையிலேயே புலன் விசாரணை நடைபெறுவதாகவும் அமலாக்கத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் ஒரு விசாரணையை, அடிப்படை ஆதாரமில்லாதது; வேண்டும் என்றே அவதூறு எழுப்பும் வகையிலானது என்று சொல்லிவிட முடியுமா? சிதம்பரம் பதில் அளிக்கட்டும்.
தனது மறுப்பு அறிக்கையில் வாசன் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட விரும்பாத சிதம்பரம், "வாசன் குழுமத்தில் உலகப் புகழ் பெற்ற முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர், இயக்குநர் குழுவிலும் சிறந்த நபர்கள் இடம் பெற்றுள்ளனர்' என்று வக்காலத்து வாங்கியிருக்கிறார். வாசன் குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. எனவே, அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று சிதம்பரம் கூறுகிறார். அப்படியானால் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அமலாக்கத் துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் கேலிக்குரியவை, நகைப்புக்குரியவை என்று சிதம்பரம் சொல்கிறாரா?
கட்டுரை மூலம் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை, விஷமத்தனமானவை என்று முதலில் தெரிவித்த ப.சிதம்பரம், பின்னர் மறுப்பு அறிக்கை வெளியிட்டது ஏன்?
தினமணியில் வெளிவந்த தொடர் கட்டுரை பற்றிய செய்திகள் இதர பத்திரிகைகள், ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. உண்மையை ஆராயாமல் இவை எழுதப்பட்டுள்ளதால் தன்னால் மௌனமாக இருக்க முடியவில்லை என்றும், அவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் தினமணியில் வெளியான தொடர் கட்டுரைகள் பொய்யானவை என்று சொல்ல அவர் முற்படுகிறாரா?
சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையை அடிப்படையாகக் கொண்டவை. தனது பணியிட மாற்றத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ள வருமான வரித் துறை ஆணையர், நீதிமன்றத்தில் அளித்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் கொடுத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தக் கட்டுரை.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், வாசன் குழுமத்தில் சிதம்பரம் குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார். ஜே.டி.குழுமம் வாசன் குழுமத்துக்கு ரூ. 40 கோடியோ அல்லது ரூ. 100 கோடியோ கருப்புப் பணமாகக் கொடுத்திருப்பதாகவும், அவை வருமான வரித் துறை அதிகாரிகள் ஜே.டி.குழுமத்தில் நடத்திய அதிரடிச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நடத்திய மேல் விசாரணையில் ஜே.டி.குழுமம், வாசன் குழுமத்துக்கு கொடுத்த பணம் ரூ. 40 கோடியோ அல்லது ரூ. 100 கோடியோ அல்ல என்பதும் ரூ. 223 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இப்படி ஆதாரத்துடன் வெளியான தொடர் கட்டுரையை பொய்யானது, விஷமத்தனமானது என்று எப்படி சிதம்பரம் சொல்கிறார்?÷
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம் பெற்றவர்கள் அல்லது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனி நபர்கள் மீது புழுதி வாரித் தூற்றும் பிரசாரத்தின் ஒரு பகுதியே இது என்று சிதம்பரம் கூறியிருப்பதை நாம் பொருள்படுத்தத் தேவையில்லை. ஆனால், தனக்கோ அல்லது தனது குடும்பத்துக்கோ வாசன் நிறுவனத்தில் பங்குகளோ, முதலீடோ அல்லது பொருளாதார ரீதியிலான பலனோ இல்லை என்று ப.சிதம்பரம் கூறியிருப்பதைப் புறந்தள்ளிவிட முடியாது.
கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாசன் குழுமத்தின் 1.5 லட்சம் பங்குகளை துவாரகநாதனிடமிருந்து கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி வாங்கியுள்ளது. இது தொடர்பாகத்தான் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அமலாக்கத் துறை புலன் விசாரணை நடத்தி வருகிறது. இது உண்மையா, இல்லையா என்பதை சிதம்பரம்தான் தெரிவிக்க வேண்டும்.
அதை விடுத்து, வாசன் குழுமத்துடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சிதம்பரம் கூறுவதை மழுப்பலான பதிலாகக் கருத முடியுமே தவிர, உண்மையான மறுப்பு அறிக்கையாகக் கருத முடியாது.
ஜே.டி.குழும நிறுவனம் கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை வாசன் குழுமத்துக்குக் கொடுத்துள்ளதாகவும் அந்தப் பணத்தை வாசன் குழுமம் சிதம்பரத்திடம் கொடுத்ததாகவும் ஜே.டி.குழும நிறுவனத்தில் அதிரடிச் சோதனையில் கைப்பற்ற ஆவணங்கள் மூலம் உறுதியாவதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு சிதம்பரம் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகிறார். இந்தக் குற்றச்சாட்டு உண்மையானால், வாசன் குழுமத்துக்கும் சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதும் உண்மையாகிவிடும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் 2014-ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. 2015-ஆம் ஆண்டு ஜூனிலோ அதற்குப் பிறகோ வருமான வரித் துறையோ அல்லது வருமான வரித் துறை அதிகாரிகளோ மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி தனக்கு எந்த விவரமும் தெரியாது என்கிறார் சிதம்பரம். இது சரியான பதில் அல்ல என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மொத்தத்தில் சிதம்பரத்தின் பதில்கள் மழுப்பலாக உள்ளதே தவிர, தினமணியில் தொடர் கட்டுரையாக வெளியான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதாக இல்லை என்பதுதான் உண்மை.
டெய்ல்பீஸ்: வாசன் குழுமத்தின் நிர்வாகக் குழுவில் சிறந்த நபர்களே இயக்குநர்களாக இடம் பெற்றுள்ளனர் என்று ப.சிதம்பரம் சான்றிதழ் அளித்துள்ளார். ஆனால், தினமணி தொடர் கட்டுரைகளில் வெளியான அதிர்ச்சித் தகவல்களை அடுத்து, வாசன் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றிருந்த மூத்த இயக்குநர்களில் ஒருவரும், முருகப்பா குழுமத்தைச் சேர்ந்தவருமான எம்.ஏ.அழகப்பன், தனது இயக்குநர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.